தேவனுடைய வார்த்தைகள்
தேவனுடைய வார்த்தைகள் உன் இருதயத்தில் இருக்கக்
கடவது. (உபா 6:6)
தேவன் தமது மக்களின் இருதயத்தில் தமது வார்த்தைகள் உறுதியாக இருக்க வேண்டுமென்பது தேவனுடைய ஆசை.
(சங் 119:11,ஏரே 31:33)
அப்போஸ்தலனாகிய பவுல் வெளிப்படையாக இப்படிக் கூறுகிறான். "கிறிஸ்துவின் வசனம் உங்களுக்குள்ளே சகல ஞானத்தோடும் பரிபூரணமாக வாசமாயிருப்பதாக"
(கொலே 3:16; 2தீமோ 3:15-17)
தினமும் நாம் வேதத்தில் தியானமாயிருக்கும்போது இது சாத்தியமாகும்.
(சங் 119:97-100; யோவா 8:31,32); இதற்கு ஒரு அணுகுமுறை புதிய ஏற்பாட்டை முழுவதுமாக ஒரு வருடத்தில் இரண்டு முறை படித்து முடித்தல். பழைய ஏற்பாட்டை வருடம் ஒருமுறை வாசித்தால் ஆகும்.
(ஏசா 29:11-13;யாக் 1:21);
*நீ (உன் இருதயத்தில் வைத்திருக்கிற வசனத்தை) அவைகளை உன் பிள்ளைகளுக்கு கருத்தாய் போதித்து...*
தேவன் மீது நமது அன்பை வெளிப்படுத்துவதற்கு ஒரு அடையாளம். (உபா 6:5) நமது பிள்ளைகளின் ஆவிக்குரிய வளர்ச்சிக்கு அக்கறை உள்ளவர்களாக இருப்பது அவர்கள் தேவன் மீது சரியான அன்புறவு கொள்ளச் செய்வது ஆகும்.
1) பிள்ளைகளை தேவனுக்குப் பிரியமான வழிகளில் நடத்துவது பெற்றோரின் மிக முக்கியமான கடமையாகும்.
(சங் 103:13;லூக் 1:17;2தீமோ 3:3)
2) தகப்பனும் தாயும் இணைந்து, பிள்ளைகளுக்குக் கொடுக்கும் ஆவிக்குரிய போதனையே வீட்டில் மையமாக இருக்க வேண்டும். வீட்டில் குடும்ப ஜெபம் மற்றும் ஆராதனை நடத்துவது என்பது அவரவர் விருப்பப்படியான காரியம் அல்ல, அது ஆண்டவரிடமிருந்து வரும் நேரடியான கட்டளையாகும்.
(உபா 6:7-9;21:18;யாத் 20:12;
லேவி 20:9;நீதி1:8;6:20;2தீமோ 1:5)
3) பெற்றோர் பிள்ளைகளுக்கு ஆவிக்குரிய உபதேசம் கொடுப்பதன் நோக்கம், அவர்கள் தேவனுக்குப் பயப்படக் கற்றுக் கொள்ள வேண்டும், அவர்கள் தேவனுடைய வழிகளில் நடக்க வேண்டும், தேவனை நேசிக்க வேண்டும், தேவனைப் போற்றி புகழ வேண்டும். தங்கள் முழு இருதயத்தோடும் முழு ஆத்துமாவோடும் தேவனுக்கு ஊழியம் செய்ய வேண்டும் என்பதாகும். (உபா 10:12;எபே 6:4).
4) விசுவாசிகள் தங்கள் பிள்ளைகளுக்கு கடவுளை மையமாகக் கொண்டு கல்வியைப் புகட்ட வேண்டும். அதில் எல்லா காரியங்களும் தேவனோடும், அவருடைய வழிகளோடும் தொடர்புடையவை என்பது போதிக்கப்பட வேண்டும்.
(உபா 4:9;11:19;32:46;ஆதி 18:19;
யாத்10:2;12:26,27;13:14;ஏசா 38:19;).
*நம் மகன் அல்லது மகளின் கன்னித்தன்மை.*
(உபா 22:17)
ஒரு இஸ்ரவேலரின் பெண் திருமணத்தின் போது பரிசுத்தமானவளாகவும், கன்னித்தன்மையை இழக்காதவளாகவும் இருக்க வேண்டியது மிகவும் முக்கியம். இதற்குரிய முக்கிய பொறுப்பு அவளது, அவனுடைய பெற்றோரையே சேரும் .(உபா 22:15) அது போலவே, கிறிஸ்துவப் பெற்றோர்கள் தங்கள் குமாரத்திகளைக் கற்புடனும், பரிசுத்ததுடனும் காத்துக் கொள்ள வேண்டிய பொறுப்பை உடையவர்களாக இருக்கிறார்கள். தங்கள் குமாரர்களையும் அப்படியே வளர்க்க வேண்டும். அவர்கள் திருமணத்திற்கு முன்பு யாருடனும் பாலுறவு கொள்ளக்கூடாது. உடலுறவு சம்பந்தப்பட்ட காரியங்களில் பரிசுத்தமாகவும், கற்புடனும் இருக்க வேண்டிய அவசியத்தை அவர்களுக்குப் புரியச் செய்வது தேவபக்தியுள்ளவர்களாகவும், ஒழுக்க நெறி தவறாதவர்களாகவும் வளரும்படி வழி நடத்த வேண்டும்.
எனவே வேத வசனத்தை பெற்றோர்கள் தொடர்ந்து வாசித்து அதை பிள்ளைகளுக்கும் கற்றுக் கொடுக்க நேரத்தை செலவழிக்க வேண்டும். பிள்ளைகளுடன் வசனத்தை சொல்லிக் கொடுக்கவும் அதன்படி வாழவும் அதன்படி ஜெபிக்கவும் ஒவ்வொரு நாளும் பயிற்சி கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும்.
சில நூதனமான போதனைகள் கிறிஸ்துவ மீடியாக்களில், மற்றும் யூடியூப் சேனல்களில் தொடர்ந்து வாலிப பிள்ளைகளை உற்சாகப்படுத்தும் விதத்தில் பாவத்தில் வீழ்த்தக்கூடிய வார்த்தைகள் பயன்படுத்தப்படுகிறது.
சில பிரபல ஊழியர்கள் வாலிப பிள்ளைகளுக்கு காதல் திருமணம் தவறல்ல நாம் யாரை காதலிக்கிறோமோ அவர்களையே திருமணம் செய்து கொள்ள வேண்டும். நானும் காதலித்து தான் திருமணம் செய்து கொண்டேன் என்று சாட்சி சொல்லி அநேக வாலிப பெண் பிள்ளைகளையும், ஆண் பிள்ளைகளையும் பாவத்தில் வீழ்த்தி விடுகிறார்கள்.
இதற்கு ஆதாரமாக யாக்கோபு ராகேலை காதலித்து திருமணம் செய்து கொண்டான் என்றும் போதிக்கிறார்கள்.
நன்றாக நீங்கள் கவனிக்க வேண்டும்.
ராகேலை காதலித்து திருமணம் செய்வது தேவனுடைய சித்தம் அல்ல
லேயாளே தேவனுடைய சித்தம்
ஏனென்றால் லேயாள் வயிற்றிலே ஒரு யூதா பிறந்தான். (ஆதி29:31)அந்த யூதாவின் வம்சத்திலே நம்முடைய இரட்சகராகிய இயேசு கிறிஸ்து வந்தார். என்பதை கவனிக்க வேண்டும். (மத் 1:3,16)
காதல் திருமணம் பாவமல்ல என்று சொல்லும்
உபதேசத்தினால் சபைக்குள்ளும் காதல் திருமணங்கள் செய்கிறார்கள், இது தேவனுடைய பார்வையில் அருவருப்பு, தாங்கள் காதல் திருமணம் செய்வது மாத்திரமல்ல மற்றவர்களையும் அதில் விழத் தள்ளுகிறார்களே ஆகையால் பெற்றோர்களே வசனத்தை தெளிவாக பிள்ளைகளுக்கு கற்றுக் கொடுங்கள். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார் ஆமென்.
கிறிஸ்துவின் பணியில்
சகோதரன்
சிலுவை ராஜா
Comments