திருச்சபை எடுத்துக் கொள்ளப்படுதல்
சபை எடுத்துக் கொள்ளப்படுதல்.
1 தெசலோனிக்கேயர் 4:16-17
ஏனெனில், கர்த்தர் தாமே ஆரவாரத்தோடும், பிரதானதூதனுடைய சத்தத்தோடும், தேவ எக்காளத்தோடும் வானத்திலிருந்து இறங்கிவருவார்; அப்பொழுது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள்.
பின்பு, உயிரோடிருக்கும் நாமும் கர்த்தருக்கு எதிர்கொண்டுபோக, மேகங்கள்மேல் அவர்களோடேகூட ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு, இவ்விதமாய் எப்பொழுதும் கர்த்தருடனேகூட இருப்போம்.
'ராப்சு' என்னும் லத்தீன் சொல்லில் இருந்து 'ராப்சர்'என்னும் சொல் பெறப்பட்டுள்ளது. இதன் பொருள் "எடுத்துக் கொள்ளப்படுதல்"அல்லது
'பிடித்தெடுக்கப்படுதல்'என்பதாகும். இந்த லத்தீன் சொல் கிரேக்க மொழியில் 'ஹார்ப்பாஸோ 'என்னும் சொல்லுக்கு சமமானது. இதன் பொருள் எடுத்துக் கொள்ளப்படுவது என்பதாகும். (1தெச 4:17). இங்கு குறிப்பிட்டுள்ள நிகழ்ச்சியும், இந்தப் பூமியிலிருந்து சபையானது வானத்தில் வந்து கொண்டிருக்கும் ஆண்டவருக்கு எதிர்கொண்டு போக "எடுத்துக்கொள்ளப்படுவதை"குறைக்கின்றது. கிறிஸ்துவின் திருச்சபைகளில் உள்ள உண்மையான விசுவாசிகள் மட்டுமே இவ்வாறு எடுத்துக் கொள்ளப்படுவார்கள்.
1) தமது சபையைச் சேர்த்துக் கொள்வதற்காகக் கிறிஸ்து பரலோகத்திலிருந்து இறங்கி வந்து கொண்டிருக்கும்போது,
கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது உயிர்த்தெழுவார்கள்.
(1தெச 4:16) வெளி 20:4 ல் சொல்லப்பட்டிருக்கும் உயிர்த்தெழுதலும் இதுவும் ஒன்றல்ல வெளி 20: 4ல் கூறியுள்ள உயிர்த்தெழுதல் கிறிஸ்து இந்த உலகத்துக்கு வந்த பின்னர் நடைபெறும். கிறிஸ்து அக்கிரமக்காரர்களை அழித்து, சாத்தானைக் கட்டி செயலிழக்கச் செய்த பின்னரே இது நடக்கும். (வெளி 19:11; 20:3)வெளி 20:4ல் சொல்லப்பட்டிருக்கும் உயிர்த்தெழுதல் மகா உபத்திரவ காலத்தில் இரத்த சாட்சிகளாய் மரித்துப் போனவர்களும், பழைய ஏற்பாட்டு பக்திமான்களையும் குறிக்கும்.(வெளி 20:6;)
2) கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் உயிர்த்தெழும் அதே வேளையில், உயிரோடு வாழ்ந்து கொண்டிருக்கும் விசுவாசிகள் மறுரூபப்படுத்தப்படுவார்கள். அவர்களுடைய சரீரங்கள் அழிவில்லாமைக்குரிய நிலையை அடையும்.(1 கொரி 15:51,53;) இது ஒரு கண் இமைக்கும் நேரத்திற்குள் நடந்து முடிந்து விடும் (1கொரி 15:52).
3) உயிர்த்தெழுந்த விசுவாசிகளும், மறுரூபமாக்கப்பட்ட விசுவாசிகளும், நடு வானத்துக்கு எடுத்துக் கொள்ளப்படுவார்கள். வானத்துக்கும் பூமிக்கும் நடுவில், நடுவானத்தில் அவர்கள் கிறிஸ்துவைச் சந்திக்கும்படி எடுத்துக் கொள்ளப்படுவார்கள்.
4) நாம் பார்க்கும் படியாகவே அவர்கள் கிறிஸ்துவுடன் சேர்ந்து (1தெச 4:16,17;) பரலோகத்தில் பிதாவின் வீட்டுக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள்.
(யோவா 14:2,3)
5) அவர்கள் எல்லாத் துன்பங்களிலிருந்தும் விடுவிக்கப்படுவார்கள்.
(2கொரி 5:2,4; பிலி 3:21)
எல்லா வகையான ஒடுக்குதல்களிலிருந்தும், நெருக்குதல்களிலிருந்தும் விடுதலை அடைவார்கள்.
(வெளி 3:10) மரணத்திலிருந்தும், பாவ பிடிகள் அனைத்திலிருந்தும் விடுதலை அடைவார்கள்.
(1கொரி 15:51-56) இவ்வாறு எடுத்துக் கொள்ளப்படுதல் வரப்போகும் தேவ கோபாக்கினையிலிருந்து அவர்களை விடுவித்து விடுகிறது.(1தெச 1:10; 5:9) அதாவது மகா உபத்திரவ காலத்திலிருந்து விடுதலை பெறுவார்கள்.
6) நம்முடைய இரட்சகர் மிக விரைவில் திரும்பி வந்து நம்மை இந்த உலகத்திலிருந்து எடுத்துக்கொண்டு, தம்மோடு என்றென்றும் இருக்கும்படியாக அழைத்துச் செல்வார் என்பது நம்முடைய ஆசீர்வதிக்கப்பட்ட நம்பிக்கையாகும். (1தெச 4:17) மீட்கப்பட்ட யாவருடைய நம்பிக்கையும் இதுவே. (தீத் 2:13) துன்பப்படும் விசுவாசிகளுக்கு ஆறுதல் அளிக்கும் ஒரு முக்கிய செய்தி இதுவாகும். (1தெச 4:17,18; 5:10).
7)1தெச 4:17 ம் வசனத்தில் பவுல் "நாம்"என்று எழுதுகிறான். தன்னுடைய ஆயுட்காலத்திலேயே கிறிஸ்துவின் வருகை இருக்கலாம் என்று அவன் எதிர்பார்த்து இருக்கிறான். அவன் தன்னுடைய இந்த நம்பிக்கையை அப்படியே தன் கடிதம் மூலம் தெசலோனிக்கே திருச்சபைக்கு அறிவித்தான். நமது ஆண்டவரின் வருகைக்காகத் திருச்சபையானது ஆவலுடன் தொடர்ச்சியாக எதிர்பார்த்துக் காத்திருக்க வேண்டும் என்று பரிசுத்த வேதாகமம் வலியுறுத்துகிறது. இன்றைய விசுவாசிகள் விழிப்புடனும், நம்பிக்கையுடனும், கிறிஸ்துவின் வருகைக்காகக் காத்திருக்க வேண்டும். கிறிஸ்து வந்து அவர்களை தம்மோடு எடுத்துக் கொள்வார். (ரோமர் 13:11; 1கொரி 7:29; 10:11; 15:51-52 பிலி4:5).
8) கிறிஸ்துவுக்கு உண்மையற்றதாகவும், தங்கள் தீய வழிகளிலிருந்து திரும்பாததுமான திருச்சபைகளின் ஒரு பகுதியினர் கைவிடப்படுவார்கள்.(மத் 25:1; லூக் 12:45;) விசுவாசத்தை மறுதலிக்கும் சபையினராகப் பின் தங்குவார்கள்.(வெளி 17:1) இந்த சபை தேவனுடைய கோப ஆக்கினைக்கென்று வைக்கப்பட்டிருக்கும்.
9)'எடுத்துக்கொள்ளப்படுதல்'நடந்த பின் கர்த்தருடைய நாள் வருகிறது. அது தேவனற்றவர்களுக்கும் தேவ கோபாகினியையும், துன்பத்தையும், தண்டனையையும் கொண்டு வரும் நாளாகும். (1தெச 5:2-10; 5:2) இதைத் தொடர்ந்து கிறிஸ்துவின் இரண்டாம் வருகையின் இரண்டாம் நிலை நடைபெறும். அப்பொழுது அவர் வந்து அக்கிரமக்காரர்களையும், பாவிகளை அழித்துவிட்டு, பூமியை அரசாளுவார்.(மத் 24:42,44)
வேதத்தின் துணை கொண்டு வாசிப்போம். பிழைகளை வேத வசன ஆதாரத்தோடு தெரியப்படுத்துவோம்.
எல்லாருடைய கருத்துக்களையும் வரவேற்கிறேன். வீண் விவாத காரியங்களை வெறுக்கிறேன். தொடர்ந்து வாசியுங்கள் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார். ஆமென்.
கிறிஸ்துவின் பணியில் சகோதரன்:சிலுவை ராஜா
Comments