ஜெப குறிப்புகள்.
ஜெப குறிப்புகள்.
நான் ...... உலகத்துக்காக வேண்டிக்கொள்ளாமல், நீர் எனக்குத் தந்தவர்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறேன்;* அவர்கள் உம்முடையவர்களாயிருக்கிறார்களே.
(யோவான் 17:9)
இவை முதலானவைகளையல்லாமல், எல்லாச் சபைகளைக்குறித்தும் உண்டாயிருக்கிற கவலை என்னை நாள்தோறும் நெருக்குகிறது.
(2 கொரி 11:28)
நாம் எல்லாப் பக்தியோடும் நல்லொழுக்கத்தோடும் கலகமில்லாமல் அமைதலுள்ள ஜீவனம்பண்ணும்படிக்கு, ராஜாக்களுக்காகவும், அதிகாரமுள்ள யாவருக்காகவும் அப்படியே செய்யவேண்டும். நம்முடைய இரட்சகராகிய தேவனுக்குமுன்பாக அது நன்மையும் பிரியமுமாயிருக்கிறது. எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும், சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும், அவர் சித்தமுள்ளவராயிருக்கிறார். (I தீமோத்தேயு 1:1-4)
ஒவ்வொரு திருச்சபை குடும்பத்திற்காகவும்
குழந்தைகள்
சிறுவர்கள்
இளைஞர்கள்
வாலிப சகோதர சகோதரிகள்
வயதான முதியோர்கள் அனைவருக்காகவும்
1.) பிள்ளைகள் பெற்றோரை கணம் செய்து எல்லாவற்றிலும் கிறிஸ்துவுக்குள் கீழ்ப்படியவும். (எபே 6:1-3)
2) பெற்றோர் பிள்ளைகளை கோபமூட்டாமல் கிறிஸ்துவுக்கு ஏற்ற சிட்சையிலும், போதனையிலும் வளர்க்கவும். (எபேசியர் 6:4)
3).வேலைக்காரர் வேலைக்காரிகள் தங்கள் எஜமான்களுக்கு எல்லாவற்றிலும் பயத்தோடும், நடுக்கத்தோடும், கள்ளம் கபடற்ற மனதோடும் கீழ்படிய வேண்டும். (எபே 6:5)
4).அதிகாரிகளையுடையவர்கள் தங்களுக்கு மேல் கர்த்தர் கொடுத்திருக்கும் அதிகாரிகளுக்கு எல்லாவற்றிலும் பயத்தோடும், நடுக்கத்தோடும், கள்ளம் கபடற்ற மனதோடும் கீழ்படிய வேண்டும். (எபேசியர் 6:5, I பேதுரு 2:18, கொலோசெயர் 3:22)
5). எஜமான்களாக, அதிகாரிகளாக இருப்பவர்கள் தங்களை நம்பி தங்களிடம் பணிபுரிவோருக்கு சகல நன்மைகளையும் பகிர்ந்தளிப்போராய் இருக்கவேண்டும் .(எபேசியர் 6:9, கொலோசெயர் 4:1)
6) மாமனார் மாமியாரை உடையவர்கள் அவர்களைத் தங்கள் தாய் தகப்பனைப் போல நேசித்து வாழ வேண்டும். அதற்கான நல்ல இருதயத்தை கர்த்தர் தரும்படியாக ஜெபிப்போம்.
7) மாமியார் மாமனார் கொடுமை நீங்க....
. மருமகன் மருமகளை உடையவர்களும் அவர்களைத் தங்கள் சொந்த குமாரர் குமாரத்திகளைப் போல நேசித்து வாழ வேண்டும். தன்னைத்தான் நேசிப்பதை போல பிறரையும் நேசிக்க தேவன் குடும்பத்தில் கிருபை தரம்படியாக ஜெபம் பண்ணுவோம்.
8). திருமண வயதுவந்தும் தங்கள் பிள்ளைகளுக்கு ஏற்ற துணை கிடைக்கவில்லையே என்று வாடுகிற குடும்பங்களுக்கு கர்த்தர் ஏற்ற துணைவன், துணைவியை அவர்களுக்கு தேவா ஊழியர்கள் மூலமாக காண்பிக்கும் படியாகவும் அவர்கள் தேவைகளைக் கர்த்தர் சந்திக்கும் படியாகவும் ஜெபிப்போம்.
9). திருமணம் முடிந்து பல வருடங்கள் கடந்தும் குழ்ந்தை இல்லையே என்று வாடும் குடும்பத்தினரைக் கர்த்தர் சந்தித்து அவர்களுக்குக் கர்ப்பத்தின் கனியை கொடுக்கவும், கர்த்தருடைய இரக்கம் அவர்களுக்குக் கிடைக்கும் படியாகவும் ஜெபிப்போம். (சங்கீதம் 127:4)
10). ஏழைகள், திக்கற்ற பிள்ளைகள், அனாதைகளா இருப்பவர்கள், பெற்றோரால், பிள்ளைகளால், கணவனால், தாங்கள் நம்பி இருந்தவர்களால் கைவிடப்பட்டவர்கள் இவர்களுக்கு ஆறுதலோடு கூட இவர்களை தன்னலமற்ற அன்போடு கூட ஆதரிக்கிறவர்கள் பெருகும்படியாகவும், என்றென்றும் மாறாத கர்த்தர் அவர்களை நம்முடைய பிள்ளைகள் மூலமாக விசாரிக்கும்படியாக ஜெபிப்போம். (சங்கீதம் 10:12: 12:5)
11).தங்களை நேசித்தவர்களையும், தங்களால் நேசிக்கப்பட்டவர்களையும் இழந்து வாடும் குடும்பங்களுக்காக அவர்களின் ஆறுதலுக்காக, கர்த்தரின் ஈடு இணையற்ற அன்பு அவர்களை சந்திக்கும் படியாக ஜெபிப்போம். (சங்கீதம் 94:19, ஏசாயா 51:12, ஏசாயா 57:18)
12). அன்றாட உணவு, உடை, உறைவிடம் இல்லாமல் தவிக்கும் மக்களின் தேவைகளை கர்த்தர் அவர்களை சந்தித்து கொடுக்கும்படியாக ஜெபிப்போம். (லூக்கா 11:3, அப்போஸ்தலர் 14:17)
13). மருத்துவமனையிலும், வீட்டிலும் வியாதியின் நிமித்தம் வேதனையோடு இருக்கிற மக்களை கர்த்தர் நம்முடைய வசனத்தை ஊழியர்கள் மூலமாக சந்தித்து பேசி அவர்களை குணமாகும்படியாக, அவர்கள் வேதனை முற்றிலும் நீங்கும்படியாக நாம் ஜெபிப்போம். (ஏசாயா 33:24, மத்தேயு 25:36)
14). தேவனுடைய பிள்ளைகள் ஊழியத்திற்காகவோ, வேலைக்காகவோ செல்லுகிற பிரயாணத்திற்காக;
ஒவ்வொரு நாளும் (தரைவழி, கடல்வழி, விண்வெளி) பிரயாணத்தில் ஈடுபடும் தேவனுடைய மக்களை கர்த்தர் கிருபையாய் சந்தித்து பாதுகாக்கும்படியாக நாம் ஜெபிப்போம்.
15) இந்த இந்தத் துறைகளில் வேலை செய்யும் கிறிஸ்தவர்களுக்காக.
மருத்துவத்துறை, நீதிமன்றங்கள், கப்பல்துறை, விமானத்துறை, போக்குவரத்துத் துறை, தொலைபேசி,அலைபேசி நிலையங்கள், பெட்ரோலியத்துறை, மின்சாரத்துறை, கால்நடை மருத்துவத்துறை, காவல் துறை, இன்னும் பலவிதமான அரசாங்க மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலைப்பார்க்கும், பயிற்சி எடுக்கும், ஒவ்வொரு விதமான படிப்பில் ஈடுப்பட்டிருக்கும் மற்றும் ஒவ்வொரு விதமான தொழிலில் ஈடுப்பட்டிருக்கும் அனைவரையும் கர்த்தர் பாதுகாக்கும் படியாகவும், அவர்கள அனைவரும் உண்மை உள்ளவர்களாகவும், நீதி, நேர்மை, இரக்கம், தயவு உள்ளவர்களாகவும் வாழ்ந்திட நாம் ஜெபிப்போம். (அப் 1:8)
16). தேவப் பிள்ளைகளுக்கு இயற்கை மூலமாகவோ அல்லது சேர்க்கை கருவிகள் மூலமாகவோ ஆபத்து நேரிடாதபடி.....
இடி, மின்னல், மேகம், மழை, காற்று, வெயில், குளிர், நிலநடுக்கம், நிலச்சரிவு, நில அதிர்வு, பனிச்சரிவு, கற்குவியலின் சரிவு, மரக்கட்டைகளின் சரிவு, மரம் முறிந்து விழுகுதல் இவைகளினாலோ, கடல், குளம், குட்டை, ஆறு, வாய்க்கால், ஓடை, கிணறு, போர்குழாய் இவைகளினாலோ, கெமிக்கல், அசிட் இவைகளினாலோ, பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய்,விசவாயு, எரிவாயு, தீ இவைகளினாலோ, உணவு, உடைகள், உடல் நல மருந்துகள் இவைகளினாலோ, கூர்மையான எந்தவொரு பொருட்களினாலோ, எந்தவொரு இயந்திரங்கள் சம்பந்தமான பொருட்களினாலோ, மின்சாரத்தினாலோ, மின்சாரம் சம்பந்தமான எந்தவொரு பொருட்களினாலோ, மக்களுக்கு எந்தவொரு பாதிப்பும் வராமல் கர்த்தர் ஒவ்வொரு நாளும் பாதுகாப்பு அருளும் படியாக நாம் ஜெபிப்போம்.
17). சபைக்கு வந்தும் சத்தியத்தை அறியாமல்;
பாவங்களிலும், சாபங்களிலும், வியாதிகளிலும், பெலவீனங்களிலும் கட்டப்பட்டு மீளமுடியாமல் தவித்துக் கொண்டிருக்கும் ஒவ்வொருவரையும் தம்முடைய ஊழியர்களைக் மூலமாக சந்தித்து அவர்களை அவைகளினின்று விடுவித்து பரலோக ராஜ்யத்தின் பிள்ளைகளாய் நித்திய ஜீவனுக்கு சொந்தமுள்ளவர்களாய் மாற்றும் படி நாம் அவர்களுக்காக ஜெபிப்போம்
18). திருச்சபைக்கு வருகிற குடும்பத்திலுள்ள கணவனோ
அல்லது மகனோ, மகளோ
அடிமைப்பட்டு இருப்பதை அறிவோம்.
போதை வஸ்துக்களான பீடி,சிகரெட்,தம்பாக்கு,பான்பராக்கு,புகையிலை,கள்ளச்சாராயம், பட்டச்சாராயம்,பீர்,பிராந்தி,ஒயின்,போதை ஊசி, போதை மருந்து இவைகளினால் அடிமைப்பட்டு மீள முடியாமல் தவித்துக் கொண்டிருக்கும் ஒவ்வொரு நபரையும் கர்த்தர் தம்முடைய ஊழியர்கள் மூலமாகவோ, அல்லது தேவ பிள்ளைகள் மூலமாக சந்தித்து அவர்களுக்கு மறுவாழ்வு அருளிச் செய்யும் படி நாம் ஜெபிப்போம்.
19) சபையில் ரகசியமாக நடக்கிற காரியங்கள் இவைகள்;
விக்கிரக ஆராதனை, பொங்கல் ஆராதனை
பில்லிசூனியம், ஏவல்கள், செய்வினைகள், மந்திரங்கள், பூ போட்டு பார்க்குதல், (ஜாதகம்,ஜோசியம்,குறி, நாள் நட்சத்திரம் – பார்க்குதல்,சொல்லுதல்)
இவைகளை நம்பி பரிசுத்த தேவன் தரும் பரம ராஜ்ஜியத்தை இழக்கப் போகிறவர்கள் மனந் திரும்பும்படி நாம் ஜெபிப்போம்.(வெளி 21:8, I தெசலோனிக்கேயர் 1:9)
20). கர்த்தருடைய அப்போஸ்தலர்கள், தீர்க்கத்தரிசிகள், மேய்ப்பர்கள், சுவிஷேசகர்கள், போதகர்கள், மிஷனெரிகள், விசுவாசப்பிள்ளைகள் அனைவரையும் பரிசுத்த ஆவியானவர் அவர்களை அழைத்த அழைப்பிற்கு நேராக நடத்தும் படியாகவும், தேவசித்தம் இன்னதென்று அறிந்து அவற்றில் முழு மூச்சோடு ஆசையாக பின் தொடருகிறவர்களாகவும், கறை திரை அற்றப்பிள்ளைகளாக எதைச் செய்தாலும் கர்த்தரின் நாமத்திற்கு மகிமையை சேர்க்கும்படி வாழவும் கர்த்தர் கிருபையாக நம்மை நடத்தும் படியாகவும் ஜெபிப்போம்.
(ரோம 8:27)
21). கர்த்தருடைய பிள்ளைகளாகிய நாம் எப்பொழுதும் எல்லாருக்காகவும் எல்லாவித வேண்டுதலோடும் ஸ்தோத்திரத்தோடே ஜெபிக்கிறவர்களாகவும், ஆவியின் கனிகளால் நிரம்பி சகல நற்கிரியைகளையும் செய்கிறவர்களாகவும் இருக்க நாம் ஜெபிப்போம். (I தீமோத்தேயு 1:1-4, தீத்து 2:14,3:14)
22). பிசாசு பிடித்தவர்களை விடுவிக்கவும், வியாதியஸ்தர்களை குணமாக்கவும், குருடர்கள் பார்வை அடையவும், முடவர்கள் சப்பாணிகள் எழும்பி நடக்கவும், ஊமையர்கள் பேசவும், செவிடர்கள் கேட்கவும், ஊனர்கள் சொஸ்தமாகவும், மரித்தோர் எழும்பி நடக்கவும் கர்த்தருடைய வல்லமை வெளியரங்கமாய் அவருடையப் பிள்ளைகளாகிய நம் மூலமாக செயல்படவும், பரலோகத்தின் பிள்ளைகளாய் அநேகர் தெரிந்துகொள்ளப்படவும் அவர் நாமம் இந்த பூமியில் பெருகவும் நாம் ஜெபிப்போம்.(மத்தேயு 10:1,)
23). அவருடையப் பிள்ளைகளாகிய நாம் வார்த்தையிலும், நடக்கையிலும், பேச்சிலும், ஆவியிலும், கற்பிலும், அன்பிலும், விசுவாசத்திலும் சாட்சியாக வாழ்ந்திட கர்த்தர் கிருபை செய்யும்படி நாம் ஜெபிப்போம். (I தீமோத்தேயு 4:12)
24). தேவனுடையப் பிள்ளைகளும், ஊழியர்களும் சபை பாகுபாடின்றி, ஊழியப் பாகுபாடின்றி ஒற்றுமையாய் கள்ளம் கபடின்றி ஆத்துமா பாரம் உள்ளவர்களாய் தேவ சித்தம் நிறைவேற செயல்பட நாம் ஜெபிப்போம்.
25). பிரபல கள்ள ஊழியர்களிடம் திருச்சபை மக்களை அடமானம் வைக்கும், அல்லது பணத்திற்காக விசுவாசிகளை அங்குமிங்குமாக பஸ் அல்லது வேன்கள் மூலமாக கூட்டித் திரிவது
பண சம்பாத்தியத்திற்காகவோ, தங்கள் சுய மகிமைக்காகவோ, தன் பெயர் பிரஸ்தாபத்துக்க்காகவோ ஊழியம் செய்கிறவர்களும், மக்களை கர்த்தரை நம்பி வாழவைப்பதற்க்கு பதிலாக தங்களிடம் ஆத்துமாக்களை திசைதிருப்பி தங்களையும் தங்கள் ஊழியத்தையும் நம்பச் செய்கிறவர்கள் மனந்திரும்ப நாம் ஜெபிப்போம்.
26). கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் வேதத்தின் அடிப்படையில் தங்கள் வாழ்வினை கொண்டுச் செல்ல நாம் ஜெபிப்போம்.
27). ஜாதி, மத, இன, படிப்பு, வசதி, நிறம்,அழகு, வேறுபாடு இல்லாதவர்களாய் தேவனுடையப் பிள்ளைகளும், ஊழியர்களும் வாழ்ந்திட நாம் ஜெபிப்போம்.
28). தேவனுடையப் பிள்ளைகள் ஆவியில் எளிமை, இருதயத்தில் தூய்மை, நீதியில் பசி, ஆவியின் கனி, நற்கிரியை, தெளிந்த புத்தி, ஒருவரும் எதிர் பேசவும் எதிர் நிற்கவும் கூடாத வாக்கு ஞானம், தேவ கிருபை, மனுஷரின் தயவு, உன்னதங்களிலுள்ள ஆவிக்குரிய சகல ஆசிர்வாதம், ஆவிக்குரிய வரங்கள் நிறைந்து வாழ்ந்திட தேவன் கிருபைச் செய்ய நாம் ஜெபிப்போம்.
29). தேவன் தம்முடைய ஊழியர்களுக்கு தம்முடைய வார்த்தையை கொடுக்கும்படியகவும்,தேவ வசனம் செல்லும்படியான வாசல் திறக்கப்படவும், ஒருவரும் எதிர் பேசவும் எதிர் நிற்கவும் கூடாத வாக்கு ஞானம் கொடுக்கப்படவும், சாந்தமுள்ளவர்களாய் உபதேசிக்கவும், எதிர்க்கிறவர்களால் ஒன்றிலும் மருளாதிருக்கவும், உன்னதங்களிலுள்ள ஆவிக்குரிய சகல ஆசிர்வாதத்தால் நிறைந்திருக்கவும், ஆவிக்குரிய வரங்களால் நிறைந்திருக்கவும், கிருபையுள்ள, உப்பால் சாரமேற்றப்பட்ட வசனம் வெளிப்படவும், அதிகாரமுள்ள வசனம் வெளிப்படவும் நாம் ஜெபிப்போம்.
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக தொடர்ந்து ஜெபியுங்கள் பெரிய காரியங்களை எதிர்பாருங்கள். பெரிய காரியங்களை தேவனுக்காக செய்யுங்கள்.
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார் ஆமென்.
Comments