பரிசுத்த ஆவியானவர்

 பரிசுத்த ஆவியானவரின் உபதேசம்.

அப்போஸ்தலர் 5:3-4
"பேதுரு அவனை நோக்கி: அனனியாவே, நிலத்தின் கிரயத்தில் ஒரு பங்கை வஞ்சித்துவைத்து, பரிசுத்த ஆவியினிடத்தில் பொய்சொல்லும்படி, சாத்தான் உன் இருதயத்தை நிரப்பினதென்ன?
அதை விற்குமுன்னே அது உன்னுடையதாயிருக்கவில்லையோ? 
அதை விற்றபின்பும் அதின் கிரயம் உன் வசத்திலிருக்கவில்லையோ? நீ உன் இருதயத்திலே இப்படிப்பட்ட எண்ணங்கொண்டதென்ன? நீ மனுஷரிடத்தில் அல்ல, தேவனிடத்தில் பொய்சொன்னாய் என்றான்.

தேவனுடைய மீட்பு திட்டத்தில் பரிசுத்த ஆவியானவரின் முக்கியத்துவத்தை விசுவாசிகள் அறிந்திருக்க வேண்டியது மிகவும் அவசியம். 
இந்த உலகத்தில் பரிசுத்த ஆவியானவர் இல்லாமல் இருந்தால் என்ன வித்தியாசம் இருக்கும் என்பதைப் பற்றிப் பல கிறிஸ்தவர்களுக்கு எண்ணமே இல்லை.
பரிசுத்த ஆவியானவர் இல்லாமல் இருந்தால் படைப்பு இல்லை, சர்வ சிருஷ்டிகளும் இல்லை, மனித இனம் இல்லை, (ஆதி 1:2 யோபு 33:4)
பரிசுத்த ஆவியானவர் இல்லாமலிருந்தால் பரிசுத்த வேதாகமம் இல்லை. (2பேது 1:21)
புதிய ஏற்பாடு இல்லை (யோவா 14:26 15:26,27;1கொரி 2:10-14)
நற்செய்தி அறிவிக்க வல்லமை இல்லை (அப் 1:8).
பரிசுத்த ஆவியானவர் இல்லாமலிருந்தால் மறுபிறப்பு இல்லை. புதிய ஜீவன் இல்லை. பரிசுத்தம் இல்லை. கிறிஸ்தவர்களே இவ்வுலகத்தில் இல்லை. பரிசுத்த ஆவியானவரை குறித்த சில அடிப்படை சத்தியங்களை இந்த பதிவில் நாம் காண்போம். 

பரிசுத்த ஆவியானவர் என்னும் நபர்:
பரிசுத்த வேதாகமம் முழுவதிலும் பரிசுத்த ஆவியானவர் ஆளத்துவம் உள்ள ஒரு நபராகவே வெளிப்படுத்தப்பட்டுள்ளார். 
(2கொரி 3:17,18;ஏபி 9:14; 1பேது 1:2) அவர் பிதாவையும் குமாரனையும் போல ஒரு தெய்வீக நபர். எனவே நாம் ஒருபோதும் பரிசுத்த ஆவியை ஒரு சக்தி என்று நினைக்கக் கூடாது. அவருக்கு ஆளத்துவத்தின் தன்மைகள் உண்டு. அவர் சிந்திக்கிறார். 
(ரோம 8:27) உணருகிறார். (ரோமர் 15:30) சித்தங் கொள்கிறார்.(1கொரி 12:11)
அவருக்கு நேசிக்கவும், ஐக்கியத்தில் சந்தோசம் கொள்ளவும் முடியும். அவர் பிதாவினால் அனுப்பப்பட்டவர். விசுவாசிகள் அனைவரையும் கிறிஸ்துவின் சமூகத்தில் கொண்டு வந்து அவரோடு நெருங்கிய தொடர்பு கொள்ள பிதாவாகிய தேவன்  அனுப்பினார்.
(யோவா 14:16-18,26) இந்த சத்தியத்தின் அடிப்படையில் நாம் பரிசுத்த ஆவியை ஒரு நபராகவே கருத வேண்டும். 
நமது இருதயங்களில் என்றென்றும் வாழும் நித்திய தேவன் என்றும், அவர் நமது வழிபாட்டுக்குரியவர் என்றும், நமது அன்புக்கும், நம் அர்ப்பணிப்புக்கும் பாத்திரர் என்றும் கருதி, நடந்து கொள்ள வேண்டும். (மாற் 1:11)

பரிசுத்த ஆவியானவரின் பணிகள்:
1) பழைய ஏற்பாட்டில் பரிசுத்த ஆவியானவர் உடைய பணிகளை நான் இன்னொரு முறை எழுதுகிறேன். 
இப்பொழுது புதிய ஏற்பாட்டில் பரிசுத்த ஆவியை பற்றிய வெளிப்பாடு.
பரிசுத்த ஆவியானவர் நமது இரட்சிப்புக்கு காரணமானவர். அவர் நமது பாவங்களை நமக்கு உணர்த்துவார் (யோவா 16:7,8;)
இயேசு கிறிஸ்துவை பற்றிய சத்தியத்தை நமக்கு வெளிப்படுத்துவார் (யோவா 14:16,26)
நமக்கு மறுபிறப்பை தருவார். 
(யோவா 3:3-6)
நம்மை கிறிஸ்துவின் சரீரத்தோடு இணைத்து விடுவார் (1 கொரி 12:13).
நாம் மனமந்திரும்பும் போது பரிசுத்த ஆவியைப் பெறுகிறோம்.(யோவா 3:3-6; 20:22)
தெய்வீகத் தன்மையில் பங்கு பெறுகிறவர்களாய் இருக்கிறோம். (2பேது 1:4)

2)பரிசுத்த ஆவியானவர் நம்மை பரிசுத்தப்படுத்துகிறவர். விசுவாசிகள் மனந்திரும்பி தேவனுடைய பிள்ளைகளாகும் போது பரிசுத்த ஆவியானவர் அவர்களை நிரப்புகிறார். எனவே அவர் அவர்களைப் பரிசுத்தமாக்குகிறவராய் இருக்கிறார்.(ரோம 8:9; 1கொரி 6:19).
நம்முள் பரிசுத்த ஆவியானவர் தங்கிருக்கும்போது அவர் செய்யும் சில காரியங்கள்: அவர் நம்மை பரிசுத்தப்படுத்துகிறார். அதாவது அவர் நம்மை சுத்திகரித்து, நாம் பரிசுத்த வாழ்வு வாழ வேண்டிய அவசியத்தை உணர்த்தி, நம்மைத் தூய வாழ்க்கைக்கு வழி நடத்துகிறார்.(ரோம 8:2-4; கலா 5:16,17; 2தெச  2:13).
நாம் தேவனுடைய பிள்ளைகள் என்று அவர் நம்மிடம் கூறுகிறார் (ரோம 8:16).
நாம் தேவனை ஆராதிக்கும் போது அவர் நமக்கு உதவி செய்கிறார் (அப் 10:48), நம்முடைய ஜெப வாழ்க்கையில் நமக்கு உதவி செய்கிறார். நாம் தேவரிடம் விண்ணப்பங்களை ஏறெடுக்கும் போது அவர் நமக்காகப் பரிந்து பேசுகிறார்
(ரோம 8:26,27).
அவர் கிறிஸ்துவை மகிமைப்படுத்தும் வண்ணம் கிறிஸ்துவின் தன்மைகளை வெளிப்படுத்துகிறார். (கலா 5:22,23 1பேதுரு 1:2)
அவர் நமது தெய்வீக ஆசிரியர். நம்மை எல்லா சத்தியத்துக்குள்ளும் வழி நடத்துகிறவர் அவரே (யோவா 16:13; 14:26; 2கொரி 2:9-16,
அவர் கிறிஸ்துவை நமக்கு வெளிப்படுத்துகிறார். நாம் கிறிஸ்துவோடு நெருங்கி, இணைந்து ஒன்றாய் வாழ வழி காட்டுகிறார் (யோவா 14:16-18; 16:14) தொடர்ந்து தேவனுடைய அன்பை நம்மீது செலுத்துகிறார் (ரோம 5:5)
நமக்கு சந்தோசமும், ஆறுதலும், உதவியும் தருகிறார் (யோவா 14:16;1தெச 1:6).

3) சேவை அல்லது ஊழியத்திற்கு பொறுப்பாளர் அவரே. விசுவாசிகள் ஊழியம் செய்யவும், சாட்சி கூறவும் நமக்கு வல்லமையைத் தருகிறார். பரிசுத்த ஆவியானவரின் இந்த வேலை "பரிசுத்த ஆவியில் ஞானஸ்நானம் பெறுதல்"அல்லது"பரிசுத்த ஆவினால் நிரப்பப்படுதல்"என்பதோடு தொடர்புள்ளது. நாம் ஆவியில் ஞானஸ்நானம் பெறும்போது, நாம் உலகத்தின் முன்பாகவும், திருச்சபையிலும், வல்லமையுடன் ஊழியம் செய்யவும், கிறிஸ்துவுக்குச் சாட்சி கூறவும் தேவையான வல்லமையைப் பெறுகிறோம் 
(அப் 1:8)
இயேசு கிறிஸ்துவின் மீது இறங்கிய அதே தெய்வீக அபிஷேகத்தை நாம் பெறுகிறோம் (யோவா 1:32,33)
அதே அபிஷேகம் சீசர்களின் மேலும் இறங்கியது (அப் 2:4; 1:5)
இந்த அபிஷேகத்தை நாம் பெற்றதனால் தேவனுடைய வார்த்தையைப் பிரசங்கிக்கும் தகுதியைப் பெறுகிறோம். (அப் 1:8; 4:31). அதனால், நம்மால் அதிசயங்களையும், அற்புதங்களையும், அடையாளங்களையும் செய்ய முடியும் (அப் 2:43; 3:2-8; 5:15; 6:8; 10:38;). இக்காலம் முழுவதும் கிறிஸ்தவர்கள் பரிசுத்த ஆவியில் ஞானஸ்நானம் பெறும் அனுபவத்தை பெற்று அனுபவிக்க வேண்டும் என்பதே தேவனுடைய நோக்கமாகும். (அப் 2:39) ஊழியம் செய்யும் பகுதியில் பரிசுத்த ஆவியானவர் திருச்சபையின் தனி நபர்களுக்கும் ஆவிக்குரிய வரங்களை தருகிறார். இதன் மூலம் திருச்சபை பலப்படுத்தப்படும் (1 கொரி 12:14).
போதிக்கப்படும் இந்த கிருபை வரங்கள் தனி நபர்கள் மூலமாகப் பரிசுத்த ஆவியானவரின் வெளிப்பாடாக இருக்கும். இதன் மூலம் கிறிஸ்துவின் பிரசன்னம், அன்பு, சத்தியம், நீதி நியாயங்கள், ஆகியவை பொது நன்மைக்காக விசுவாசிகளின் ஐக்கியத்திற்கு வழிகோலுகிறது.(1கொரி 12:7-11)

4) கிறிஸ்துவின் ஒரே சரீரத்தோடு விசுவாசிகளைக் கூட்டி இணைக்கும் நபராகப் பரிசுத்த ஆவியானவர் செயல்படுகின்றார்.(1கொரி 12:13).
திருச்சபையில் வாழ்கிறார். 
(1கொரி 3:16)
திருச்சபைகளை கட்டி எழுப்புகிறார். (எபே 2:22)
திருச்சபையில் நடக்கும் ஆராதனைக்கு உயிரூட்டுகிறார்.(பிலி 3:3),
திருச்சபையின் திருப்பணியை வழிகாட்டி நடத்துகிறார்.(அப் 13:2,4),
திருப்பணிக்கென்று ஆட்களை நியமிக்கின்றார். (அப் 20:28),
திருச்சபைக்கு வரங்களைத் தருகிறார்.(1கொரி 12:1-11),
திருச்சபையின் போதகர்களை அபிஷேகம் பண்ணுகிறார். (அப் 2:4; 1கொரி 2:4),
சுவிசேஷத்தை பாதுகாக்கிறார்.(2தீமோ 1:14)
திருச்சபையின் நீதியை வளர்க்கிறார். (யோவா 16:8; 1கொரி 3:16; 16:18-20)

பரிசுத்த ஆவியானவரின் பல்வேறு கிரியைகள் ஒன்றையொன்று நிறைவு படுத்துவதாக அமையுமேயன்றி ஒன்றுக்கொன்று மாறுபட்டதாகவோ, முரண்படுவதாகவோ இருப்பதில்லை.அதே வேளையில் பரிசுத்த ஆவியின் பணிகளின் அம்சங்கள் ஒன்றோடுடொன்று பின்னிப் பிணைந்துள்ளன. அவற்றைப் பிரிக்க முடியாது.
நாம் பார்த்த நான்கு அம்சங்களிலும் கூட்டாக ஈடுபடாமல் ஒன்றை மாத்திரம் தனித்து அனுபவிக்க முடியாது.
அ) கிறிஸ்துவில் புது வாழ்வின் நிறைவு. 

ஆ) ஒரு வாழ்க்கை முறையாக நீதியின் வாழ்க்கை. 

இ) நம் ஆண்டவருக்கு சாட்சி கூறுவதற்கு வல்லமை அல்லது அவருடைய சரீரமாம் திருச்சபையோடு ஐக்கியம் கொள்வது ஆகியவை. 

உதாரணமாக, 
நமக்குள் நீதியை உருவாக்கும் பரிசுத்த ஆவியானவரின் வேலையும் வேதாகமம் சத்தியத்தைப் பற்றிய அறிவுக்குள் வழிநடத்தி அதற்கு அர்ப்பணிக்கச் செய்யவும் நம்மைத் தூண்டும் அவருடைய கிரியையும் இல்லாமல் பரிசுத்த ஆவியின் ஞானஸநானம் தனித்து நிற்க முடியாது.

ஒரு முறைக்கு இருமுறை வேதத்தை கையில் வைத்துக்கொண்டு வாசித்தால் நிச்சயமாகவே ஆதி அப்போஸ்தலர் நாட்களில் நடந்த அற்புதங்கள் உங்கள் வாழ்க்கையில் , ஊழியத்தில்,நிச்சயமாக நடக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. 
கர்த்தர் உங்களை ஆசீர்வதித்து பயன்படுத்துவாராக ஆமென் 

கிறிஸ்துவின் பணியில் சகோதரன் சிலுவை ராஜா தொடர்புக்கு:9841711591

Comments

Popular posts from this blog

பிரபல ஊழியர்களை தேடி....

மற்றவர்களை பார்க்க வேண்டாம்.

திருச்சபை