தேவனுடைய சித்தம்.

 தேவனுடைய சித்தம்.


கர்த்தரோ அவரை நொறுக்கச்சித்தமாகி, அவரைப் பாடுபடுத்தினார்;* அவருடைய ஆத்துமா தன்னைக் குற்றநிவாரணபலியாக ஒப்புக்கொடுக்கும்போது, ​​அவர் தமது சந்ததியைக் கண்டு, நீடித்த நாளாயிருப்பார், *கர்த்தருக்குச் சித்தமானது அவர் கையால் வாய்க்கும்.*

(ஏசாயா 53:10)


*தேவனுடைய சித்தத்துக்கு

விளக்கம்.*

பரிசுத்த வேதமானது தேவ சித்தத்தை மூன்று கோணங்களில் விளக்குகின்றது. 

1) சில பகுதிகளில் "தேவ சித்தம்" என்பது "தேவனுடைய கற்பனை" என்பதன் மறுபக்கமாக இருக்கின்றது. உதாரணமாக 

சங்கீதம் 40:8ல் "உமது கற்பனை" என்பதனால் "உமது சித்தம்"என்பதற்கு இணையாக்குகின்றார். அதுபோலவே அப்போஸ்தலனாகிய பவுலும் தேவனுடைய கற்பனையை உணர்தல் என்பது தேவனுடைய சித்தத்தை உணர்தல் எனும் நிலையுடன் இணைத்துப் பேசுகின்றான்.

(ரோம 2:17-18). வேறு விதத்தில் கூறினால் நாம் நடக்க வேண்டிய வழியை தேவன் தமது கற்பனையின் மூலம் கூறுவதால் அதுவே தேவ சித்தம் என்பதில் தவறில்லை. "கற்பனை" என்பது நமக்குக் கூறப்படும் தேவ ஆலோசனையாகும். இது முழு தேவ வார்த்தைகளையும் குறிப்பிடுகின்றது. 


2) தேவன் வெளிப்படையாக விரும்புவற்றையும் "தேவ சித்தம்"எனலாம். இது தேவனுடைய "பரிபூரண சித்தம்"எனவும் கூறப்படும். எல்லாரும் இரட்சிக்கப்பட வேண்டுமென்பது தேவனுடையது வெளியரங்கமான சித்தமாகும். (1தீமோ 2:4; 2பேது 3:9). மட்டுமின்றி இரட்சிக்கப்பட்ட எந்த விசுவாசியும் கிருபையினின்று விழாக்கூடாது என்பது அவரது சித்தமாகும். 

(யோவான் 6:39) இதனால் எல்லாரும் இரட்சிக்கப்படுவார்கள் என்பது அர்த்தமல்ல. மாறாக தேவன் அனைவருடைய இரட்சிப்பையும் விரும்புகிறார். 


3) இறுதியாக "தேவ சித்தம்"

என்பது தேவன் குறிப்பிட்ட வகையில் விரும்பாவிட்டாலும் நடைபெறும் படி அனுமதிக்கும் செயல்பாடுகளையும் குறிப்பிடுகிறது. இதனை "அனுமதிக்கப்பட்ட தேவ சித்தம்" எனலாம். உலகில் நடக்கும் பல செயல்கள் தேவ சித்தத்துக்கு எதிரானவையே. 

(பாவம், இச்சை, மூர்க்கவெறி, பகை, வன்முறை, கடின உள்ளம்) ஆயினும் இத்தீமைகளைச் சில காலம் தொடர்வதற்கு தேவன் அனுமதித்துள்ளார். இரட்சிக்கப்படாமல் வாழ்ந்து நித்தியத்தை இழந்து போவதை பல மனிதர்கள் தேர்ந்தெடுக்கின்றனர். இதனையும் தேவன் அனுமதிக்கின்றார். ஏனெனில் இரட்சிக்கப்பட்ட ஒருவரையும் தேவன் கட்டாயப்படுத்துவதில்லை. அதுபோலவே மனித வாழ்வில் வருகின்ற கஷ்டங்கள், துன்பங்கள் இவற்றை தேவன் அனுமதிக்கின்றார் .(1பேது 3:17;4:19) ஆனால் இவைதான் தேவனுடைய விருப்பமோ அவரது இறுதிவரையுள்ள அவருடைய சித்தமோ அல்ல.

(1யோவா 5:19)


*தேவ சித்தத்திற்குக் கீழ்ப்படிதல்.*


பரிசுத்த வேதம் கூறும் "தேவ சித்தம்" என்பது வெறும் உபதேசமல்ல.

ஒவ்வொரு நாளும் விசுவாசிகள் நடக்க வேண்டிய வழியில் அது குறிக்கின்றது. 


1) முதலாவது தேவசித்தம் என்பதை நாம் கற்றுக் கொள்ள வேண்டும். அதாவது தேவனுடைய பரிபூரண சித்தம் வேதத்தில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. 

(அவரது கற்பனையும் கூட) நாம் வாழும் நாட்கள் பொல்லாதவைகளாக இருப்பதால் "தேவனுடைய சித்தம்" எதுவென்று அறிந்து கொள்ளுதல் அவசியம். 

(எபே 5:17)


2) வெளிப்படுத்தப்பட்ட தேவ சித்தத்தை விசுவாசிகளாக நாம் அறிந்து, நாம் எப்படி வாழ வேண்டும் என்று தேவன் எதிர்பார்க்கிறார் எனக் கற்றவுடன் அதனைச் நம்மை அர்ப்பணிக்க வேண்டும். "உமது சித்தத்தை செய்ய" எனக்குப் போதித்தருளும் என சங்கீதக்காரன் தேவனிடம் ஜெபிக்கிறான். (சங் 143:10)

"நீதியின் பாதையிலே என்னை நடத்தும்" எனவும் அதற்கு இணையாகக் கூறுகின்றான். இது நல்வழியில் நடப்பதற்குத் தேவ பெலன் தேவை என்பதை வலியுறுத்துகின்றது. வேசி மார்க்கத்துக்கு விலகிப் பரிசுத்தமாக வாழ்வதின் மூலம் தேவ சித்தத்தைப் பின்பற்றும்படி தெசலோனிக்கேய சபையாருக்குப் பவுல் புத்தி கூறுகின்றான்.(1தெச 4:3-4)

மட்டுமின்றி "கர்த்தருக்குப் பிரியமுண்டாக அவருக்கு பாத்திரதாய் நடந்து கொள்ளும்படி" கிறிஸ்தவர்கள் "அவருடைய சித்தத்தை அறியும் அறிவினாலே நிரப்பப்பட வேண்டும். வேண்டுமென்று "பவுல் விண்ணப்பம் பண்ணுகிறான்.(கொலோ 1:9-10)


3) தேவனுடைய சித்தம் செய்யப்படுவதற்கு விசுவாசிகள் ஜெபிக்கும்படி அழைக்கப்படுகிறார்கள். 

(மத் 6:10;26:42; லூக்கா 11:2;ரோம 15:30-32;யாக் 4:13-15)

நமது வாழ்விலும், நமது குடும்பத்திலும் தேவனுடைய பரிபூரண சித்தத்தை நாடி, அதனை செயல்படுத்தி வாழ வேண்டும். 

(மத் 6:10) இதுவே நமது ஜெபமாகவும் தீர்மானமாகவும் இருக்குமானால் நமது நிகழ்காலம், வருங்காலம் யாவும் நமது பரலோக பிதாவின் பாதுகாப்புக்குள் இருக்கிறது என்ற நிச்சயத்துடன் வாழலாம். 

(அப் 18:21; 1கொரி 4:19; 16:7)

எனினும் நமது வாழ்வில் வேண்டுமென்றே செய்யப்படும் பாவங்களும், தேவனுக்கு விரோதமான கலகங்களும் உண்டாயிருந்தால் தேவன் நமது ஜெபத்துக்கு பதில் கொடுங்கள் மாட்டார். நாம் தேவ சித்தத்தை நமது வாழ்வில் செய்யும் வரை "தேவனுடைய சித்தம் பரலோகத்தில் செய்யப்படுவது போல பூலோகத்திலேயே செய்யப்பட முடியாது".


4) இறுதியாக, பாவத்துக்கும், தீமைக்கும், ஆவிக்குரிய வெதுவெதுப்புக்கும் எதிராக நாம் நிற்பதைத் தவிர்த்துக் கண்டும் காணாமல் வாழ்வதற்கு, ஒரு சாக்கு போக்கிற்காக தேவ சித்தத்தைத் தவறாகப் பயன்படுத்தக் கூடாது. கொடுமை, அக்கிரமம், அநீதி நிறைந்த இந்த காலத்துக்கு சாத்தான் தான் காரணமே தவிர தேவனல்ல.(1யோவா 5:19)

உலகில் காணப்படும் அதிகமான வேதனைக்கும், துன்பத்துக்கும் சாத்தானே காரணமானவன். (யோபு 1:6-12; 2: 1-6; லூக் 13:16; 2கொரி 12:7).

பிசாசுனுடைய கிரியைகளை அழிக்கும்படிக்கு தேவகுமாரன் இயேசு கிறிஸ்து வந்தது போலவே 

(1யோவா 3:8) பரிசுத்த ஆவியின் பெலத்தினாலும் வான மண்டலத்திலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனையுடன் விசுவாசிகள் போர் புரிய வேண்டும் என்பதே. தேவசித்தமாகும்.

(எபே 6:10-20;1தெச 5:8)

தேவனுடைய சித்தத்தையும், அதன் விளக்கத்தையும் நாம் பார்த்தோம். அது தருகிற ஆலோசனையையும் நாம் வாசித்திருக்கிறோம். 

இதை வாசித்து அறிவை பெருக்கிக் கொள்வதற்கு அல்ல தேவ சித்தத்தை செய்வதற்கு மாத்திரமே. கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமென். 

கிறிஸ்துவின் பணியில் 

சகோதரன் சிலுவை ராஜா 


Comments

Popular posts from this blog

பிரபல ஊழியர்களை தேடி....

மற்றவர்களை பார்க்க வேண்டாம்.

திருச்சபை