ஜெபமும் சுவிசேஷமும் இணையம் போது
திருவிலக்கியத்தின் (பைபிள்) ஆழமான சத்தியங்களை நாம் ஆராயும்போது, ஒரு மனிதனின் இரட்சிப்பிற்கு விசுவாசியின் "ஜெபமும்" தேவனுடைய "சுவிசேஷமும்" தனித்தனியாகச் செயல்படாமல், ஒன்றோடொன்று இணைந்து, ஒன்றையொன்று சார்ந்து செயல்படுவதைக் காண முடிகிறது. ஜெபம் என்பது தேவனுடைய கிருபையையும் வல்லமையையும் பூமியில் இறக்கும் பரலோகத் திறவுகோலாக இருக்கிறது; சுவிசேஷம் என்பது மனிதனுடைய இருதயத்தை மாற்றி அவனுக்குள் விசுவாசத்தை உருவாக்கும் தேவபெலனாக இருக்கிறது.
இதனை இன்னும் எளிமையாகப் புரிந்துகொள்ள, ஒரு நிலத்தில் பயிர் செய்வதை நாம் உதாரணமாகக் கூறலாம். நிலத்தை உழாமல் வெறும் விதையை மட்டும் விதைத்தால் அது முளைக்காது; அதேபோல் நிலத்தை நன்றாக உழுதுவிட்டு விதையை விதைக்காமல் விட்டாலும் அங்கே அறுவடை இருக்காது. இங்கு "ஜெபம்" என்பது கடினமான மனித இருதயங்களாகிய நிலத்தை உழுது பண்படுத்துவதற்கும், "சுவிசேஷம்" என்பது அந்தப் பதப்படுத்தப்பட்ட நிலத்தில் விதைக்கப்படும் ஜீவனுள்ள தேவ வசனத்தின் விதைக்கும் ஒப்பாக இருக்கிறது.
எனவே, விசுவாசியின் ஜெபம் ஆண்டவரை அறியாதவர்களின் மனக்கண்களைத் திறந்து சுவிசேஷத்திற்கான வழியை எப்படி ஆயத்தம் செய்கிறது, மற்றும் பிரசங்கிக்கப்படும் சுவிசேஷம் அவர்களின் இருதயத்தை எப்படி இரட்சிப்பிற்குள் நடத்துகிறது என்பதைப் பின்வரும் வேதாகமக் குறிப்புகள் மற்றும் வசன ஆதாரங்களின் அடிப்படையில் விரிவாகக் காண்போம்.
1). ஜெபம் கதவைத் திறக்கிறது, சுவிசேஷம் உள்ளே நுழைகிறது
ஒருவருடைய இருதயம் சுவிசேஷத்தை ஏற்றுக்கொள்ளும் படியாக மாறுவதற்கும், சுவிசேஷம் அறிவிப்பதற்கான சூழ்நிலை உருவாவதற்கும் ஜெபம் அடித்தளமாக அமைகிறது.
கொலோசெயர் 4:3 – "தேவன் திருவசனத்தின் கதவை எங்களுக்குத் திறந்தருளும்படி, எங்களுக்காகவும் ஜெபியுங்கள்."
விளக்கம்:
கதவு திறக்கப்படுவது ஜெபத்தால் நடக்கிறது; திறக்கப்பட்ட கதவு வழியே உள்ளே செல்வது தேவனுடைய வசனம் (சுவிசேஷம்).
2). ஜெபம் மனக்கண்களைத் திறக்கிறது, சுவிசேஷம் ஒளியைத் தருகிறது
இயேசுவை அறியாதவர்களின் மனதைச் சாத்தான் குருடாக்கி வைத்துள்ளான். ஜெபம் அந்த குருடாட்டத்தை நீக்குகிறது; சுவிசேஷம் அவர்களுக்கு வழிகாட்டுகிறது.
2 கொரிந்தியர் 4:4 – "இவ்வுலகத்தின் தேவனானது, விசுவாசியாதவர்களுடைய மனதைக் குருடாக்கினான்."
விளக்கம்: விசுவாசியின் ஜெபம் சாத்தானின் இந்த குருட்டுத் தனத்தை உடைக்கிறது. அப்போதுதான் பிரசங்கிக்கப்படும் சுவிசேஷ ஒளியை அவர்களால் காண முடிகிறது.
3). ஜெபம் விதையைத் தேடுகிறது, சுவிசேஷம் விதையாய் மாறுகிறது
இயேசு கிறிஸ்து சுவிசேஷத்தை ஒரு விதைக்கு ஒப்பிடுகிறார். விதை இருதயத்தில் விழ வேண்டுமானால், நிலம் பண்படுத்தப்பட வேண்டும்.
லூக்கா 8:11 –
"அந்த உவமையின் கருத்தாவது: விதை தேவனுடைய வசனம்."
விளக்கம்:
விசுவாசி செய்யும் ஜெபம் என்பது கடினமான நிலத்தை (இருதயத்தை) உழுது பண்படுத்துகிறது. சுவிசேஷம் என்ற விதை அந்தப் பதப்பட்ட நிலத்தில் விழுந்து முளைத்து, இரட்சிப்பைத் தருகிறது.
4). ஜெபம் ஆட்களை அனுப்புகிறது, சுவிசேஷம் இரட்சிக்கிறது
ஆண்டவரை அறியாதவர்களிடம் யாராவது போய் பேச வேண்டும். அந்த ஆட்களைத் தேவன் அனுப்புவது ஜெபத்தின் மூலமாகவே.
மத்தேயு 9:38 – "அறுப்புக்குரிய எஜமான் தமது அறுப்புக்கு வேலையாட்களை அனுப்பும்படி அவரை வேண்டிக்கொள்ளுங்கள் (ஜெபியுங்கள்)."
விளக்கம்:
நாம் செய்யும் ஜெபம் சுவிசேஷகர்களை உருவாக்குகிறது. அவர்கள் போய் அறிவிக்கும் சுவிசேஷம் மக்களை இரட்சிக்கிறது.
5). பவுலின் ஜெபமும் இஸ்ரவேலரின் இரட்சிப்பும்
அப்போஸ்தலனாகிய பவுல் சுவிசேஷத்தை உலகமெங்கும் அறிவித்தவர். ஆனால், அவர் ஜெபத்தின் முக்கியத்துவத்தை ஒருபோதும் குறைக்கவில்லை.
ரோமர் 10:1 – "சகோதரரே, இஸ்ரவேலர் இரட்சிக்கப்பட வேண்டும் என்பதே என் இருதயத்தின் விருப்பமும் நான் தேவனை நோக்கிச் செய்யும் ஜெபமுமாயிருக்கிறது."
விளக்கம்:
பவுல் இஸ்ரவேலருக்கு சுவிசேஷம் அறிவித்தது மட்டுமல்லாமல், அவர்கள் இரட்சிக்கப்பட இடைவிடாமல் ஜெபமும் செய்தார்.
6). கொர்நேலியுவின் ஜெபமும் பேதுருவின் சுவிசேஷமும்
புறஜாதியான கொர்நேலியுவின் குடும்பம் இரட்சிக்கப்பட்ட விதம், ஜெபமும் சுவிசேஷமும் இணைந்த செயல்பட்டதற்கான மிகச்சிறந்த உதாரணம்.
அப்போஸ்தலர் 10:4 & 10:44 –
"உன் ஜெபங்களும்... தேவனுக்கு நினைப்பூட்டுதலாக எட்டினது" மற்றும் "பேதுரு இந்த வார்த்தைகளைப் பேசிக்கொண்டிருக்கையில் பரிசுத்த ஆவியானவர் வசனத்தைக் கேட்டவர்கள் எல்லார்மேலும் இறங்கினார்."
விளக்கம்: கொர்நேலியுவின் ஜெபம் தேவனை அசைத்தது. ஆனால், தேவன் அவனுக்கு இரட்சிப்பைக் கொடுக்க பேதுருவின் சுவிசேஷப் பிரசங்கத்தையே பயன்படுத்தினார்.
7). ஜெபம் தைரியத்தைத் தருகிறது, சுவிசேஷம் வல்லமையாய் வெளிப்படுகிறது
சுவிசேஷம் அறிவிப்பவருக்கு பரிசுத்த ஆவியானவரின் பெலனும் தைரியமும் தேவை. அது ஜெபத்தின் மூலமே கிடைக்கிறது.
எபேசியர் 6:19 –
"நான் சுவிசேஷத்தின் இரகசியத்தை தைரியமாய் வெளிப்படுத்துகிறதற்கு... எனக்கு வாக்கு அருளப்படும்படி எனக்காகவும் ஜெபம் பண்ணுங்கள்."
விளக்கம்: விசுவாசிகளின் ஜெபம் சுவிசேஷம் அறிவிப்பவருக்குத் துணிவைத் தருகிறது. அந்தத் துணிவோடு பேசப்படும் சுவிசேஷம் கேட்போரை இரட்சிக்கிறது.
8. அந்தியோகியா சபையின் ஜெபமும் பவுலின் ஊழியமும்
முதன்முதலில் புறஜாதிகளுக்கு சுவிசேஷம் கொண்டு செல்லப்பட்டது சபையின் ஜெபத்தினால்தான்.
அப்போஸ்தலர் 13:3 – "அப்பொழுது உபவாசித்து ஜெபம்பண்ணி, அவர்கள்மேல் கைகளை வைத்து, அவர்களை அனுப்பினார்கள்."
விளக்கம்:
சபை செய்த ஜெபம் பவுலையும் பர்னபாவையும் சுவிசேஷ ஊதியத்திற்கு அனுப்பியது. அதன் மூலம் லட்சக்கணக்கான மக்கள் இரட்சிக்கப்பட்டனர்.
9. சிறைச்சாலையில் ஜெபமும் சுவிசேஷமும்
பவுலும் சீலாவும் சிறையில் இருந்தபோது நடந்த சம்பவம் இதற்கு சான்று.
அப்போஸ்தலர் 16:25, 31 – "நடுராத்திரியிலே பவுலும் சீலாவும் ஜெபம்பண்ணி, தேவனைத் துதித்தார்கள்... கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசி, அப்பொழுது நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர்கள் என்று (சுவிசேஷத்தை) சொன்னார்கள்."
விளக்கம்: அவர்களின் ஜெபம் சிறைச்சாலையை அசைத்தது, சிறைச்சாலை அதிகாரியின் இருதயத்தைத் திறந்தது. பின்பு அவர்கள் சொன்ன சுவிசேஷம் அவன் குடும்பத்தையே இரட்சித்தது.
10. விசுவாசம் வர சுவிசேஷம் வேண்டும், சுவிசேஷம் கிரியை செய்ய ஜெபம் வேண்டும்
வேதம் மிகத் தெளிவாக இரட்சிப்பின் வரிசையைக் கூறுகிறது.
ரோமர் 10:14 – "அவரைக்குறித்து கேள்விப்படாதவர்கள் எப்படி விசுவாசிப்பார்கள்? பிரசங்கிக்கிறவன் இல்லாவிட்டால் எப்படிக் கேட்பார்கள்?"
விளக்கம்:
மனிதர்கள் இரட்சிக்கப்பட விசுவாசம் வேண்டும்; விசுவாசம் வர சுவிசேஷக் கேள்வி வேண்டும். ஆனால், அந்த கேள்வியானது மனித இருதயத்தில் கிரியை செய்ய விசுவாசிகளின் ஜெபம் பின்விசையாக (Backing) இருக்க வேண்டும்.
சுருக்கம்:
விசுவாசியின் ஜெபம் என்பது உழுவது போன்றது; சுவிசேஷம் என்பது விதைப்பது போன்றது. உழாமல் விதைத்தால் விதை முளைக்காது (ஜெபமில்லாத சுவிசேஷம் கடின இருதயத்தில் கிரியை செய்யாது). விதைக்காமல் உழுதுகொண்டே இருந்தால் அறுவடை வராது (சுவிசேஷம் சொல்லாமல் ஜெபம் மட்டும் செய்தால் இரட்சிப்பு வராது). எனவே, ஜெபத்தின் மூலமாக இருதயம் தகுதிப்படுத்தப்பட்டு, சுவிசேஷத்தின் மூலமாக மனிதன் இரட்சிக்கப்படுகிறான்.
என்பதை வேத நமக்கு வலியுறுத்துகிறது.
தொடர்ந்து சுவிசேஷத்தை அறிவிக்கும் முன் ஒரு மணி நேரமாவது ஜெபித்து விட்டு செல்லுங்கள் நிச்சியமாக அறுவடை உண்டு
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமென்.
கிறிஸ்துவின் பணியில் சகோதரன் சிலுவை ராஜா
9841711591.
Comments