இயேசு கிறிஸ்துவும், பரிசுத்த ஆவியானவரும்.
இயேசு கிறிஸ்துவும், பரிசுத்த ஆவியானவரும்.(லூக்கா 11:13)
பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்க அறிந்திருக்கும்போது, பரமபிதாவானவர் தம்மிடத்தில் வேண்டிக்கொள்ளுகிறவர்களுக்குப் பரிசுத்த ஆவியைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா என்றார்.
இயேசு கிறிஸ்து பரிசுத்த ஆவியானவருடன் ஒரு சிறப்பான தொடர்பு கொண்டிருந்தார். அந்தத் தொடர்பு நம்முடைய தனிப்பட்ட வாழ்க்கைக்கு முக்கியமானதாகும். அதன் செயல்முறைக் கருத்துக்கள் பற்றியும் விளக்குகிறது. இப்பதிவு.
பழைய ஏற்பாட்டு தீர்க்க தரிசனம்:
பழைய ஏற்பாட்டுத் தீர்க்கதரிசனங்கள் வரப்போக மேசியாவைக் குறித்து பல காரியங்களைச் சொல்லி உள்ளன. அவற்றில் பல அவர் பரிசுத்த ஆவினால் நிரப்பப்பட்டு, வல்லமை நிறைந்தவராயிருப்பார் என்று கூறுகின்றன.
(ஏசா 11:2; 61:1-3) நாசரேத் ஊரின் ஜெப ஆலயத்தில் இயேசு கிறிஸ்து (ஏசா 61:1,2 ஆகிய வசனங்களை வாசித்த போது "இன்று நீங்கள் கேட்ட வேத பகுதி நிறைவேறிவிட்டது"
என்றார்.(லூக் 4:18-21).
இயேசு கிறிஸ்துவின் பிறப்பு:
தேவனுடைய ஒரு அற்புதக்
கிரியையினால் இயேசு இந்த உலகத்தில் அவதரித்தார் என்று மத்தேயு, லூக்கா ஆகிய இரு நற்செய்தி நூல்களும், வெளிப்படையாகவும், தவறின்றியும் எடுத்துக் கூறுகின்றன.
அவர் பரிசுத்த ஆவியால் உற்பத்தியாகி, கன்னி மரியாளிடம் பிறந்தார் (மத் 1:18,23;லூக் 1:27) அற்புதமாக கருவுற்றதனால் இயேசு*"பரிசுத்தமாய்"*இருந்தார். (லூக்1:35) அதாவது அவரின் பாவத்தின் எந்த சுவடும் இல்லை. இதனால் நம் பாவங்களை அவர் தம்மில் ஏற்றுக் கொண்டதன் மூலம் நமக்கு பாவப் பரிகாரம் செய்ய அவரால் முடிந்தது.
(மத் 1:23;) ஒரு பரிபூரணமான,
பாவமற்ற இரட்சகர் இல்லாமல் நம்மால் இரட்சிப்பையும் மீட்பையும் அனுபவிக்க முடியாது.
இயேசு கிறிஸ்துவின் ஞானஸ்நானம்:
இயேசு யோவானிடம் ஞான ஸ்நானம் பெற்றபோது, அவர் பரிசுத்த ஆவினால் அபிஷேகம் பண்ண பட்டார். (மத் 3:16,17; லூக் 3:21,22;) அவர் பின்னால் தமது சீசர்களுக்குப் பெந்தெகோஸ்தே நாளில் பரிசுத்த ஆவினால் ஞானஸ்நானம் கொடுத்தார். திருச்சபைக் காலம் முழுவதும் அப்படியே செய்வார்.
(லூக் 3:16;அப் 1:4,5; 2:33,38,39;) பரிசுத்த ஆவியானவர் அவர் மேல் புறாவை போல் வந்து இறங்கினார்.
அவரை ஊழியத்தையும், இரட்சிப்பின் கிரியையும் செய்வதற்குரிய வல்லமையினால் நிரப்பினார். நமது ஆண்டவர் தண்ணீரில் ஞானஸ்தானம் பெற்ற பின்பு வனாந்தரத்துக்கு போனபோது பரிசுத்த ஆவினால் நிறைத்திருந்தார்.(லூக் 4:1) நமது ஆண்டவர் இயேசு பெற்றது போல, பரிசுத்த ஆவினால் மறுபிறப்படைந்த அனைவரும் பரிசுத்த ஆவினால் ஞானஸ்நானம் பெறும் அனுபவத்தை அடைய வேண்டும். இது அவர்களது வாழ்க்கையில் அவர்கள் ஊழியம் செய்வதற்கு தேவையான வல்லமையைத் தரும்( அப் 1:8).
சாத்தான் இயேசு கிறிஸ்துவை சோதித்தல்
இயேசு கிறிஸ்து ஞானஸ்நானம் பெற்றவுடன்,
பரிசுத்த ஆவியானவரால் வழிநடத்தப்பட்டு, வனாந்தரத்துக்குச் சென்றார். அங்கே சாத்தானால் இயேசு 40 நாள் சோதிக்கப்பட்டார்.
(லூக் 4:1,2) பரிசுத்த ஆவியானவர் அவருக்குள் நிறைந்திருந்தபடியால் அவர் சாத்தானை எதிர்த்து வெற்றிக்கொள்ள முடிந்தது.
தமக்கு ஏற்பட்ட சோதனைகளை முறியடித்தார். இதுபோலவே, பரிசுத்த ஆவியின் வல்லமையின்றி நாம் ஆவிக்குறிய பொல்லாத ஆவிகளையும், பாவத்தையும் எதிர்க்க இயலாது என்பதே தேவனின் நோக்கம். நாம் பரிசுத்த ஆவினால் நிறைந்தவர்களாய், அவருடைய வழி நடத்தலின்படி சாத்தானை எதிர்த்தால் வெற்றியடைவோம். தேவனுடைய பார்வையில் நாம் பரிசுத்த ஆவினால் நிறைந்தவர்களாய், அவருடைய வல்லமையுடன் வாழவில்லையானால் நாம் தேவனுடைய பிள்ளைகள் அல்ல.
இயேசு கிறிஸ்துவின் ஊழியம்
தம்மீது பரிசுத்த ஆவி வந்து இறங்கியதன் மூலம் ஏசாயாவின் தீர்க்கதரிசனம் நிறைவேறியது என்று இயேசு குறிப்பிட்டார்.
இதே பகுதியை சுட்டிக்காட்டி அவர் தமது பணி எத்தகையதாய் இருக்கும் என்று காட்டினார்.
நற்செய்தியை பிரசிங்கித்தல், நோய்களைக் குணமாக்குதல், பாவத்தின் கட்டுகளில் இருந்து மக்களை விடுவித்தல், ஆகியவையே அவருடைய ஊழியத்தின் முக்கிய பகுதிகள்.
(ஏசா 61:1,2; லூக் 4:16-19)
1) பரிசுத்த ஆவியானவர் இயேசுவை அபிஷேகித்தார்.
அவர் தமது ஊழியத்தைச் செய்வதற்கு தேவையான வல்லமையைக் கொடுத்தார்.
இயேசுவே தேவன். (யோவா 1:1) ஆனால் அதே வேளையில் அவர் மனிதனாகவும் இருந்தார். (1தீமோ 2:5;)
ஒரு மனிதன் என்ற நிலையில் தேவனுக்கு முன்பாகத் தமது பொறுப்புகளை செய்து நிறைவேற்ற பரிசுத்த ஆவியின் உதவியும், வல்லமையும் தேவையாயிருந்தது.(மத் 12:28
லூக் 4:1-14; ரோமர் 8:11;எபி9:14;)
2) ஆவினால் அபிஷேகம் பெற்ற ஒரு மனிதனாகவே இயேசுவினால் வாழவும், ஊழியம் செய்யவும், நற்செய்தியை அறிவிக்கவும் முடிந்தது. (அப் 10:38)
இவ்விஷயத்தில் அவர் கிறிஸ்தவனுக்கு ஒரு பரிபூரணமான முன்மாதிரியாய் உள்ளார்.
ஒவ்வொரு விசுவாசியும், பரிசுத்த ஆவியின் நிறைவை பெற்றுக் கொள்ள வேண்டும். (அப் 1:8; 2:4).
பரிசுத்த ஆவியைக் குறித்த இயேசுவின் வாக்குத்தத்தம்:
யோவான் ஸ்நானன் இயேசு கிறிஸ்து தம்மை பின்பற்றுகிறவர்களுக்கு பரிசுத்த ஆவினால் ஞானஸ்நானம் கொடுப்பார் என்று தீர்க்கதரிசனம் உரைத்திருந்தான்.(மத் 3:11;மாற் 1:8 லூக் 3:16;யோவா 1:33) இந்த தீர்க்க தரிசனத்தை இயேசு கிறிஸ்து மீண்டும் எடுத்துரைத்தார்.(அப் 1:5; 11:16;
லூக் 11:13 ல்) இயேசு தம்மிடம் கேட்கும் யாவருக்கும் பரிசுத்த ஆவியை தந்தருளுவதாகக் கூறினார். அந்த வசனத்தின் பின்குறிப்புகளை பார்க்கவும். இந்த எல்லா வசனங்களும், தம் பரலோகம் பிதாவின் பிள்ளைகளாக இருக்கும் அனைவருக்கும் பரிசுத்த ஆவின் நிறைவே தருவதாக கிறிஸ்து வாக்குத்தத்தம் செய்துள்ளதை குறிப்பிடுகின்றன. இந்த வாக்குத்தத்தம் முதலில் பெந்தகோஸ்தே நாளில் பரிசுத்த ஆவியானவர் ஊற்றப்பட்ட போது நிறைவேறியது. (அப் 2:4) அவருடைய சீஷர்களாக மாறி பரிசுத்த ஆவியினால் ஞானஸ்நானம் வேண்டுமென்று கேட்கிற அனைவருக்கும் இந்த வாக்குதத்தம் உரியது (அப் 1:5;2:39;)
இயேசுவின் உயிர்த்தெழுதல்:
பரிசுத்த ஆவியின் வல்லமையினால், இயேசு மரித்தோரின் கல்லறையில் இருந்து உயிரோடு எழுப்பப்பட்டார். இதன் மூலம் தம்மைத் தேவனுடைய குமாரன், மேசியா என்று நிரூபித்தார்.(ரோம 1:3,4) வசனங்களில் பரிசுத்த நிறைந்த ஆவியினால் (பரிசுத்த ஆவி) இயேசு வல்லமையுள்ள"தேவனுடைய குமாரன்"என்று அறிவிக்கப்பட்டார். (ரோம 8:11 ல்)"இயேசுவை மரித்தோரிலிருந்து உயிரோடு எழுப்பின ஆவி"என்று உள்ளது. இவ்வாறு தமது உயிர்த்தெழுதலுக்கும் இயேசு பரிசுத்த ஆவியை சார்ந்து இருந்தார். இதுபோல விசுவாசிகளும் தங்களுடைய ஆவிக்குரிய வாழ்க்கை இப்போது புதுப்பிக்கப்படவும், எதிர்காலத்தில் சரீர உயிர்த்தெழுதல் ஏற்படவும் பரிசுத்த ஆவியையே சார்ந்து இருக்க வேண்டும்.
இயேசு பரலோகத்திற்கு ஏறி செல்லுதல்:
தமது உயிர்த்தெழுதலுக்குப் பின் இயேசு பரலோகத்துக்கு ஏறிச்சென்று தன் பிதாவின் வலது வருஷத்தில் உட்கார்ந்தார். அங்கிருந்து தன் பிதாவுடன் தேவனுடைய ராஜ்யத்தை ஆளுகை செய்கிறார். (மாற் 16:19;லூக 24:51;அப் 1:9-11;எபே 4:8-10) இந்த மகிமையுள்ள உயர்ந்த பதவியிலிருந்து கொண்டு, தம் பிதாவிடம் இருந்து பரிசுத்த ஆவியை பெற்று பெந்தகோஸ்தே நாளில் தமது மக்கள் மேல் ஊற்றினார்.
(அப் 2:33;யோவா 16:5-14) இதன் மூலம் தாமே தீர்க்கதரிசி, ஆசாரியன், ராஜா என்பதை உறுதிப்படுத்தினார். பெந்தகோஸ்தே நாளில் பொழியப்பட்ட பரிசுத்த ஆவி, இன்னும் தொடர்ந்து பொழியப்படுகிறது. விஜய் உயர்த்தப்பட்ட மகிமையுள்ள இரட்சகரின் பிரசன்னமும், அதிகாரமும் இன்னும் தொடர்ந்து நம்மில் செயல்படுகிறது என்பதற்கு அத்தாட்சி ஆகும்.
இயேசு தம் மக்களுக்கு சமீபமாயிருத்தல்:
அவருடைய இன்றைய வேலைகளில் ஒன்று பரிசுத்த ஆவியானவர் கிறிஸ்துவினுடையதை எடுத்து விசுவாசிகளுக்கு வெளிப்படுத்துவதாகும். (யோவா 16:14,15;) அதாவது கிறிஸ்துவில் ஏற்படும் இரட்சிப்பின் மீட்புப் பலன்கள் நமக்குப் பரிசுத்த ஆவியானவரால் தரப்படுகிறது.(ரோம 8:14-16 கலா 4:6) இவற்றில் மிகவும் முக்கியமானது கிறிஸ்து நமக்கு மிகவும் அருகாமையில் இருப்பதாகும்.
(யோவா 14:18;) பரிசுத்த ஆவியானவர், கிறிஸ்துவின் அருகாமை, அவருடைய அன்பு, ஆசிர்வாதம், மன்னிப்பு, குணமாக்குதல் இவ்வாறு அவரிடம் இருந்து நாம் பெறும் எல்லா நன்மைகளையும், ஆசிர்வாதங்களையும் விசுவாசத்தின் மூலம் நமக்கு உணர்த்துகிறார். இதுபோலவே பரிசுத்த ஆவியானவர் நம்முடைய இருதயங்கள் அன்பின் மூலம் ஆண்டவரைத் தேடவும், ஜெபிக்கவும், ஆராதிக்கவும் நம்மை தூண்டுகிறார். (யோவா 4:23,24; 16:14)
இயேசு தமது மக்களுக்காக திரும்பி வருதல்:
தம்மிடம் உண்மையான விசுவாசம் உள்ள பரிசுத்தவான்கள் அனைவரையும் தம்முடன் எப்போதும் தங்கி இருக்கச் சேர்த்துக் கொள்ளும்படி இயேசு மீண்டும் வரப்போவதாக வாக்களித்திருக்கிறார்.(யோவா 14:3;1தெச 4:13-18). இதுவே விசுவாசிகள் அனைவரது ஆசீர்வதிக்கப்பட்ட நம்பிக்கையாகும். (தீத் 2:13) நாம் இதையே விரும்பி, இதற்காகவே ஜெபிக்கிறோம்.
(2தீமோ 4:8) நமது ஆண்டவரின் வருகைக்காக தேவனிடம் வேண்டுதல் செய்யும்படி பரிசுத்த ஆவியானவர் நம்மைத் தூண்டுகிறார் என்று பரிசுத்த வேதாகமம் வெளிப்படுத்துகிறது. கிறிஸ்து மீண்டும் வருவது வரை நமது இரட்சிப்பு பூரணமடையாது என்று பரிசுத்த ஆவியானவரே அறிவிக்கிறார்.(ரோம 8:23) பரிசுத்த வேதாகமத்தின் கடைசி பகுதியில் பரிசுத்த ஆவியானவர் கீழ்க்கண்ட வார்த்தைகளை எழுத ஏவியுள்ளார்."ஆமென். கர்த்தராகிய இயேசுவே வாரும்." (வெளி 22:20).
ஆகையால் பரிசுத்தர் ஆவியானவரை துக்கப்படுத்தாமல் சரியான விதத்தில் வேதகமாத்தின் உதவியோடு கற்றுக் கொள்ளுங்கள். வேதத்தை வாசிக்காமல் ஒருநாளும் படுக்கைக்கு செல்லாதீர்கள். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார். ஆமென்
கிறிஸ்துவின் பணியில் சகோதரன்: சிலுவை ராஜா
Comments