இறந்து போனவர்கள் வீதிகளில் அலைந்து திரிவார்களா ?

மனித வாழ்வின் மிகப்பெரிய மர்மங்களில் ஒன்று மரணம். "மரணத்திற்குப் பிறகு மனிதன் எங்கே போகிறான்? இறந்தவர்கள் ஆவியாக இந்த பூமியில் அலைகிறார்களா?" என்ற கேள்விகள் ஆதிகாலம் தொட்டே மனித மனதில் எழுந்து வருகின்றன. உலகெங்கும் உள்ள பல்வேறு கலாச்சாரங்களிலும், நாட்டுப்புற நம்பிக்கைகளிலும் இறந்தவர்கள் பேயாகவோ அல்லது ஆவியாகவோ பூமிக்குத் திரும்பி வருகிறார்கள் என்ற கருத்து பரவலாகக் காணப்படுகிறது.
ஆனால், மனிதனின் தோற்றம், வாழ்வு மற்றும் மரணத்திற்குப் பிந்தைய நிலை குறித்து மிகத் தெளிவான வழிகாட்டுதலைத் தரும் திருவிவிலியம் (Holy Bible), இந்த பொதுவான நம்பிக்கையிலிருந்து முற்றிலும் மாறுபடுகிறது. விவிலியத்தின்படி, மனித உடல் மண்ணுக்குத் திரும்பினாலும், அவனது ஆன்மா அழியாதது. மரணத்திற்குப் பின் ஆன்மாக்கள் பூமியில் அலைந்து திரிவதில்லை; மாறாக, அவை இறைவனின் ஆளுகைக்குள் சென்று விடுகின்றன என்று வேதம் திட்டவட்டமாகக் கூறுகிறது. விவிலிய வேத வசனங்களின் ஒளியில், இறந்தவர்களின் உண்மை நிலை என்ன என்பதைப் பற்றி விரிவாகக் காண்போம்.

1}. பூமிக்குத் திரும்ப வழி இல்லை
இறந்தவர்கள் தங்களின் பழைய வீட்டிற்கோ அல்லது பூமிக்கோ மீண்டும் வர முடியாது என்பதை வேதம் உறுதிப்படுத்துகிறது.
"அவன் இனித் தன் வீட்டிற்குத் திரும்பி வரமாட்டான்; அவனுடைய இடம் இனி அவனை அறியாது."
(யோபு 7:10)

2}. உலகக் காரியங்களில் இனி பங்கில்லை
மரித்தவர்களுக்கு இந்த உலகத்தில் நடக்கும் எதிலோ, உயிரோடு இருப்பவர்களுடனோ எந்தத் தொடர்பும் இருப்பதில்லை.
"உயிரோடிருப்பவர்கள் தாங்கள் சாவதை அறிவார்களே; மரித்தவர்கள் ஒன்றும் அறியார்கள்... பூமியின்கீழ் செய்யப்படுகிறதொன்றிலும் அவர்களுக்கு இனி என்றென்றைக்கும் பங்கில்லை." (பிரசங்கி 9:5-6)

3}. மரணத்திற்குப் பின் இறைத்தீர்ப்பு
மனிதன் இறந்தவுடன் ஆவியாக அலைவதில்லை, மாறாக அவனது ஆன்மா கடவுளின் நியாயத்தீர்ப்பை எதிர்கொள்கிறது.
"ஒரே முறை சாகுவதும், அதன் பின் தீர்ப்புப் பெறுவதும் மனிதருக்கு நியமிக்கப்பட்டுள்ளது."
(எபிரேயர் 9:27)

4}. கடக்க முடியாத பெரிய பிளவு
இயேசு கூறிய செல்வந்தர் - இலாசர் உவமையில், இறந்தவர்கள் இருக்கும் இடத்திற்கும் உயிரோடு வாழும் பூமிக்கும் இடையே பெரிய பிளவு உள்ளதால், யாரும் இங்கிருந்து அங்கு செல்ல முடியாது என விளக்கப்பட்டுள்ளது.
"அன்றியும், எவ்விடத்திலிருந்தும் எவரும் உங்களிடம் கடந்து வரக்கூடாதபடிக்கும், அவ்விடத்திலிருந்து எவரும் எங்களிடம் கடந்து வரக்கூடாதபடிக்கும், உங்களுக்கும் எங்களுக்கும் இடையே பெரியதொரு பிளவு ஏற்படுத்தப்பட்டிருக்கிறது."
(லூக்கா 16:26)

5}. தூங்குபவர்களாகவே கருதப்படுகிறார்கள்
விவிலியம் இறந்தவர்களின் நிலையை "தூக்கம்" என்று அழைக்கிறது. இயேசு லாசரு இறந்தபோது அவன் தூங்குகிறான் என்று கூறினார். அவர்கள் பூமியில் அலைவதில்லை.
"நம்முடைய நண்பனாகிய இலாசர் தூங்குகிறான்; அவனை எழுப்பப் போகிறேன் என்றார்." (யோவான் 11:11)

6}. உடலை விட்டுப் பிரிந்து கடவுளிடம் செல்லுதல்
பரிசுத்தவான்கள் இறக்கும் போது, அவர்கள் பூமியில் அலைவதில்லை, உடனடியாக இறைவனின் சமுகத்திற்குச் செல்கிறார்கள்.
"நாங்கள் இந்த உடலை விட்டுப் பிரிந்து ஆண்டவரோடு குடியேறவே பெரிதும் விரும்புகிறோம்."
(2 கொரி 5:8)

7. ஆவிகளுடன் பேச முயற்சிப்பது பாவம்
மரித்தவர்களின் ஆவிகள் பூமியில் நடமாடாததால், இறந்தவர்களுடன் பேச நினைப்பது அல்லது மந்திரவாதிகளை நாடுவது ஏமாற்று வேலை என்றும், அது கடவுளுக்குப் பிடிக்காத பாவம் என்றும் வேதம் எச்சரிக்கிறது.
"மரித்தவர்களிடம் குறி கேட்கிறவனும்... உங்களுக்குள் இருக்கவேண்டாம். இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவன் எவனும் ஆண்டவருக்கு அருவருப்பானவன்." (இணைச்சட்டம் / உபாகமம் 18:11-12)

முடிவு:
பூமியில் அலைவதாக மக்கள் நம்பும் பேய்கள் அல்லது ஆவிகள் என்பது சாத்தானின் ஏமாற்று வேலை (தீய ஆவிகள்) என்று விவிலியம் கற்பிக்கிறது. மனித ஆன்மாக்கள் இறப்பிற்குப் பின் பூமியில் தங்குவதில்லை.

கிறிஸ்துவின் பணியில் சகோதரர் சிலுவை ராஜா
9841711591.

Comments

Popular posts from this blog

மற்றவர்களை பார்க்க வேண்டாம்.

உணர்ச்சியுள்ள கிறிஸ்தவனே கிறிஸ்தவத்துக்கு விரோதமாக நடப்பதை நீ அறியாயோ ! ?

திருச்சபை