மாயை பாராதே
மாயை பாராதபடிக்கு நீர் என் கண்களை விலக்கி உமது வழிகளில் என்னை உயிர்ப்பியும்*
(சங்கீதம் 119:37)
--------------------------------------------------------
மேற்கண்ட வார்த்தைகள் சங்கீதக்காரனின் உள்ளம் கனிந்த ஜெபத்தின் வார்த்தைகள் ஆகும். மகா ஞானியான ஆகூர் என்பவர் "மாயை எனக்கு தூரப்படுத்தும்" (நீதி 30:8) என்று உள்ளமுருகி மன்றாடினார். அந்த தேவ பக்தர்களின் ஆசையும், ஆவலும், தாகமுமே நம்முடைய ஏக்கமும், வாஞ்சையுமாக இருக்கட்டும்.
உலகத்தில் மாயையை பற்றி கொண்டு அதை பின் தொடர்பவர்களுக்கு ஏற்படக்கூடிய ஒரு கொடிய ஆபத்தை குறித்து யோனா தீர்க்கன் "வீணான மாயை பற்றிக் கொள்கிறவர்கள் தங்களுக்கு வரும் கிருபையை போக்கடிக்கிறார்கள்,
(யோனா 2:8) எத்தனை பரிதாபகரமான காரியம் பாருங்கள் ! கர்த்தர் நமக்கு அளிக்கக்கூடிய மேலான கிருபைகளை நாம் போக்கடித்தால் நம்முடைய நிலை என்னவாகும் ! ஷணப்பொழுதில் நாம் அதமாகி போய் விடுவோம் அல்லவா ? உலகம் அளிக்கக்கூடிய மண், பெண், பொன் போன்ற நிலையற்ற மாயையை நாம் நாடித் தேடி அவற்றில் நம்முடைய பற்று, பாசத்தை வைப்போமானால் தேவன் நமக்கு அளிக்க காத்திருக்கும் பரலோக கிருபைகளை மாத்திரம் அல்ல, அவற்றை ஈவாக அளிக்கும் ஆண்டவரேயே நாம் துரத்தி அடித்து விரட்டி விடுகின்றோம் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளல் வேண்டும்.
இந்த உலகத்தில் வெகு திரனான மக்கள் இந்த வையகம் அளிக்கும் மாயையின் அற்ப சுக இன்பத்தை சதமாகக் கொண்டு அதையே தஞ்சம் என்று தங்கள் மார்போடு அணைத்து பிடித்துக் கொண்டு இருக்கின்றனர். உலகத்தில் நாம் காணும், மற்றும் அனுபவிக்கும் அனைத்து இன்பங்களும், உலகம் அளிக்கும் எல்லா சந்தோஷங்களும் அநித்தியமானது, கண் இமைக்கும் நேரத்தில் மாயமாய் மறைந்து போகக்கூடியது என்று சொன்னால் அம்மக்கள் நம்மையே ஏற இறங்க பார்க்கின்றனர். ஆம் ஏதாகிலும் பித்தம் சிரசுக்கு ஏறிப் பிதற்றுகின்றானா ? என்று சந்தேக கண்களுடன் நம்மை பார்க்கின்றனர். அந்த மக்களுக்காக நாம் பரிதவிப்பதை தவிர வேறு ஒன்றும் செய்ய முடியாது.
இதையொட்டி எனக்கு ஒரு சம்பவம் நினைவுக்கு வருகின்றது. சில ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு தமிழ் தினசரியில் "கொக்கு வேட்டைக்குச் சென்ற நீதிபதி குளத்தில் மூழ்கி சாவு" என்று தலைப்பிட்டு ஒரு சோகமான செய்தி எழுதியிருந்தது. முதலாவது அந்த கற்றறிந்த மேதாவியான நீதிபதி தான் இருக்க வேண்டிய மேலான ஸ்தானத்தை விட்டு விட்டு அசுத்தம் நிறைந்த குளத்தை நோக்கி செல்கின்றார். குளத்திற்கு அவர் ஏன் செல்ல வேண்டும் ? கொக்கு வேட்டையாடவும், வேட்டையாடின கொக்குகளை சமையல் செய்து புசிக்கவும் செல்கின்றார். கொக்கின் மாம்சம் அந்த நீதிபதிக்கு மிகவும் விருப்பமாய் இருந்திருக்கின்றது. கொக்கு எத்தனை ஆசுத்தமான பறவை என்பதை நான் அறிவேன். கொக்குகளோடும் அதன் குஞ்சுகளோடும் என் சிறுபிராய நாட்களில் எனக்கு பழக்கம் உண்டு. தவளைகள், பூச்சிப் புழுக்கள், நண்டுகள், நத்தைகள் சிறிய பாம்பு குஞ்சுகள் போன்றவற்றை உணவாகக் கொண்டுள்ள அந்த கொக்குகளில் உடலில் இருந்து ஒரு வித நெடி வீசும். அதை சாப்பிட யாராலும் முடியாது. ஆனால் ஆச்சரியமான காரியம் அந்த நாற்றப் பறவையின் மாமிசம் அந்த நீதிபதிக்கு மிகவும் பிடித்திருக்கின்றது. என்ன நடக்கின்றது என்று பாருங்கள். குளத்திலே நீதிபதி கொக்கை பார்க்கின்றார். அவர் உள்ளம் சந்தோஷத்தால் நிரம்புகின்றது. தன்னுடைய துப்பாக்கியால் நன்கு குறி வைத்து அதனை சுடுகின்றார். சற்றும் குறி தவறாமல் குண்டு கொக்கில்பட்டு அது துடி துடித்து அப்பால் வீழ்கின்றது. நீதிபதியின் மகிழ்ச்சி எல்லை தாண்டி செல்கின்றது. அவருடைய இன்ப நினைவுகள் அடிபட்ட அந்த கொக்கினை அன்று இரவில் பக்குவமாய் தன் வாய்க்கு மதுரமாக உணவாக்கி கொடுக்கப் போகும் தன்னுடைய அன்பு மனைவியின் பேரிலும், சமையல் அறையின் பாலும் சென்று திரும்புகின்றது. அடிபட்டு வீழ்ந்த கொக்கினை எடுத்து வர முன் நோக்கி சென்ற அந்த நீதிபதி குளத்தில் உள்ள ஒரு ஆழமான குழியில் மூழ்கி சாகின்றார். நீதிபதி கொக்கை பார்த்தார் அதனை குறி தவறாமல் சுட்டு வீழ்த்தி மட்டற்ற ஆனந்தம் கொண்டார். அவருக்கு கிடைத்தது அவ்வளவுதான். ஆனால் அவரால் அதை எடுத்து வந்து உணவாக மாற்றி அருந்த இயலவில்லை. மாயையின் காரியங்கள் எல்லாம் இதுவேதான். சத்ருவாகிய பிசாசு மாயை என்ற கொக்கை நீதிபதிக்கு காண்பிக்கின்றான். அந்த மாயை என்ற கொக்கை அவருக்கு காட்டி அப்படியே அவருடைய உயிரையும் கணப் பொழுதில் பறித்துக் கொண்டு விடுகின்றான்.
இஸ்ரவேல் மக்கள் வனாந்தரத்திலே இறைச்சி என்ற மாயையை மோசேயிடத்தில் கேட்கின்றார்கள். அதற்காக அவனிடம் முறுமுறுக்கவும் செய்கின்றார்கள். கடைசியாக மாயை என்ற இறைச்சி மேலே குறிப்பிட்ட நீதிபதிக்கு கொக்கு கிடைத்தது போலக் கிடைத்தது. ஆனால் அந்த இறைச்சி அவர்களின் பற்களுக்கு நடுவே இருக்கும் போதே கர்த்தருடைய கோபம் அந்த இஸ்ரவேல் மக்கள் மேல் மூண்டு அவர்களை நிக்கிரகம் பண்ணுவதை நாம் காணலாம். யூதாசுக்கு 30 வெள்ளி காசுகளை காட்டியும், ஆகானுக்கு பாபிலோனிய சால்வை, 50 சேக்கல் நிறையான பொன் பாளம், 200 சேக்கல் நிறை வெள்ளியை காட்டியும், கேயாசிக்கு ஒரு தாலந்து வெள்ளி 2 மாற்று வஸ்திரங்களை காட்டியும், தேமாவுக்கு இந்த மாயப் பிரபஞ்சத்தைக் காட்டியும் அவர்கள் ஜீவனை நஷ்டப்படுத்தினான்.
உலகின் மாயையை தன் கரத்தில் வைத்து கவர்ச்சியாக காண்பித்து விலையேறப் பெற்ற ஜீவனை பறிப்பதே சத்துருவாகிய வலுசர்ப்பத்தின் பழம் பெறும் கலையாகும். அந்த கலை அழகை தேவ மைந்தனிடத்திலும் அவருடைய ஊழிய ஆரம்ப காலத்தில் 40 நாள் உபவாசத்தின் போது வனாந்தரத்தில் வைத்து தந்திரமாக காட்டிப் பார்த்தான். ஆனால் அவனுடைய மாயாஜாலம் சிலுவை நாதரிடத்தில் செல்லுபடியாகவில்லை. அல்லேலூயா.
உலக மாயையான காரியங்களுக்கு விலகி இருங்கள் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்.
கிறிஸ்துவின் பணியில்
சகோதரன்
சிலுவை ராஜா
தொடர்புக்கு
9841711591.
Comments