தானியேல் 11ஆம் அதிகாரம்

 தானியேல் 11 ஆம் அதிகாரத்தின் "மெய்யான செய்தி"  பற்றி இன்று ஆராய்வோம்.


பைபிள் படிக்கிறவர்களுக்கு மாத்திரமே புரியும்.


தெரிந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் இரண்டு முறை வாசித்தால் மட்டுமே புரியும்.


ஆலயத்தை அசுத்தப்படுத்திய 

(தானி 11:2-35)

கிரேக்க ராஜாவாகிய அந்தியோக்கஸ் எபிபேனல் என்பவனின் உயர்வுக்குக் காரணமாயிருந்த சம்பவங்களை மேலோட்டமாக அறிவித்த தீர்க்கதரிசனம் தான் இந்த "மெய்யான செய்தி". பெர்சியாவில் இன்னும் மூன்று ராஜாக்கள் இருப்பார்கள்: (கிமு 530-522),சூடோ--ஸ்மெர்டிஸ் அல்லது கெளமதா (522), முதலாம் தரியு (கி.மு 522-486) பின்பு நான்காவது ராஜாவாகிய ஸெர்சஸ் (கி.மு 486-465) கிரேக்க நாட்டை எதிர்த்து போராடுவான். கிரேக்க நாடு (அடுத்த ராஜ்யம்) என்று கூறப்பட்ட பின் பெர்சியா இன்னும் சில காலம் நீடித்திருந்தாலும், பெர்சியாவைக் குறித்து எதுவும் சொல்லப்படவில்லை.


(தானி 11:3) பராக்கிரமுள்ள ஒரு ராஜா. 


எழும்பப் போகும் பராக்கிரமமுள்ள ராஜா மகா அலெக்சாண்டர் ஆகும்.

(கி.மு 336-323). அவன் தனது அதிகாரத்தின் உச்சகட்டத்திலிருக்கும்போது மரித்தான். அவனுடைய ராஜ்யம் அவனுடைய சந்ததி யாருக்குச் செல்லாமல், அவனது நான்கு தளபதிகளுக்குள் பங்கிடப்பட்டது. (தானி 11:4;7:3)


(தானி 11:5) தென்றிசை ராஜா.


எகிப்தின் முதலாம் டாலமி சோடர் என்பவன் தான் தென்திசையின் முதலாம் ராஜா. (கி.மு.323-285) "பிரபு"என்று குறிப்பிடுவது முதலாம் ஸெலுக்கஸ் நிகடார்.

(கி.மு 311-280).


(தானி 11:6)  தென்றிசை ராஜாவின் குமாரத்தி.


பல வருடங்களுக்குப் பிறகு, எகிப்தின் இரண்டாம் டாலமி பிலடல்பஸ் (கி.மு 285-246) என்பவனின் மகள் பெரேனீஸ், வடதிசையின் ராஜாவாகிய இரண்டாம் அந்தியோகஸ் தியோஸ் (கி.மு 261-246) என்பவனைத் திருமணம் செய்தாள். இவன் லவோதீஸ் என்பவளை விவாகரத்து செய்துவிட்டு பெரோனீஸ் என்பவளை மணந்தான்.(கி.மு 246 இல் இரண்டாம் டாலமி மரித்தான். அதேசமயம் பெரேனீஸையும் அந்தியோகஸையும் அவர்களது மகனையும் லவோதீஸ் கொன்றாள்.


(தானி 11:7-9) வேர்களின் கிளையாகிய ஒருவன்..

நிலையாய் நிற்பான்.


பெரேனீஸின் சகோதரனாகிய எகிப்தின் மூன்றாம் டாலமி யூர்கதஸ் (கி.மு. 246-221) என்பவனே அந்த "கிளை". அவன் வட திசையின் ராஜாவாகிய இரண்டாம் ஸெலுக்கஸ் கலினிக்கஸ் (கி.மு.246-226) என்பவனை ஜெயித்தான். மூன்றாம் டாலமி "அரணிப்புக்குள் " (ஒரு வேளை சிரியாவின் அந்தியோகியாவாக இருக்கலாம்) நுழைந்து கி.மு.525 இல் பெர்சியா ராஜாவாகிய காம்பிஸஸ் எகிப்தை கைப்பற்றிய போது கொண்டு சென்ற சீரிய சிலைகளையும், எகிப்திய சிலைகளையும் எகிப்துக்கு கொண்டு சென்றான். மூன்றாம் டாலமி திரளான கொள்ளைப் பொருள்களோடு எகிப்துக்குத் திரும்பினான்.

ஆனால் மீண்டுமாக ஸெலுக்கஸை எதிர்த்துச் செல்வதைத் தவிர்த்து விட்டான். கொஞ்ச காலம் கழித்து தான் அடைந்த நஷ்டத்தை மீட்டுக் கொள்ளும்படியாக எகிப்தின் மேல் படையெடுக்க ஸெலுக்கஸ் முயன்றான். ஆனால் அவரது முயற்சியில் தோற்று தன் சொந்த தேசத்துக்குத் திரும்பிச் செல்ல நிர்பந்திக்கப்பட்டான்.


(தானி 11:10-12) அவனுடைய குமாரர் யுத்தம் செய்ய எத்தனித்து.


மூன்றாம் ஸெலுக்கஸ் ஸெரானஸ் (கி.மு. 226-223)

என்னும் மூன்றாம் மகா அந்தியோகஸ் என்பவனும் 

(கி.மு.223-187) இரண்டாம் ஸெலுக்கஸின் குமாரர்கள். மூன்றாம் அந்தியோகஸ், நான்காம் டாலமி பிலோபேடர்

(கி.மு. 221-203) என்பவனால் தோற்கடிக்கப்பட்டு, தென் பாலஸ்தீனாவிலுள்ள ரபியா என்ற கோட்டையில் 10,000 சீரிய இராணுவ வீரர்களையும் இழந்தான். 


(தானி 11:16) சிங்காரமான தேசத்தில்.


மூன்றாம் அந்தியோகஸ் கி.மு 200 ல் எகிப்தின் மேல் போர் தொடுத்தான். ஆனால் தென் திசை ராஜாவாகிய ஐந்தாம் டாலமி எபிபனேசு (கி.மு.203-181) என்பவனால் நசுக்கப்பட்டான். அந்தியோகஸ் புது பெலனடைந்து "அரணனான நகரங்களை" (தானி 11:15; அரணிப்பான சீதோன் நகரத்தைக் குறிக்கிறது) கைப்பற்றினான்.

கி.மு 197 இல் சிங்காரமான தேசமாகிய பாலஸ்தீன தேசத்தைத் தன் அதிகாரத்தின் கீழாக்கினான்.



(தானி 11:19) இடறி விழுந்து.


பல வருடங்களுக்குப் பின் மூன்றாம் அந்தியோகஸ் எகிப்தோடு சமாதான உடன்படிக்கை செய்து (கி.மு 194) தனது மகளாகிய முதலாம் கிளியோபட்ராவை ஐந்தாம் டாலமிக்கு மனைவியாகக் கொடுத்தான்.

பின்பு, அந்தியோகஸ் வடதிசைக்கெதிராய்ச் சென்றான். ஆனால், (கி.மு 190 இல் ஆசியா மைனரில் உள்ள மக்னீசியா என்ற இடத்தில் தோற்கடிக்கப்பட்டான். அதன் பின்பு (கி.மு 187)எலிமயஸ் என்ற ராஜ்யத்திலிருந்த ஒரு ஜாதிகளின் ஆலயத்தை கொள்ளை அடிக்க முயன்ற போது அவன் மரித்தான்.


(தானி 11:20) நாசமடைந்தான்.


நான்காம் ஸெலுக்கஸ் பிலோபேட்டரின்( கி.மு 187-175) படுகொலை ஹெலியோடோரஸ் என்ற அவனது நிதி அமைச்சரால் திட்டம் தீட்டப்பட்டதாகும். 


(தானி 11:21) அவ மதிக்கப்பட்டவன். 


நான்காம் ஸெலுக்கஸின் சகோதரன் ஆகிய நான்காம் அந்தியோகஸ் எபிபேனஸ் (கி.மு 175-164) என்ற "அவமதிக்கப்பட்டவனின்"  வரவுக்கு நேராய் இந்த அதிகாரம் நம்மைக் கொண்டு செல்கிறது. நான்காம் ஸெலுக்கஸின் இளம் குமாரனாகிய திமத்திரேயுவிக்குச் சொந்தமான சிங்காசனத்தை அவன் கைப்பற்றினான். அந்தியோகஸ் ("சின்னக்கொம்பு") என்று 

(தானி 8:9-14,23-25 ஆகிய வசனங்களில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.)

எகிப்துக்கு எதிராய் பல முற்றுகைகளையிட்டான். அவன் "உடன்படிக்கையின் தலைவனை" கொலை செய்தான். (தானி 11:22 இல் கூறப்பட்டுள்ள கி.மு 170 இல் நிறைவேறிய பிரதான ஆசாரியனாகிய ஒனியாஸ் என்பவனின் மரணம்.)

பிற தேசங்களோடு அவன் செய்த உடன்படிக்கைகள் சூழ்ச்சியும், வஞ்சனையும் நிறைந்தவை. தன்னுடைய தன்னல காரணங்களால் 

டாலமி பிலோமிடார் என்பவனை ஆதரித்தான். சமாதானமாய் இருந்த  நேரங்களில் யுத்தம் செய்தான். (தானி 11:24) எகிப்துக்கு ஆதரவு செலுத்த வேண்டியவர்கள் ஆதரவு அளிக்காததால் எகிப்துக்கு எதிராய் அந்தியோக்கஸ் செய்த யுத்தங்களில் வெற்றி பெற்று தன் வீட்டிற்க்கு மிகுதியான செல்வத்தோடு திரும்பினான்.

(தானி 11:25-28).


(தானி 11:28) தன் இருதயத்தைப் பரிசுத்த உடன்படிக்கைக்கு விரோதமாக வைத்து.


அந்தியோக்கஸ் யூதர்களையும் அவர்களது பரிசுத்த உடன்படிக்கையின் சட்டங்களையும் வெறுக்கத் தொடங்கினான். மற்ற எந்த கலாச்சாரத்தையும் மொழியையும் விட கிரேக்க கலாச்சாரமும் மொழியும் சிறந்தது என்று எண்ணினான். யூதர்களின் மதம் தணித்து நிற்கும் தன்மை வாய்ந்ததாய் இருந்ததால் அவன் யூதர்களை வெறுத்தான். 

கி.மு.168 இல் எகிப்தின் மேல் மீண்டும் படையெடுத்தான். ஆனால் ரோம அதிகாரியாகிய லீனஸ் என்பவனது தலைமையில் வந்த மேற்கத்திய கடல் நாடுகளிலுள்ள கப்பல்கள் (தானி 11:30) அவனைத் தோற்கடித்ததால் தன் சொந்த தேசத்துக்குத் திரும்பி சென்றான். அங்கு யூதர்களுக்கு எதிரான தனது வெறுப்பைக் காண்பித்தான். சில யூதர்களும் பரிசுத்த உடன்படிக்கையைப் புறக்கணித்துவிட்டு அவனோடு சேர்ந்தார்கள்.

இவ்வாறு விசுவாச மறுதலிப்பு செய்த யூதர்கள் கிரேக்க கலாச்சாரத்தையும் மதத்தையும் தங்களுக்குள்ளே கொண்டு வரும்படி அந்தியோக்கசுக்கு அழைப்பு கொடுத்தார்கள். 

அந்தியோக்கஸ் எருசலேமுக்கு அணிவகுத்துச் சென்று, ஆலயத்தின் பலிபீடத்திலே பன்றியை பலியிட்டு, தேவனுடைய பிரமாண்டத்தின் படி செய்ய வேண்டும் அன்றாட பலியை நீக்கி ஜீயஸ் என்ற கிரேக்க தெய்வத்தின் சிலையை பரிசுத்த ஸ்தலத்திலே வைத்தான்.

ஜீயஸின் பலிபீடம் தான், "பாழாக்கும் அருவருப்பு" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

(தானி 11:30,31)

இது இக்காலத்தின் கடைசி நாட்களில் சம்பவிக்கும் அருவருப்பைக் குறித்து இயேசு கிறிஸ்து தீர்க்கதரிசனமாய் உரைத்ததற்கு முன்னோடியான சம்பவமாகும்.


(தானி 11:32) தங்கள் தேவனை அறிந்திருந்த ஜனங்கள் திடங் கொண்டு.


முகஸ்துதியின் காரணமாக சில யூதர்கள் அந்தியோகஸிடம் சேர்ந்து விட்டார்கள். ஆனால் பழைய ஏற்பாட்டின் காலங்களிலுள்ள

யூதர்களில் தமக்கு உண்மையாயிருந்த யூதர்களை தேவன் எப்போதும் வைத்திருந்தார். 

(1இரா 19:18; ஏசா 6:13;8:16 10:20 குறிப்புகள்) இத்தகைய சூழ்நிலையில் தேவனை அறிந்து அவருக்கு உண்மையாயிருந்த யூதர்கள் 

அந்தியோக்கசுக்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்து "கொரில்லா யுத்தம்"நடத்தினார்கள். இந்த யுத்த முறையால் அந்தியோக்கஸ் நாளடைவில் பெலவீனமடைந்ததால் தனது ராணுவத்தை தன் தேசத்தை நோக்கி நடத்தினான். அதன் பின் தேவாலயம் சுத்திகரிக்கப்பட்டது, விளக்குகள் மீண்டுமாய்க் கொளுத்தப்பட்டன. இந்த சம்பவத்தை இன்று யூதர்கள் "அனுக்கா பண்டிகை" என்று கொண்டாடி வருகிறார்கள். இருப்பினும் யூதர்களுக்கிடையே நடக்க வேண்டிய தேவனுடைய கிரியைகள் முடிவடைந்து விடவில்லை. (தானி 11:35) கடைசி காலம் வரை அவர்களை பரிசுத்தப்படுத்தும் கிரியைகள் தொடர்ந்து நடக்கும்.



(தானி 11:36-45) ராஜா.... தன்னை பெரியவனாக்கி.


இந்த வசனங்களிலுள்ள தீர்க்கதரிசனங்கள் அந்தியோக்கிசுக்குப் பொருந்தாது. 'முடிவு காலம்' என்று குறிப்பிடப்பட்டிருப்பதால் 

(தானி 11:35,40), இது உலகின் கடைசி நாட்களில் அந்தியோக்கஸை போலத் தோன்றும் அந்தி கிறிஸ்துவைக் குறிக்கிறது. 

(தானி 7:8; 9:27 வசனங்களை கவனிக்கவும்).

அந்திக் கிறிஸ்து சர்வாதிகாரியாக இருந்து, ஆச்சரியமான காரியங்களை (தேவ தூஷணங்கள்) தேவனுக்கு விரோதமாகப் பேசுவான்; இந்த தீர்க்கதரிசனம் நிறைவேறும்படியாய் அவன் செழித்தோங்க சில காலம் அனுமதிக்கப்படுவான். 

அவன் "தன் பிதாக்களின் தெய்வங்களை (தேவனை) மதியாமல்" (தானி 11:37, தேவன் அல்லது தேவன் என்று பொருள்படும் எபிரேய மொழியிலுள்ள ஏலோகிம்),

மேலும் அவன் "ஸ்திரிகளால் விரும்பப்படுகிறவர்களையும் .... மதியாமல்"(இது தம்மூஸ்-

அடோனிஸ்" என்ற பாபிலோனிய செழிப்பின் தேவனைக் குறிக்கும் என்று சிலர் கருதுகிறார்கள். 

எசே 8:14,) காணப்படுவான். 

அவன் மதிக்கும் ஒரே தேவன் 

"அரண்களின் தேவன்"ஆகும். 

(தானி 11:38 ) யுத்தம் செய்வதற்குத் தனக்கிருந்த திறமையையே மதித்தான் என்பதுதான் இதன் பொருள். அவன் மேற்கொள்ளும் தேசங்களை தன் சொந்த லாபத்துக்காகப் அவன் மறுபடியும் பங்கிடுவான். 

(தானி 11:39).


(தானி 11:45) அவன் முடிவடைவான்.


 அந்திக்கிறிஸ்து சில காலம் செழித்தோங்கினாலும், வட திசை ராஜாவோடும், தென்திசை ராஜாவோடும் யுத்தங்கள் நடக்கும். இந்த யுத்தங்களின் முடிவில் 

அர்மெகெதோன் யுத்தம் நடக்கும். இதில் இயேசு கிறிஸ்துவின் வாயிலுள்ள பட்டயத்தால் (அவருடைய வார்த்தை) அந்திக் கிறிஸ்து தோற்கடிக்கப்பட்டு, அக்னிக் கடலிலே தள்ளப்படுவான். 

(வெளி 19:20).

கிறிஸ்துவின் பணியில் 

சிலுவை ராஜா.

Comments

Popular posts from this blog

பிரபல ஊழியர்களை தேடி....

மற்றவர்களை பார்க்க வேண்டாம்.

திருச்சபை