இயேசுவோடு சாத்தான் பேசினான்
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் தெரிந்து கொள்ளப்பட்ட அனைத்து சகோதர, சகோதரிகளுக்கும் இந்த உயர்ந்த முத்துக்கள் மூலமாக வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன், கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமென்.
இந்த நாளில் ஏவாளோடு பேசி அவள் மூலமாக ஆதாமையும் வீழ்த்தி பின்பு முழு உலகமும் சபிக்கப்படுவதற்கு சாத்தான் காரணமாக இருந்தான்.
ஆகையால்தான் பரிசுத்த வேதாகமம் நமக்கு எச்சரிப்பை கொடுக்கிறது. முந்தின ஆதாமை வீழ்த்தியது போல, பிந்தின ஆதாமாகிய
இயேசு கிறிஸ்துவையும் தன்னுடைய பேச்சினால் வீழ்த்துவதற்கு சாத்தான் வந்தான்.(மத் 4:1-11; லூக் 4:1-13;)
பரிசுத்த ஆவியானவரால் நடத்தப்பட்ட இந்த சோதனை எதற்காக ?
அவர் தேவனுடைய குமாரன் என்று நிரூபிக்கப்பட வேண்டும்.
அவர்(இயேசு கிறிஸ்து) இரவும் பகலும் நாற்பதுநாள் உபவாசமாயிருந்தபின்பு, அவருக்குப் பசியுண்டாயிற்று.
அப்பொழுது சோதனைக்காரன்(சாத்தான்) அவரிடத்தில் வந்து: நீர் தேவனுடைய குமாரனேயானால், இந்தக் கல்லுகள் அப்பங்களாகும்படி சொல்லும் என்றான்.(மத் 4:2-3)
1), ,நீர் தேவனுடைய குமாரனேயானால் எனக் கேள்வியை எழுப்ப காரணம்
(மத் 3:16,17;)இல் அவர் திருமுழுக்கு பெற்று பரிசுத்த ஆவியின் வல்லமையை பெற்று கரை ஏறியவுடன் பிதாவாகிய தேவன் இவர் என்னுடைய நேசகுமாரன் இவரில் பிரியமாய் இருக்கிறேன் என்று சொன்ன சத்தத்தை சாத்தான் கேட்டிருக்க வேண்டும். ஆதலால்,நீர் தேவனுடைய குமாரனேயானால், இந்தக் கல்லுகளை அப்பங்களாகும் படி சொல்லும் என்றான்.
உடனே இயேசு கிறிஸ்து நான் தேவனுடைய குமாரன்தான் என்று கல்லுகளை அப்பங்களாகும்படி செய்யவில்லை, மாறாக தேவனுடைய வார்த்தையை கொண்டு பேசினார்.
அவர்(சாத்தானுக்கு) பிரதியுத்தரமாக: மனுஷன் அப்பத்தினாலேமாத்திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறதே என்றார்.
(மத்தேயு 4:4)
2), அப்பொழுது பிசாசு அவரைப் பரிசுத்த நகரத்திற்குக் கொண்டுபோய், தேவாலயத்து உப்பரிக்கையின்மேல் அவரை நிறுத்தி, நீர் தேவனுடைய குமாரனேயானால் தாழக்குதியும்; ஏனெனில், தம்முடைய தூதர்களுக்கு உம்மைக்குறித்துக் கட்டளையிடுவார்; உமது பாதம் கல்லில் இடறாதபடிக்கு, அவர்கள் உம்மைக் கைகளில் ஏந்திக்கொண்டுபோவார்கள் என்பதாய் எழுதியிருக்கிறது என்று சொன்னான்.
(மத்தேயு 4:5-6)
நீர் தேவனுடைய குமாரனேயானால், தேவாலயத்தின் உச்சியிலிருந்து இயேசு கிறிஸ்துவை குதிக்கும்படியாக சொன்னது மாத்திரமல்ல,
இங்கே பிசாசு 😈 (சங்கீதம் 91:12,) ஆம் வசனத்தை. (மத் 4:6) இல் இயேசு கிறிஸ்துவிடம் பேசுகிறான்.
சாத்தானும் பைபிள் வசனத்தை பேசுவான் என்பது இங்கே நிரூபணம் ஆகிறது.
பவுல் அப்போஸ்தலன் மூலமாக பரிசுத்த ஆவியானவர் சாத்தானின் உபதேசம் என்று சொல்லுகிறார். அதற்கு அநேகர் செவி கொடுத்து விசுவாசத்தை விட்டு விலகிப் போனார்கள் ( 1தீமோத் 4:1)
பிசாசு சில கள்ள ஊழியர்களை பயன்படுத்தி ஒரு முறையாவது எங்கள் இடத்திற்கு வந்து போங்கள், ஒருமுறை எங்கள் ஊழியத்தை வந்து பாருங்கள், உங்கள் சாட்சிகளை எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள், கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார் என அழைப்பார்கள் ஒருமுறை நீங்கள் போய்விட்டால் அடுத்த முறை நீங்கள் செல்லும் திருச்சபைக்கு ஒழுங்காக செல்ல முடியாது, உங்களால் ஜெபிக்க முடியாது அவர்களுடைய நிகழ்ச்சியை நீங்கள் பார்த்துக் கொண்டு காலத்தையும் நேரத்தையும் வீணடிப்பீர்கள் உங்களால் வேதம் வாசிக்க முடியாது. உங்களால் ஊழியம் செய்ய முடியாது. என்பதை புரிந்து கொள்ளுங்கள் இது தான் பிசாசின் தந்திரமான பேச்சுக்களும், வஞ்சனைகளும் ஆகும்.
இயேசு கிறிஸ்து அவனுக்கு சரியான பதிலை சொன்னார் வேதத்தின் மூலமாக;
அதற்கு இயேசு: உன் தேவனாகிய கர்த்தரைப் பரீட்சை பாராதிருப்பாயாக என்றும் எழுதியிருக்கிறதே என்றார்.(மத்தேயு 4:7)
3), மறுபடியும், பிசாசு அவரை மிகவும் உயர்ந்த மலையின்மேல் கொண்டுபோய், உலகத்தின் சகல ராஜ்யங்களையும் அவைகளின் மகிமையையும் அவருக்குக் காண்பித்து:
நீர் சாஷ்டாங்கமாய் விழுந்து, என்னைப் பணிந்துகொண்டால், இவைகளையெல்லாம் உமக்குத் தருவேன் என்று சொன்னான்.
(மத்தேயு 4:8-9)
இங்கே பிசாசு சொல்லும் வார்த்தைகளை கவனித்து பாருங்கள். உலகத்தின் சகல ராஜ்யங்களையும் அவருக்கு காண்பித்து; நீர் சாஷ்டாங்கமாய் விழுந்து என்னை பணிந்து கொண்டால் இவைகளையெல்லாம் உமக்கு தருவேன் என்று சொன்னான்.
கர்த்தருக்கு ஆராதனை செய்து கொண்டிருந்த லூசுபர் தேவனுக்கு மேலாக என் சிங்காசனத்தை உயர்த்துவேன் என்ற எண்ணம் அவனுக்குள் வந்த பொழுது தேவன் அவனை பூமியிலே விழத் தள்ளினார். (ஈசா 14:12-15) வரை வாசித்து பாருங்கள்.
சாத்தானாக மாறிய லூசிபர் சர்ப்பத்தின் மூலமாக ஏவாளை வஞ்சித்து அவள் மூலமாக ஆதாமையும் ஏமாற்றி அவனுடைய ராஜ்யத்தையும், அதிகாரத்தையும், ஆளுமையையும் எடுத்துக் கொண்டான்.
லூக்கா மூலமாக பரிசுத்த ஆவியானவர் சொல்லுவதை நாம் கவனிக்க வேண்டும்.
எல்லாவற்றின்மேலுமுள்ள அதிகாரத்தையும் இவைகளின் மகிமையையும் உமக்குத் தருவேன்,
இவைகள் எனக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டிருக்கிறது; எனக்கு இஷ்டமானவனுக்கு இவைகளைக் கொடுக்கிறேன்.
நீர் என்னைப் பணிந்துகொண்டால் எல்லாம் உம்முடையதாகும் என்று சொன்னான். (லூக் 4:6-7)
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கு ஆராதனை செய்து வந்த லூசிபர், இப்போது சாத்தானாக மாறி கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை தன்னை ஆராதிக்க சொல்லுவதை கவனித்து பாருங்கள்.
தேவன் மறுபடியுமாக வேத வசனத்தின் மூலமாக அவனை விரட்டினார்.
இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: எனக்குப் பின்னாகப்போ சாத்தானே, உன் தேவனாகிய கர்த்தரைப் பணிந்துகொண்டு, அவர் ஒருவருக்கே ஆராதனைசெய்வாயாக என்று எழுதியிருக்கிறதே என்றார்.
(லூக்கா 4:8)
அதே நேரத்தில் (ஆதியாகமம் 3:15 இல்) சொல்லப்பட்ட வாக்குத்தத்தம் நிறைவேறும் படியாக இயேசு கிறிஸ்து காத்திருந்து தம்முடைய சிலுவையின் மரணத்தால் சாத்தானின் தலையை நசுக்கி ஆதாம் இழந்து போன அதிகாரங்களையும், வல்லமையையும், ஆளுமையையும், கைப்பற்றி சாத்தானை ஜெயித்தார்.
(மத் 28:18ல்) வாசிக்கவும். வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரம் எனக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது என இயேசு கிறிஸ்து சொன்னார்.
முக்கியமாக கவனிக்க வேண்டியது, உன் தேவனாகிய கர்த்தரை பணிந்து கொண்டு, அவர் ஒருவருக்கே ஆராதனை செய்வாயாக,
அநேக தேவனுடைய ஜனங்கள் குறிப்பிட்ட ஊழியர்களையும், குறிப்பிட்ட இடங்களையும், ஊர்களையும், இஸ்ரேல் நாடுகளையும், புனிதமாக தெய்வீகமாக நினைத்து வழிபாடு செய்கிறார்கள்.
காரணம் என்ன?
ஆசிர்வாதங்களை பெற்றுக் கொள்வதற்காக,
வேதம் சொல்லுகிறது கர்த்தரை தேடுகிறவர்களுக்கோ ஒரு நன்மையும் குறையும் படாது.
கர்த்தரை தேடாமல், கர்த்தரை பணந்து கொள்ளாமல், கர்த்தருக்கு ஆராதனை செய்யாமல், சபை கூடி வருதலை விட்டு விட்டு ஆசீர்வாதத்துக்காக அங்குமிங்கும் ஓடினால் ஆசீர்வாதம் கிடைக்குமா என்ன?
இயேசு கிறிஸ்துவிடம் பேசிய சாத்தான் உன்னிடத்திலும் பேசுவான் வசனத்தை கொண்டே பேசுவான்.
ஆகையால் வேதத்தை சரியாகப் புரிந்து கொண்டு தேவனோடு வாழ்வதற்கும், அவரை பணிந்து கொள்வதற்கும், அவருக்கு ஆராதனை செய்வதற்கும், நம்மை ஆயத்தப்படுத்துவோம். கர்த்தர் பெரிய காரியங்களை செய்வாராக ஆமென்.
கிறிஸ்துவின் பணியில் சகோதரன் சிலுவை ராஜா.
Comments