விசுவாசம் இல்லாமல்
விசுவாசமில்லாமல் தேவனுக்கு பிரியமாயிருப்பது....
(எபி. 11:6)
விசுவாசமில்லாமல் தேவனுக்கு பிரியமாயிருப்பது கூடாத காரியம். ஏனென்றால் தேவனிடத்தில் சேருகிறவன் அவர் உண்டென்றும், தம்மை தேடுகிறவர்களுக்கு பலன் அளிக்கிறவர் என்றும் விசுவாசிக்க வேண்டும். என்று நாம் வாசிக்கிறோம். (எபி. 11:6)
மதம் எப்போதுமே தேவனை பிரியப்படுத்த அதை செய்ய வேண்டும் என்றும், இதை செய்ய வேண்டும் என்றும், அதை செய்யக் கூடாது என்றும், இதை செய்ய கூடாது என்றும் சொல்லிக்கொண்டு இருக்கும்.
மனிதன் எதை செய்தாலும், செய்யாவிட்டாலும் அவன் தன்னுடைய புண்ணியக்காரியங்களால் தேவனை பிரியப்படுத்த முடியாது.
ஏனென்றால் ஏசாயா தீர்க்கதரிசி செல்கிறார். நாங்கள் அனைவரும் தீட்டானவர்கள் போல இருக்கிறோம். எங்களுடைய நீதிகளெல்லாம் அழுக்கான கந்தை போல் இருக்கிறது என்கிறார். (ஏசா. 64:6)
மனிதன் நன்மையும் தீமையும் நிறைந்தவன். (ஆதி 2:9)
கெட்ட மனுஷன் என்று பெயர் எடுத்தவனுக்குள்ளும் சில நல்ல குணங்கள் உண்டென்பதை நாமறிவோம். (லூக் 18:2-5)
அது போல, நல்ல மனுஷன் என்று பெயர் எடுத்தவனுக்குள்ளும் சில கெட்ட குணங்கள் இருப்பதையும் நாமறிவோம்.
(உதாரணமாக எசேக்கியா ராஜா 2 நாளா 32:25; 33:3)
விலக்கப்பட்ட விருட்சமாகிய நன்மை, தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியை ஏதேன் அவன் தோட்டத்தில் புசித்ததினால், ( ஆதி 3:11)
மனுஷனுக்குள் நல்ல குணங்களும், கெட்ட குணங்களும் காணப்படுகிறது. (ஆதி 3:22)
மனுஷனுடைய கெட்ட குணங்கள் அவனை இரட்சிக்காது என்பது கெட்ட குணத்தை வெளிப்படுத்துகிற மனிதனுக்கே தெரியும்.
கெட்ட குணம் இரட்சிக்காது என்றால் மீதியிருப்பது நல்ல குணம்.
இந்த நல்ல குணங்கள் தங்களை இரட்சிக்கும் என்பதுவே மதம் சொல்லிக் கொடுக்கும் வழிமுறை.
மதம் மனிதனை நல்லவனாக்க மத போதனைகளை கொடுக்கிறது .
இந்த நல்ல குணங்களை குறித்து தான் ஏசாயா தீர்க்கதரிசி எங்களுடைய நீதி என்று குறிப்பிடுகிறார்.
நம்முடைய நற்குணங்கள் நம்மை நரகத்தில் இருந்து இரட்சிக்குமானால்,
நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து கெத்சமனே முதல், கொல்கதாவில் ஜீவன் விடும் வரையிலும் பயங்கரமான பாடுகளின் வழியே கடந்து போக வேண்டிய அவசியம் இருந்திருக்காது.
இயேசு கிறிஸ்துவே நம்முடைய நீதி என்று அறிவிக்க பட வேண்டிய அவசியமும் இருந்திருக்காது. (எரே. 23:6, 1.கொரி.1:31)
மனுஷனுக்குள் இருக்கும் நீதி எனப்படும் நற்குணங்கள் பரலோக தகுதி இல்லை என்பதினால் தான்,
பிதாவாகிய தேவன் தம்முடைய குமாரனையே நீதியில்லாத நமக்கு நீதியாக தந்தருளினார்.
ஏனென்றால் மனிதன் முழுவதும் நஷ்டப்பட்டு போனவன்.
எனவே பரலோகம் அங்கீகரிக்கும் எந்த தூய்மையும் மனிதனுக்குள் இல்லாத படியினால் தான்.
பிதாவாகிய தேவன் தம்முடைய குமாரனை நமக்கு பதிலாக முப்பத்தி மூன்றரை வருடம் இவ்வுலகத்தில் தூய்மையாக வாழ வைத்து,
அவர் வாழ்ந்த அந்த தூய்மையான வாழ்க்கையை விசுவாசிப்பவர்களுக்கு இலவசமாக அளித்து,
இலவசமான கிருபையினால் அவர்களை நீதிமான்களாக்குகிறார்.
எனவே தான் மனிதனுடைய கிரியைகள் தேவனை பிரியப்படுத்த போதுமானதல்ல, என்று அப்போஸ்தலன் கூறுகிறார்.
அப்போஸ்தலனாகிய பவுலும் (பிலி. 3:9.ல்) நியாயபிரமாணத்தினால் வருகிற சுய நீதியை உடையவனாயிராமல், கிறிஸ்துவை பற்றும் விசுவாசத்தால் வருகிறதும், விசுவாச மூலமாய் தேவனால் உண்டாயிருக்கிறதுமான நீதியை உடையவனாக இருக்க வேண்டும் என்ற தனது வாஞ்சையை வெளிப்படுத்துகிறார்.
ஏனென்றால் ஏசாயா
சொன்னது போல , நியாயபிரமாணத்தினால் வருகிற சுயநீதி அழுக்கான கந்தை என பவுலும் நன்றாக அறிந்திருந்தார்.
எனவே தேவனை பிரியப்படுத்த நாம் நமது சுயநீதியாகிய அழுக்கான கந்தையை சாராமல்,
பவுலைப்போல, விசுவாச மூலமாய் தேவனால் உண்டாயிருக்கிற நீதியை நாம் நாடும் போதும், தேடும் போதும்,
நாம் தேவனுக்கு பிரியமானவர்களாய் மாறுகிறோம்.
விசுவாசம் என்பது நம்முடைய கிரியையை சார்ந்ததல்ல,
நம்முடைய பிரதிநிதியாகிய இயேசு கிறிஸ்துவின் முப்பத்தி மூன்றரை வருட குற்றமற்ற தூய்மையான வாழ்க்கையில் இருந்தும்,
அவருடைய பாடுகளிலிருந்தும் , மரணத்திலிருந்தும் , அவர் அடைந்த வேதனையிலிருந்தும், உயிர்த்தெழுதலில் இருந்தும்,
நமக்காக சம்பாதிக்கப்பட்ட நீதியே விசுவாசத்தினால் வருகிற நீதி. (பிலி. 3:9)
நாம் நம்முடைய கிரியைகளையல்ல, அவருடைய கிரியைகளை சார்ந்து கொள்ளும் போது மாத்திரமே, தேவனுக்கு பிரியமானவர்களாக மாறுகிறோம். ஆமென்.
எனவே அவருடைய கிரியைகளை நாம் விசுவாசிப்போம், தேவனுக்கு பிரியமானவர்களாய் காணப்படுவோம்.
தொடர்ந்து வேத வசனங்களை தியானியுங்கள் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமென்.
சகோதரன் சிலுவை ராஜா.
Comments