அப் 8ஆம் அதிகாரம்
அப்போஸ்தலர் நடபடிகள்
8 ஆம் அதிகாரம்.
*ஒரு மாபெரும் துன்பம்.*
(அப் 8:1)
முதல் முதலாக சபைக்குத் துன்பம் உண்டாயிருந்த காலத்தில் சவுல் சபையைத் துன்பப்படுத்தினவர்களின் தலைவனாக பொறுப்பேற்று செயல்பட்டதாகத் தெரிகிறது.
(அப் 8:1-3;9:1) சபையெங்கும் பரவியிருந்த துன்பத்துக்குச் சவுலே காரணம். அத்துன்பம் மிக அதிகமாகவும், கொடியதாகவும் இருந்தது. ஆண்களும், பெண்களும் சிறையிலடைக்கப்பட்டார்கள்.
(அப் 8:3), அடிக்கப்பட்டார்கள் (அப் 22:19), அநேகர் கொலை செய்யப்பட்டார்கள். (அப் 22:20;26:10,11), இருந்த போதிலும் இந்தத் துன்பத்திலிருந்து ஒரு மாபெரும் நற்செய்திப் பணி தொடங்குவதற்கு தேவன் சித்தங் கொண்டார்.(அப் 8:4)
என்பதை நாம் அறிந்து கொள்வதற்கு மாத்திரமல்ல இன்றைய சூழல் நமது இந்திய தேசத்தில் வட இந்தியா பகுதிகளில் பல மாநிலத்தில் மற்றும் தமிழ்நாட்டின் கடைக் கோடியில் நமது கண்களால் பார்க்கவும், கேட்கவும், முடிகிறது. ஆனால் அப்போஸ்தலருடைய நாட்களில், கைது செய்யப்பட்டார்கள், காவலில் வைக்கப்பட்டார்கள், கொலை செய்யப்பட்டார்கள் ஆனாலும் நற்செய்தி பணி தொடர்ந்து நடைபெற்றது.
நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம்?
திருச்சபை என்ன செய்து கொண்டிருக்கிறது ?
இரண்டு லட்சத்துக்கு மேற்பட்ட இந்திய ஊழியர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்.?
என்பதை வேதம் இந்த அதிகாரத்தின் மூலமாக நம்மைக் கேள்வி கேட்கிறது.!
இந்த சூழ்நிலையில்,
*பிலிப்பு சமரியாவுக்குச் சென்றான்.*
(அப் 8:5-24)
பரிசுத்த ஆவியானவர் சமாரியா மக்கள் மேல் ஊட்டப்பட்ட வரலாற்றில், நிகழ்ச்சிகள் வரிசைக் கிரமமாக நடப்பதைக் கவனியுங்கள்.
1) பிலிப்பு தேவனுடைய இராஜ்யத்தைக் குறித்துப் பிரசிங்கித்தான். அவனுடைய செய்தி அற்புதங்களினாலும், அடையாளங்களினாலும் உறுதி செய்யப்பட்டது.
(அப் 8:5-7)
2) சமாரியர்கள் அநேகர் கர்த்தருடைய வசனத்தை ஏற்றுக் கொண்டு இயேசுவை விசுவாசித்தார்கள். (அப் 8:14) அசுத்த ஆவியின் பிடியில் இருந்து விடுதலை பெற்றார்கள் (அப் 8:7)
ஞானஸ்நானம் பெற்றார்கள்,(அப் 8:12) பரிசுத்த ஆவியானவரால் நடந்த அடையாளங்களையும் பெரிய அற்புதங்களையும் கண்டார்கள். (அப் 8:13)
3) எனினும் பரிசுத்த ஆவியானவர் அவர்கள் மனந் திரும்பிய பின்னரும் தண்ணீரால் ஞானஸ்நானம் பெற்ற பின்னரும் அவர்கள் மேல் இரங்கவில்லை.
(அப் 8:14,15),
4) சில நாட்களுக்கு பிறகு, சமாரியர்கள் மனந்திரும்பியதைக் கேள்விப்பட்டு, பேதுருவும் யோவானும் சமரியாவுக்கு வந்தார்கள். அங்கே சமரியர்களுக்கும் பரிசுத்த ஆவி கிடைக்க வேண்டும் என்று ஜெபம் பண்ணினார்கள்.(அப் 8:16,17)
அவர்கள் மனந்திரும்பிக் கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டு இரட்சிப்படைந்த காலத்திற்கும், பரிசுத்த ஆவியில் ஞானஸ்நானம் பெற்ற காலத்திற்கும் இடையில் ஒரு குறிப்பிடத்தக்க கால இடைவெளி இருந்தது. சமாரியர்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொண்டது, ஒரு விதத்தில் சீஷர்கள் பெந்தகோஸ்தே நாளில் பரிசுத்த ஆவியை பெற்ற அனுபவத்தின் மாதிரியியிலே இருந்தது.
(அப் 8:17;2:4)
5) பரிசுத்த ஆவியைப் பெற்றதனால் அதன் பலனாக வரும் அந்நிய பாஷை பேசுதல், தீர்க்கதரிசனம் உரைத்தல் போன்ற உடன் நிகழ்ச்சிகளும் அதோடு நடந்திருக்க வேண்டும்.
(அப் 8:18 ஐ நன்றாக கவனிக்கவும்)
*பிலிப்பு செய்த அற்புதங்களை கேள்விப்பட்டு கண்டு.*(அப் 8:6)
வேதத்தில் அநேக வாக்குத்தத்தங்கள் இருந்தாலும்......
*கிறிஸ்துவின் சுவிசேஷமும் ஒரு வாக்குத்தமே.*
கிறிஸ்துவின் வாக்குத்தத்தமான, நற்செய்தி அறிவித்தலோடு கூட அடையாளங்கள், அற்புதங்கள், குணமாகுதல், போன்ற அதிசயச் செய்கைகளால் அது உறுதிப்படுத்தப்படுவது என்பது அப்போஸ்தலர்களுக்கு மட்டும் உரியதல்ல.
(மாற் 16:15-18) சீஷர்களால் மனந் திரும்பியவர்கள் ("யார் யார் விசுவாசித்தார்களோ") அவர்கள் அனைவரும் அடையாளங்களையும், அற்புதங்களையும் "இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே" செய்வார்கள். அதாவது அசுத்த ஆவிகளையும் துரத்துவார்கள் (மாற் 16:17). பிணியாளிகளைக் குணமாக்குவார்கள் (மாற் 16:18). என்று வாக்கு கொடுத்திருக்கிறார். இதையேதான் பிலிப்பு செய்தான்.
*இயேசு கிறிஸ்துவின் நாமத்தை விசுவாசித்தார்கள்.*
(அப் 8:12)
சமாரியர்கள் இரட்சிப்புக்கான நிபதனைகளை முழு அளவில் பூர்த்தி செய்தார்கள். பரிசுத்த ஆவியானவர் அவர்கள் மேல் வருவதற்கு முன்னரே அவர்கள் கிறிஸ்தவர்களாக ஆகியிருந்தார்கள்.
1) அவர்கள் விசுவாசித்து அதன் பின் ஞானஸ்நானம் பெற்றார்கள். இந்த இரண்டு உண்மைகளும் அந்த சமாரியர்களின் விசுவாசம் இரட்சிப்புக்குரிய விசுவாசம் என்று உறுதி செய்கிறது.
அ) பிலிப்புவும் அப்போஸ்தலர்களும் சமாரியார்களின் விசுவாசம் உண்மையானது என்று கண்டார்கள். (அப் 8:12,14)
ஆ) சமாரியர்கள் தண்ணீரில் ஞானஸ்நானம் பெற்றது மூலம் வெளிப்படையாகக் கிறிஸ்துவுக்குத் தங்கள் விசுவாசத்தைத் தெரியப்படுத்தினார்கள். பரிசுத்த வேதாகமம் தெளிவாக "விசுவாசித்து ஞானஸ்நானம் பெற்றவர்கள் இரட்சிக்கப்படுவார்கள்."(மாற் 16:16) என்று கூறுகிறது. இவ்விதமாக அவர்கள் மறுபிறப்படைந்தார்கள், அவர்களுக்குள் பரிசுத்த ஆவியானவர் தங்கினார்.
(ரோம 8:9).
2) பல நாட்களுக்குப்ப் பிறகு அவர்கள் பரிசுத்த ஆவியை பெற்றது இரட்சிப்படைவதற்காக அல்ல
(அப் 8:17) அது ஒரு வகையில் சீஷர்கள் பெந்தகோஸ்தே நாளில் பரிசுத்த ஆவியைப் பெற்ற அதே முறையில் தான் சமாரியர்களும் பரிசுத்த ஆவியைப் பெற்றார்கள். அதாவது, அவர்கள் ஊழியம் செய்யவும், சாட்சி கூறவும் தேவையான வல்லமையைக் கொடுப்பதற்காக அவர்களுக்கு பரிசுத்த ஆவி அருளப்பட்டது. (அப் 1:8;2:4)
"பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொள்ளுங்கள்" என்னும் சொற்றொடரை லூக்கா பயன்படுத்தும் போது "வல்லமையைப் பெற்றுக்கொள்ளுங்கள்" என்பதே பொருள்.
(அப் 1:8,2:38;8:17;10:47;19:2);
புதிய ஜீவன் அல்லது மறு பிறப்பின் அனுபவம் பெறுவதற்காக அல்ல.
3) சமாரியர்களின் விசுவாசம் இரட்சிக்கும் விசுவாசமோ, மறுபிறப்படையச் செய்யும் விசுவாசமோ அல்ல என்று சிலர் கூறினார்கள். ஆனால் அது பகுத்தறிவுக்குப் புறம்பானது. பரிசுத்த ஆவியும் ஞானமும் நிறைந்த பிலிப்பு உண்மையான விசுவாசமற்ற மக்களுக்கு ஞானஸ்நானம் கொடுத்தான், வியாதிகளைக் குணமாக்கினான், அசுத்த ஆவிகளை துரத்தினான் என்று கூறுவது சரியல்ல.
*அவர்களில் ஒருவனும் பரிசுத்த ஆவியை பெறாமல்.*
(அப் 8:16)
அவர்கள் ஒருவன் மேலும் பரிசுத்த ஆவியானவர் அன்று விசுவாசிகள் மேல் பெந்தகோஸ்தே நாளில் பரிசுத்த ஆவியானவர் வந்து இறங்கியது போல் வரவில்லை (அப் 2:4)
பிதாவானவர் வாக்குத்தத்தம் பண்ணியிருந்தது போல அவர் அவர்களிடம் வரவில்லை. (அப் 1:4)
"நீங்கள் பரிசுத்த ஆவியினால் ஞானஸ்நானம் பெறுவீர்கள்"என்று இயேசு கிறிஸ்து சொன்னபடி அவர்கள் பெறவில்லை.
(அப் 1:5)
எனவே அவர்கள் எதிர்பார்த்த ஆவியானவரின் கிரியைகள் நடைபெறவில்லை. தெய்வீக தூண்டுதலினால் வரும் தீர்க்கதரிசனங்களும் இடம்பெறவில்லை.
(அப் 8:5-24)(8 வசனம் கவனிக்கப்பட வேண்டியது)
*பரிசுத்த ஆவியை அவர்கள் பெற்றார்கள்.*
(அப் 8:17)
பெந்தகோஸ்தே நாளில் சீஷர் மேல் மேல் பரிசுத்த ஆவியானவர் வந்தது போல, இங்கே சமாரியர்கள் மீது கைகளை வைத்த போது அவர்கள் பரிசுத்த ஆவியை பெற்றார்கள். (அப் 1:8;2:4)
சமாரியார்களின் இரண்டு நிலை அனுபவம்--அதாவது, முதலில் விசுவாசித்தல், பின்பு ஆவியானவரால் நிரப்பப்படுதல், இதே இரண்டு நிலை அனுபவம், பெந்தகோஸ்தே ஆதி விசுவாசிகளுக்கு கிடைத்ததில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை (அப் 9:5-17)
வசனங்களில் பவுலின் அனுபவமும்; (அப் 19:1-6) வசனங்களில் எபேசு சபையின் சீஷர்களின் அனுபவமும், சமாரியார்களின் அனுபவத்தைப் போலவே உள்ளது. அவர்கள் கிறிஸ்துவை ஆண்டவர் என்று விசுவாசித்தார்கள். பின்னால் அவர்கள் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டார்கள். செசரியாவில் புறஜாதியாரின் இரட்சிப்புக்கு ஏதுவான விசுவாசத்துக்கும், பரிசுத்த ஆவியினால் ஞானஸ்தானம் பெற்றதற்கு இடையில் இருந்த நீண்ட கால இடைவெளி தேவையில்லாதது போல எப்போதும் நீண்ட கால இடைவெளி தேவையில்லை.
(அப் 10 அதிகாரம்)
*சீமோன் கண்டபோது*
(அப்8:18)
சமாரியர்கள் மீது பரிசுத்த ஆவியானவர் வந்தபோது அது மற்றவர்களால் காணக்கூடிய பல வெளிப்படையான அதிசயங்கள் கொண்டதாயிருந்தது. அவற்றைச் சீமோன் என்னும் மாயவித்தைக்காரனும் கண்டான். இவ்வாறு வெளிப்படையாகத் தெரிந்த அடையாளங்கள் பெந்தகோஸ்தே நாளில் நடந்தது போலவே இருந்திருக்க வேண்டும் . அதாவது, அன்று ஆவினால் நிறைந்தவர்கள் அந்நிய பாஷை பேசினார்கள்.
(அப் 2:4;10:45,46;11:15;19:6) இந்த வெளிப்பாடு சமாரியர்களும், அப்போஸ்தலர்களும் புது விசுவாசிகளிடத்தில் பரிசுத்த ஆவியானவர் வந்து இறங்கியது என்பதை அறிய உதவியது.
* உன் இருதயம் செம்மையாய் இருக்கவில்லை.*
(அப் 8:21)
இயேசு கிறிஸ்துவுக்குத் தங்களை அர்ப்பணித்த சீஷர்களுக்கு மட்டும் தான் பரிசுத்த ஆவியில் ஞானஸ்நானம் கிடைத்தது என்பது அப்போஸ்தலர் நடபடி புத்தகம் முழுவதும் காணப்படும் உண்மையாகும்.
1) சீமோன் ஆவியின் வரத்தையும், வல்லமையையும் பெற விரும்பினான். மற்றவர்கள் மேல் தன் கைகளை வைத்த உடன் ஆவியானவர் கிடைக்க வேண்டும் என்னும் அதிகாரத்தைப் பெற நினைத்தான்.(அப் 8:19)
இவனுடைய வேண்டுதலை ஆண்டவர் நிராகரித்தார். ஏனெனில் அவனுடைய இருதயம் ஆண்டவர் இடத்தில் சரியாயிருக்கவில்லை. அவன் இன்னும் அக்கிரமக்காரனாகவே இருந்தான். அவன் பாவ அடிமைத்தனத்துக்குள்ளும் இருந்தான் (அப் 8:22,23)
"தேவனுக்குப் பயப்பட்டு, நீதியானவற்றை செய்கிறவர்களுக்கே"உண்மையான பரிசுத்த ஆவியின் வரம் ஊற்றப்படும்.
(அப் 10:35;10:44-48; 5:32ஐ கவனிக்கவும்)
2) பெந்தகோஸ்தே நாளுக்கு முன்னும் பின்னும் கிறிஸ்துவைப் பின்பற்றியவர்கள், உயிர்த்தெழுந்த ஆண்டவர் மீது பக்தி உள்ளவர்களாய் இருந்தார்கள். (அப் 1:2-14;2:32) அவர்கள் இடைவிடாமல் ஜெபம் பண்ணுவதில் ஈடுபட்டிருந்தார்கள்.
(அப் 1:14; 6:4)
அவர்கள் உலகத்தை விட்டும், பாவத்தை விட்டும் விலகி
(அப் 2:38-40) அப்போஸ்தலர்களின் போதனைக்கு கீழ்ப்படிந்து வாழ்ந்தார்கள். (அப் 2:42;6:4) புதிய ஆவியின் அருட்பொழிவு அல்லது மறுபொழிவு, தங்களுடைய வாழ்வில் பாவங்களை விட்டும், வாழ்க்கையை விட்டும் விலகிக் கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படியும் வாழ்க்கை வாழ்ந்தவர்களுக்கு மட்டுமே கிடைத்தது.
(அப் 2:42;3:1,19,22-26;4:8,19-35;
5:29-32;8:14-21;9:1-19;10:34-47;
19:1-6;24:16)
ஆவியினால் வழிநடத்தப்படுதல், ஆவியின் படி வாழுதல் என்பவை ஆவியானவரால் நிறைந்திருப்பவர்களுக்குரிய நிபந்தனைகளாகும்.
(கலா 5:16-25;எபே 5:18)
3) எந்த ஒரு அசாதாரண அனுபவமும் ஆவியில் ஞான ஸ்நானம் என்று கூறப்பட்டு, அது பாவ வழிகளில் தொடர்ந்து வாழும் ஒருவனுக்குக் கிடைத்ததாகக் கூறினால், அது கிறிஸ்துவிடமிருந்து வந்தது அல்ல. (1யோவா 4:1-6) அது ஒரு போலி ஞானஸ்நானம் ஆகும். அத்துடன் இணைந்த செயல்களாக அசுத்த ஆவியின் கிரியைகளும் வல்லமைகளும் வெளிப்படும்.
(மத் 7:21-23;2தெச 2:7-10)
தொடர்ந்து தியானியுங்கள். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்.ஆமேன்.
கிறிஸ்துவின் பணியில்
சகோதரர்
சிலுவை ராஜா
தொடர்புக்கு
9841711591.
Comments