யோனா புத்தகம்
யோனா புத்தகத்தின் ஒர் ஆய்வை பார்க்கலாம்.
யோனா. (யோனா 1:1)
இரண்டாவது யெரோபெயாமின் காலத்தில் இஸ்ரவேலரின் வடபகுதியின் தீர்க்கதரிசியாக யோனா விளங்கினான். (2 இரா 14:23-25. காண்க).
நினிவேக்குப் போ. (யோனா 1:2)
பாவத்தி நிமித்தம் வரும் தண்டனையைக் குறித்து நினிவேயை எச்சரிக்க தேவன் யோனாவை அழைத்தார்.
(இன்று நம்முடைய அழைப்பும் இதற்காகத்தான்)
துன் மார்க்கமான, மிருகத்தனமான, ஒழுக்கக்கேடுள்ள தேசமாகிய ஆசீரியாவின் தலைநகரான நினிவே விளங்கியது. (நாகூம் 1:11; 2:12-13; 3:1,4,16,19). இஸ்ரேல் ஆசீரியரைப் பகைத்தவுடன் அவர்களை, தங்களைத் தாக்கும் ஒரு பரம எதிரிகளாகக் கண்டனர்.
ஓடிப்போகும் படி எழுந்து (யோனா 1:3)
நினிவே மக்கள் மனந் திரும்பி விட்டால் , தேவ தண்டனை அவர்கள் மேல் வராமல் போய்விடும் என பயந்ததால் யோனா தேவ அழைப்பை விட்டு ஓடி தேவனுடைய செய்தியை நினிவேக்குத் கூற மறுத்தான்.(யோனா 4:1-4 காண்க).
1) இஸ்ரவேலரைத் தவிர வேறெந்த தேசத்தின் மேலும், குறிப்பாக அசீரியாவின் மேல் தேவன் இரக்கம் காட்டக் கூடாது என்பதே யோனாவின் விருப்பம். புறஜாதிகளுக்கு ஆசீர்வாதமாக இருந்து அவர்களை தேவனைக் குறித்த அறிவுக்கு நேராகக் கொண்டு வருவதே இஸ்ரவேலின் வேலையாக இருக்க வேண்டும் என்ற தேவத் திட்டத்தை அவன் மறந்து விட்டான். (ஆதி 12:1-3; ஏசா 49:3).
2)யோனாவைப் போல் மட்டுமல்ல, உலகெங்கும் சுவிசேஷம் அறிவிக்கும் இன்னும் மேலான அழைப்பை கிறிஸ்து சபைக்கு அளித்துள்ளார். (மத் 28:18-20; அப் 1:8).
யோனாவை போலவே இன்றும் பல சபைகள் ஊழிய பாரமற்று தங்களது ராஜ்யத்தை தங்கள் இடங்களிலே கட்டுவதற்கு முயற்சிக்கின்றன. தர்ஷீஸ். (யோனா 1:3). மேற்கு ஸ்பெயினில் இஸ்ரவேலியில் இருந்து சுமார் 2500 மைல் தொலைவில் இது உள்ளது.
நினிவேயின் எதிர் திசையில் மிகவும் அதிக தொலைவில் யோனாவால் பிரயாணம் பண்ணிப் போகக்கூடிய இடமாக இது இருந்தது.
பெருங்காற்று. (யோனா 1:4). தனது அழைப்பை யோனாவுக்கு அறிவுறுத்தும் படி மத்திய தரைக் கடலில் தேவன் பெருங்காற்றை அனுப்பினார்.
யோனாவின் கீழ்படியாமையால் கப்பலில் இருந்த மற்றவர்களின் உயிருக்கும் ஆபத்து ஏற்பட்டது. நாம் தேவனுக்கும் அவருடைய சித்தத்துக்கும் முழுவதும் கீழ்படியாமல் இருந்தால் அதன் மூலம் நமது குடும்பமும் மற்றவர்களும் பாதிக்கப்படுவார்கள்.
யோனா..... அயர்ந்த நித்திரையாயிருந்தான். (யோனா 1:5) பயணிகளின் உயிர் ஆபத்தில் இருந்த போது தேவ ஊழியன் தூங்கிக் கொண்டிருந்தார்.
இக்காலத்திலும் நம்மை சுற்றிலும் வாழ்கின்றவர் ஆவியில் மரித்து வாழ்க்கை புயல்களில் சிக்கிக் கிடக்கும் போது சில சபைகளிலுள்ளவர்கள் எந்த கரிசனையுமின்றி தூங்குகின்றனர்.
சீட்டு போடுவோம்.(யோனா 1:7) குறிப்பெதியதான குச்சிகள் அல்லது கற்களை பெட்டியில் போட்டு குலுக்கி ஒன்றை எடுத்தனர். தேவன் இச்சீட்டு எடுப்பதை வழி நடத்தினார். யோனாவே குற்றவாளி என அடையாளப்படுத்தப்பட்டான்.
என்னை எடுத்துக் கடலிலே போடுங்கள்.(யோனா 1:12) பயணிகளைக் காக்க மரிக்க துணிந்ததன் மூலம் யோனா தேவனுக்குக் கீழ்படியாததினாலும், மற்றவர்கள் உயிருக்கும் ஆபத்து உண்டாக்குவதாலும் தான் எவ்வளவு குற்றமுள்ளவன் என்று உணர்ந்தான் என்று தெரிகிறது.
யோனாவை விழுங்கும்படி ஒரு பெரிய மீனைக் கர்த்தர் ஆயத்தப்படுத்தியிருந்தார். (யோனா 1:17) யோனாவின் உயிரை காப்பாற்ற ஒரு பெரிய மீனை, ஒருவேளை பெரிய திமிங்கலத்தைத் தேவன் ஆயத்தமாக்கியிருந்தார். அம்மீனின் வயிற்றில் யோனா உயிரோடிருக்கும்படி தேவன் அற்புதம் செய்தார்.
1) உலகில் உள்ள அவிசுவாசிகளும், சபையிலுள்ள கள்ளப் போதகர்களும் இந்த அற்புதத்தைக் கட்டுக்கதை எனத் தள்ளுகின்றனர்.
ஆனால் இயேசுவோ இதைச் சரித்திர உண்மையாக காண்கிறார். யோனாவையும், மீனையும் தமது மரணம், அடக்கம், உயிர்த்தெழுதல் ஆகியவற்றைக் குறிப்பிடும் சம்பவமாக இயேசு உபயோகப்படுத்தினார். (மத் 12:39-41).
2) யோனாவின் அனுபவத்தைத் தமது மரணத்துக்கும் உயிர்த்தெழுதலுக்கும் இயேசு இணையாக்குகிறார். மீட்பின் சரித்திரத்தில் இது தேவனின் நோக்கம் நிறைவேறுவதற்காக நடந்த அற்புதமாக இயேசு கருதினார். எனவே எல்லா உண்மை விசுவாசிகளுக்கும் இப்புத்தகம் உண்மையானது தானா என்ற சந்தேகத்தை இது தீர்க்கிறது.
யோனா விண்ணப்பம் பண்ணி...(யோனா 2:1-10). இந்த யோனாவின் ஜெபம் மரணத்திலிருந்து விடுதலையாக்கப்படவும், அதன் தொடர்பாக நன்றி கூறும்படியாகவும் ஏறெடுக்கப்பட்டது.
1) மீனின் வயிற்றில் தான் உயிருடன் இருப்பதைக் கண்டு தேவனை நோக்கி யோனா கூப்பிட்டான்.
அவன் மரித்தவனைப் போல் இருந்தும் தேவன் அவன் ஜெபத்தை கேட்டு அவனைக் காப்பாற்றினார். (யோனா 2:6).
2) இயலாத சூழ்நிலையிலும் விசுவாசிகள் நம்பிக்கையை இழந்து விடக்கூடாது. யோனாவை போல இரக்கத்துக்காகவும், உதவிக்காகவும் தேவனை நோக்கி கூப்பிட்டுத் தமது வாழ்வை அவர் கரங்களில் அர்ப்பணிக்க வேண்டும்.
என்னை தள்ளிவிட்டீர். (யோனா 2:4) தான் கீழ்படியாததால் தேவன் தாம் அவனைச் சமுத்திரத்தில் தள்ளி விட்டார் என யோனா உணர்ந்தான். தான் தேவ சமூகத்திலிருந்து நிரந்தரமாக தள்ளப்பட்டு விடுவோமோ என அவன் பயந்தான். (யோனா 2:4)
கர்த்தரை நினைத்தேன். (யோனா 2:7)
கர்த்தரை நினைத்து என்பது நமக்குள்ளும், நம்மை சுற்றிலும் அவரது பிரசன்னத்தை உணர்வதைக் காட்டுகிறது. இதன் மூலம் அவரை விசுவாசம், நம்பிக்கை, அன்பு இவற்றோடு எப்போதும் கூப்பிடலாம். (உபா 8:18;)
என் விண்ணப்பம்.... உன்னிடத்தில் வந்து சேர்ந்தது.
நாம் ஜெபிக்கும்போது நமது ஜெபம் பரலோகில் தேவனைச் சென்றடைந்ததென நாம் விசுவாசிக்க வேண்டும்.
துதி... பலி. (யோனா 2:9)
யோனா துதியின் சத்தத்துடன் உண்மையாக பழி செலுத்திய அதே நேரத்தில் தேவன் அவனுக்காக குறுக்கிட்டார். (யோனா 2:9,10)
யோனாவைக் கரையில் கக்கி விட்டது.(யோனா 2:10)
யோனாவின் சரித்திரத்தில் இதுவரை ஏழு அற்புதங்கள் நடைபெற்றன.
1) பெரிய புயலை அனுப்பினார். (1:14)
2) யோனாவைப் பிடிக்கும் படி சீட்டு அவன் பேரில் திருப்பி விடப்பட்டது.(1:7)
3) சமுத்திரத்தை அமரச் செய்தார். (1:15)
4) யோனாவை விழுங்க ஒரு பெரிய திமிங்கலத்தை ஆயத்தம் பண்ணினார். (1:17)
5) மூன்று நாள் யோனாவை மீனின் வயிற்றில் உயிருடன் இருக்கச் செய்தார்.(1:17)
6) மீன் அவனைத் தரைக்குக் கொண்டு வரச் செய்தார்.
7) மீன் யோனாவை வெட்டாந்தரையில் வாந்தி பண்ணும்படி கட்டளையிட அது அப்படி செய்தது.
நான் உனக்குக் கற்பிக்கும் வார்த்தை.(யோனா 3:2)
1) அழிவின் தண்டனையைப் பிரசங்கிக்க யோனா இரண்டாம் முறை அழைக்கப்பட்டான்.(3:4).
நினிவேயின் மக்கள் ஏற்றுக் கொண்டாலும், இல்லாவிட்டாலும் அதை பிரசிங்கிப்பது யோனாவின் கடமையாக இருந்தது.
2) தேவனுடைய முழு ஆலோசனையையும் அறிவிக்கும் படி இதே விதமாக சுவிசேஷகர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.
(அப் 20:27; 2தீமோ 4:2).
தேவனுடைய இரக்கத்தையும், அவருடைய கோபத்தையும், அவரது மன்னிப்பையும் தண்டனையையும் அவர்கள் பிரசிங்கிக்க வேண்டும். கடினமான உபதேசங்களையும் தேவ வார்த்தையின் ஒழுக்க நெறிகளையும் தவிர்க்கும்படியாக சுவிசேஷத்தைத் தண்ணீர் கலப்படமாக்கி வலுவைக் குறைக்க கூடாது. மக்கள் பாவத்திலிருந்து மனம் திரும்புவதற்கேற்ற முறையில் பிரசிங்கிக்க வேண்டும். (அப் 14:15)
மகா பெரிய நகரம்.(3:3)
நினிவே நகரத்தில் 1,20,000 க்கும் மேல் மக்கள் வாழ்ந்தனர். (4:11 பார்க்கவும்)
(இந்தியாவின் மக்கள் தொகையை கருத்தில் கொள்ளவும்) நினிவேயிலுள்ள ஜனங்கள் தேவனை விசுவாசித்தார்கள்.
1) தாங்கள் மனந் திரும்பாவிட்டால் அழிவோம் என்ற யோனாவின் செய்தியை நினிவே மக்கள் நம்பி ஏற்றுக் கொண்டனர்.
தங்களது மனஸ்தாபத்துக்கு அடையாளமாக உபவாசித்து (1சாமு 7:6; 2சாமு 1:12) இருட்டுடுத்திக் கொண்டனர். (ஆட்டின் உரோமத்தால் செய்யப்பட்ட முரட்டுத் துணியாகும். 2சாமு 3:31; 2 இரா 19:1-2)
2) இஸ்ரவேலர் மனந்திரும்பாமலும் தம்மை விசுவாசிக்கத் தவறியபடியாலும் நினிவே மக்கள் கடைசி நாளில் நியாயத்தீர்ப்பின் போது அவர்கள் மேல் குற்றம் சுமத்துவார்கள் என இயேசு கூறினார். (மத் 12:41). தேவன்.... தீங்கைக் குறித்து மனஸ்தாபட்டார். (யோனா 3:10) ஜனங்கள் மனந்திரும்பியதால் தேவன் தமது நியாயத்தீர்ப்பின் திட்டத்தை நீக்கிவிட்டார்.
1) தேவனுடைய முக்கிய விருப்பம் இரக்கம் காட்டுவதேயன்றி தண்டனை கொடுப்பதல்ல. உண்மையாக மனந்திரும்பும் பாவிகளைக் கண்டு மனதுருகும் ஒரு ஆண்டவராக நம் தேவன் இருக்கிறார்.
ஒருவரும் கெட்டுப் போகாமல் எல்லாரும் மனந்திரும்பி மன்னிப்பை பெற்று நித்திய ஜீவனை அடைய வேண்டுமென அவர் விரும்புகிறார் என்பதான வேத உண்மைகளை இப்புத்தகம் விளக்குகிறது. (2 பேதுரு 3:9)
யோனாவுக்கு இது மிகவும் விசனாமாயிருந்தது. (யோனா 4:1). தேவன் நினிவே மக்களை மன்னிக்க நினைத்ததைக் கண்டு யோனா கோபமடைந்தான். இஸ்ரவேலரின் எதிரியாகிய நினிவே மக்களை தேவன் விட்டு வைக்க யோனா விரும்பவில்லை.
1) முதலாவதாக யோனா தேவ சித்தத்துக்கு முழுவதும் அர்ப்பணிக்கவில்லை.
இஸ்ரவேலரின் சரீர பாதுகாப்பிலே அவன் மிகுந்த கரிசனையோடு இருந்தான்.
2) இன்று தேவ ஜனங்கள் சபையின் வெற்றிக்காகத் தங்களை அர்ப்பணித்தும், பரிசுத்த வேதாகமத்தில் வெளிப்படுத்தப்பட்ட தேவனுடைய சித்தம், நோக்கம், பரிசுத்த பகுதி, ஆகியவற்றுக்கு உண்மையாகத் தங்களை ஒப்புக் கொடுப்பதில்லை.
நீர் இரக்கமும் கிருபையுமுள்ள தேவன்.(யோனா 4:2)
தேவன் "இரக்கமுள்ளவர்"
(அதாவது மற்றவர்களுக்கு உதவ விரும்புகிறவர்) "உருக்கமுள்ளவர்"(மனதுருக்கம் நிறைந்தவர்)"நீடிய சாந்தமுள்ளவர்"(துன்மார்க்கனை அழிக்க விரும்பாதவர்) "மிகுந்த கிருபையுள்ளவர்". (கருணை நிறைந்து, பரிதவிப்பவர்) "தீங்குக்கு மனஸ்தாபப்படுகிறவர்"
(ஜனங்கள் மனந்திரும்பினால் தமது தண்டனைத் திட்டத்தை மாற்றி மகிழ்வார்)
தேவனது இந்த குணாதிசயங்களை வேதம் முழுவதிலும் காணலாம். (சங் 103:8; 111:4; 112:4; 145:8).
நான் சாகிறது நலமாயிருக்கும்.*(யோனா 4:2)
யோனா மிகவும் ஏமாற்றமடைந்து மனந்தளர்ந்து போனபடியால் மரிக்க விரும்பினான்.
நினிவே மக்களை அழிக்காததால் தேவன் தனக்கும், தனது மக்களுக்கும் எதிராக மாறிவிட்டார் என அவன் நினைத்தான்.
தேவன் ஒரு ஆமணக்குச் செடியை முளைக்கக் கட்டளையிட்டார். யோனாவின் எதிற்கும் செயலுக்காக அவனைத் தள்ளி விடுவதற்குப் பதிலாக தேவன் கருணையுடன் அவனைத் தேற்ற நினைத்து ஒரு செடியை வேகமாக வளரப் பண்ணினார். இதன் மூலம் தாம் இஸ்ரவேலின் மேலும் எல்லா தேசத்தார் மேலும் கரிசனையுள்ளவர் என விளங்கப் பண்ணினார்.
நீ எரிச்சலாயிருக்கிறது நல்லதோ ?.(யோனா 4:9)
யோனா தன் சுயநலத்தில் மாத்திரம் அக்கறை உள்ளவனென்பதையும், நினிவேயைக் குறித்து கரிசனையில்லாதவனென்பதையும் அவனுக்கு காண்பிக்க ஆமணக்குச் செடியையும், உஷ்ணம் ஆன கீழ்காற்றையும் தேவன் உபயோகப்படுத்தினார். அழிந்து போகும் தேசத்தின் மேல் தேவன் கொண்டிருந்த சித்தத்தை விட தனது சரீர வசதி யோனாவுக்கு முக்கியமாக இருந்தது.
நினிவேக்காக நான் பரிதபியாமலிருப்பேனோ ?. (யோனா 4:11)
தேவன் நினிவேயின் மேலுள்ள தமது அன்பை வெளிப்படுத்துகிறார்.
1) தமது சிருஷ்டிகள் பாவத்திலும், தேவ கட்டளைகளுக்கு எதிராகவும் வாழ்ந்தாலும் சிருஷ்டிகருக்கு அவர்கள் மேல் அன்பு உண்டு. அது மனித அன்பைக் கடந்த அன்பாகும்.(ரோம 5:8)
2) அவரது அன்பு தம் சொந்த ஜனங்களையும் தாண்டி உலகம் எங்கும் வாழும் வழி தவறிப்போன ஜனங்கள் மேல் வியாபித்துள்ளது.
அ) தமது சொந்த குமாரனாம் இயேசுவை ஜனங்களுக்காக மறைக்கும்படி தேவன் அனுப்பிய போது இவ் அன்பு வெளிப்பட்டது.(யோவா 3:16)
ஆ) இயேசு கிறிஸ்து தமது சீஷர்களை உலகெங்கும் அனுப்பி சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கச் செய்து சீஷர்களை உருவாகச் செய்த போதும் இவ்வன்பு வெளிப்பட்டது. (மத் 28:18-20;).
யோனா புத்தகத்தை கையில் வைத்துக்கொண்டு இதை வாசிக்கும் போது என் தெளிவாக புதிய உடன்படிக்கையின் கிறிஸ்துவின் ஊழியத்தை புரிந்து கொள்ள முடியும். சுவிசேஷத்தை அறிவிக்கும் போது ஜனங்கள் மனந் திரும்புவார்கள். என்ற உண்மையை புரிந்து கொள்ளுங்கள்.
இன்றைக்கு கள்ள ஊழியர்கள் ஜெபித்தால் போதும், தேசங்கள் ,மாவட்டங்கள் ,பட்டணங்கள், கிராமங்கள் ,இரட்சிக்கப்பட்டு விடும் என்று சொல்லி கைதட்டி கரகோஷத்தை எழுப்புவதும், அல்லேலூயா கோஷத்தை எழுப்புவதோடு அல்ல என்பதை நீங்கள் புரிந்து கொண்டு தெளிவடையுங்கள்.
செயல்படுங்கள்..... புறப்பட்டு போங்கள் என்ற கட்டளையை நினைவு கூறுங்கள்.
கிறிஸ்து உங்களுக்கு அதிக ஞானத்தை தருவாராக ஆமென். கிறிஸ்துவின் பணியில் சகோதரன் சிலுவை ராஜா

Comments