நவக்கிரகங்களால் யாரையும் சேதப்படுத்த முடியாது.
மனிதனின் வாழ்வையும், எதிர்காலத்தையும் வானியல் கோள்களும், கிரக அமைப்புகளும் கட்டுப்படுத்துகின்றன என்ற நம்பிக்கை பல சமுதாயங்களில் நிலவி வருகிறது. ஆனால், விவிலியத்தின் (பைபிள்) போதனைகளின்படி, பிரபஞ்சத்தில் உள்ள அனைத்துக் கோள்களும், நட்சத்திரங்களும் மனிதனை இயக்குவதற்காக அல்ல, மாறாகக் தேவனாகிய கர்த்தரின் மகிமையை வெளிப்படுத்தவே படைக்கப்பட்டன.
விவிலியம் தெளிவாகக் கூறுவது என்னவென்றால், சர்வவல்லமையுள்ள கர்த்தர் ஒருவரே பிரபஞ்சத்தைப் படைத்து ஆளுகை செய்கிறார். கிரகங்களோ அல்லது நட்சத்திரங்களோ தன்னிச்சையாக மனிதனுக்கு நன்மையோ அல்லது தீமையோ செய்யும் ஆற்றலைக் கொண்டிருக்கவில்லை. மனிதனுடைய எதிர்காலம், பாதுகாப்பு மற்றும் ஆசீர்வாதம் அனைத்தும் கர்த்தருடைய கரத்தில் மட்டுமே உள்ளது. எனவே, கிரகங்களின் அமைப்பைக் கண்டு மனிதன் அஞ்ச வேண்டிய அவசியமில்லை என்ற உண்மையை விவிலிய ஆதாரங்களுடன் விரிவாகக் காண்போம்.
1}. தேவனாகிய கர்த்தரின் கட்டுப்பாட்டில்தான் விண்மீன்கள் உள்ளன
விண்மீன்கள் மற்றும் கிரகங்கள் தன்னிச்சையாக இயங்குபவை அல்ல. கர்த்தர் மட்டுமே எல்லாவற்றையும் படைத்து, அவற்றை ஒழுங்குபடுத்தி, தமக்குக் கீழ்ப்படுத்தியுள்ளார்.
விவிலிய ஆதாரம்: "அவர் நட்சத்திரங்களின் தொகையை எண்ணி, அவைகளுக்கெல்லாம் பேரிடுகிறார்" (சங்கீதம் 147:4).
2}. கிரகங்கள் நன்மை-தீமை செய்யாமல், அடையாளங்களுக்காகவே படைக்கப்பட்டன.
தேவனாகிய கர்த்தர் விண்மீன்களை மனிதனுக்குத் தீங்கு செய்வதற்காகவோ அல்லது குறிசொல்வதற்காகவோ படைக்கவில்லை. மாறாக, காலங்களைக் காட்டவும், ஒளி கொடுக்கவுமே படைத்தார்.
விவிலிய ஆதாரம்: "பகலை ஆள சூரியனையும், இரவை ஆள சந்திரனையும் நட்சத்திரங்களையும் கர்த்தர் உண்டாக்கினார்" (ஆதியாகமம் 1:14-16).
3}. ஜோதிடம் மற்றும் கிரகங்களை நம்புவது வீண் (கர்த்தரின் எச்சரிக்கை)
ஜோதிடர்கள் மற்றும் நட்சத்திரங்களை கணிப்பவர்கள் மனிதனை ஆபத்தில் இருந்து காப்பாற்ற முடியாது என்று வேதம் திட்டவட்டமாகக் கூறுகிறது.
விவிலிய ஆதாரம்: "உன்னைச் சோதிக்கிறவர்கள் உன்னை இரட்சிக்கட்டும்; நட்சத்திரங்களைப் பார்க்கிறவர்களும், மாதந்தோறும் ஜோதிடம் சொல்லுகிறவர்களும்... உனக்கு வரப்போகிற காரியங்களிலிருந்து உன்னைத் தப்புவிக்கட்டும்" (ஏசாயா 47:13-14).
4}. மனிதனின் எதிர்காலம் தேவனாகிய கர்த்தரின் கைகளில் மட்டுமே உள்ளது
விண்மீன்களின் அமைப்பில் மனிதனின் விதி இல்லை. மனிதனின் ஒவ்வொரு நாளும், அவனது எதிர்காலமும் கர்த்தரால் மட்டுமே திட்டமிடப்படுகிறது.
விவிலிய ஆதாரம்: "என் காலங்கள் உமது கரத்திலிருக்கிறது" (சங்கீதம் 31:15).
5}. தேவனாகிய கர்த்தர் ஒருவருக்கே பயப்பட வேண்டும்
சூரியன், சந்திரன் அல்லது நட்சத்திரங்களைப் பார்த்து மனிதன் அஞ்சவோ, அவற்றை வணங்கவோ (வழிபடவோ) கூடாது. கர்த்தருக்கு மட்டுமே அந்த அதிகாரம் உண்டு.
விவிலிய ஆதாரம்: "வானத்தின் சண்டாளங்களான சூரியன் சந்திரன் நட்சத்திரங்கள் ஆகியவைகளைப் பார்த்து, நீங்கள் வணங்கி, அவைகளைச் சேவிக்காதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்"
(உபாகமம் 4:19).
6}. தேவனாகிய கர்த்தர் நமக்குத் துணையாக இருக்கும்போது யாரும் தீமை செய்ய முடியாது
கடவுளுடைய கிருபைக்கும், மனிதனுக்கும் இடையில் எந்தக் கிரகமும் குறுக்கே நிற்க முடியாது. கர்த்தர் அருளும் பாதுகாப்பை எந்த இயற்கையோ அல்லது அமானுஷ்ய சக்தியோ அசைக்க இயலாது.
விவிலிய ஆதாரம்: "கர்த்தர் என் பக்கத்தில் இருக்கிறார்; நான் பயப்படேன்; மனுஷன் எனக்கு என்ன செய்வான்?"
(சங்கீதம் 118:6).
7. பயம் வேண்டாம், விசுவாசத்தில் நிலைத்திருங்கள்
விண்மீன்களின் நிலையைக் கண்டு பயப்படுவது விசுவாசக் குறைவு. கர்த்தர் மீது முழுமையாக நம்பிக்கை வைப்பவனை எந்தத் தீங்கும் அணுகாது.
விவிலிய ஆதாரம்: "கர்த்தர் உன் அடைக்கலமாய் இருக்கிறார். உனக்குத் தீங்கு நேரிடாது, எந்த வாதையும் உன் கூடாரத்தை அணுகாது"
(சங்கீதம் 91:9,10).
சுருக்கமாகக் கூறின்,
மனிதனின் வாழ்வை விண்மீன்களோ அல்லது கிரகங்களின் அமைப்புகளோ தீர்மானிப்பதில்லை என்பதை விவிலியம் மிகத் தெளிவாகப் பறைசாற்றுகிறது. பிரபஞ்சத்தைப் படைத்த கர்த்தரே எல்லாவற்றிற்கும் மேலானவர் மற்றும் சர்வவல்லமை உள்ளவர் ஆவார். கிரகங்கள் வெறும் சடப்பொருட்களே தவிர, மனிதனுக்குத் தீமையோ நன்மையோ செய்யும் சுய அதிகாரம் அவற்றுக்குக் கிடையாது.
எனவே, விசுவாசிகள் ஜோதிடக் கணிப்புகளையோ, கிரகப் பெயர்ச்சிகளையோ கண்டு அஞ்சத் தேவையில்லை. மனிதனுடைய எதிர்காலம் மற்றும் பாதுகாப்பு அனைத்தும் அவனுடைய படைப்பாளராகிய கர்த்தரின் கரங்களிலேயே பாதுகாப்பாக உள்ளது. இந்த உண்மையை உணர்ந்து, பயத்திலிருந்து விடுதலை பெற்று, கர்த்தர் மீது மட்டும் முழு நம்பிக்கை வைத்து வாழ்வதே உண்மையான கிறிஸ்தவ விசுவாசமாகும்.
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமென்.
கிறிஸ்துவின் பணியில் சகோதரன்
சிலுவை ராஜா
9841711591.
Comments