நம்மோடு இருக்கும் கர்த்தரை அறிந்து கொள்வது எப்படி?

 நம்மோடு கூட இருக்கும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை அறிந்து கொள்வது எப்படி ?


திரியேக தேவன் நம்மோடு இருப்பதாக நமக்கு வாக்குத்தத்தம் செய்திருக்கிறார். பழைய உடன்படிக்கையின் காலத்தில் வாழ்ந்த  பரிசுத்தவான்களுக்கு நான் உங்களோடு கூட இருப்பேன். நான் உன்னை விட்டு விலகுவதில்லை உன்னை கை விடுவதில்லை என்றெல்லாம் ஆண்டவர் ஒவ்வொரு நபருக்கும் சொல்லி இருப்பதை நாம் வாசிக்கிறோம். 
(ஆதி 28:15;உபா 31:6,8; யோசு 1:5;)
புது உடன்படிக்கையில் கிறிஸ்துவை விசுவாசித்து பிதாவாகிய தேவனுக்கு பிள்ளைகளான ஒவ்வொருவருக்கும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து கொடுத்த வாக்குத்தத்தம்

(மத்தேயு 28:20 இல்)

நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம்பண்ணுங்கள். இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன் என்றார். ஆமென்.

 அது மாத்திரமல்ல அவருடைய நாமம் இம்மானுயேல். இதன் பொருள் கர்த்தர் நம்மோடுயிருக்கிறார் என நாம் அறிவோம். 

பழைய ஏற்பாட்டில்  அநேக பரிசுத்தவான்களோடு கர்த்தர் இருப்பதை மற்றவர்கள் அறிந்து கொண்டார்கள்.

உதாரணமாக. 

ஆபிரகாம்.
 
அக்காலத்தில் அபிமெலேக்கும் அவன் சேனாதிபதியாகிய பிகோலும் ஆபிரகாமை நோக்கி: நீ செய்கிற காரியங்கள் எல்லாவற்றிலும் தேவன் உன்னுடனே இருக்கிறார்.
(ஆதியாகமம் 21:22)

ஈசாக்

அபிமெலேக்கும் அவன் சேனாதிபதியாகிய பிகோலும் ஈசாக்கை நோக்கி அவர்கள்: நிச்சயமாய் கர்த்தர் உம்மோடேகூட இருக்கிறார் என்று கண்டோம்; ஆகையால் எங்களுக்கும் உமக்கும் ஒரு ஆணை ஏற்பாடு உண்டாகவேண்டும் என்று நாங்கள் நிர்ணயம் பண்ணினோம்.
(ஆதியாகமம் 26:28)

அதேபோல் யோசேப்பு, தானியேல், பல தீர்க்கதரிசிகள் கூட கர்த்தர் இருப்பதை அநேக இராஜாக்கள் சாட்சி சொல்வதை வேதத்தில் பார்க்க முடிகிறது. 
(ஆதி 41:38; தானி 4:8,)

அதேபோல் புது உடன்படிக்கையின் கிறிஸ்தவர்கள், சுவிசேஷத்தின் மூலமாக கிறிஸ்துவை விசுவாசித்து பிதாவுக்கு பிள்ளைகளான போது அப்பா, பிதாவே! என்று கூப்பிடத்தக்கதாக  பிதாவாகிய தேவன் தம்முடைய குமாரன் இயேசு கிறிஸ்துவின் ஆவியை நம்முடைய இருதயங்களில் பிரவேசிக்க பண்ணினார் என கலாத்தியர் 4:6 இல் வாசிக்கிறோம்.  
அப்பா பிள்ளை என்கிற உறவு நிரந்தரமானது.

இயேசு கிறிஸ்து பிதா தம்மோடு கூட இருப்பதை இந்த உலகத்துக்கு வெளிப்படுத்தினார். 

சீஷர்கள் கிறிஸ்து தம்மோடு கூட இருப்பதை இந்த உலகத்துக்கு வெளிப்படுத்தினார்கள். 

ஆனால் தற்காலத்தில் இந்த 
2025 ஆம் ஆண்டில் 8ஆம் மாதத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிற ஒவ்வொரு கிறிஸ்தவர்களும் இயேசு கிறிஸ்துவை நம் மூலமாக
 ஜனங்கள் அறிந்து கொள்கிறார்களா ? 
நமது மூலமாக அவர்கள் விடுவிக்கப்படுகிறார்களா ?
அல்லது இரட்சிக்கப்படுகிறார்களா ?
நமது மூலமாக அற்புதங்கள் அடையாளங்கள் நடக்கிறதா ?
கிறிஸ்துவை இந்த உலகம் நம் மூலமாக கண்டுகொள்கிறதா ?

இந்தக் கேள்வியை நான் எனக்கு நானே கேட்டுக் கொண்டேன்.
என்னோடு ஆண்டவர் இருக்கிறார் என்று சொல்லுகிற ஒவ்வொரு கிறிஸ்தவர்களும் நிச்சயமாக நீங்கள் சிந்திக்க வேண்டும். 

உங்களோடு கிறிஸ்து இருந்தால் உங்கள் மூலமாக அவர் செய்கிற காரியங்கள் என்ன ?

உங்களை குறித்து மற்றவர்கள் என்ன சாட்சி சொல்லுகிறார்கள் ?

பேய் பிசாசுகள் ஓடுகிறது என்று சொல்லாதீர்கள் அது எல்லா இடத்திலும் ஓடுகிறது. 

எல்லா இடத்திலும் நடக்காத அற்புத அடையாளங்கள் உங்கள் திருச்சபைகளில் நடக்கிறதா ? உங்கள் ஊழியங்களில் நடக்கிறதா ?

ஆகையால் நம்முடைய ஊழியங்களில் இயேசு கிறிஸ்துவை வெளிப்படுத்துவதற்கு ஒரே வழி அவர் மேல் நாம் வைக்கிற நம்பிக்கையை மாத்திரமல்ல அவரை விசுவாசிப்பதே ஆகும். 


மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; நான் என் பிதாவினிடத்திற்குப் போகிறபடியினால், என்னை விசுவாசிக்கிறவன் நான் செய்கிற கிரியைகளைத் தானும் செய்வான், இவைகளைப்பார்க்கிலும் பெரிய கிரியைகளையும் செய்வான்.

நீங்கள் என் நாமத்தினாலே எதைக் கேட்பீர்களோ, குமாரனில் பிதா மகிமைப்படும்படியாக, அதைச் செய்வேன்.

என் நாமத்தினாலே நீங்கள் எதைக்கேட்டாலும் அதை நான் செய்வேன்.

(யோவான் 14:12-14)
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமென் இன்றைய உயர்ந்த முத்துக்கள். கிறிஸ்துவின் பணியில் சகோதரன் சிலுவை ராஜா


Comments

Anonymous said…
Aman

Popular posts from this blog

பிரபல ஊழியர்களை தேடி....

மற்றவர்களை பார்க்க வேண்டாம்.

திருச்சபை