இயேசு கிறிஸ்துவின் இரத்தம் எதற்காக சிந்தப்பட்டது ?
கிறிஸ்தவ விசுவாச வாழ்க்கையில் இயேசு கிறிஸ்துவின் இரத்தம் என்பது மிகவும் உன்னதமானதும், பரிசுத்தமானதும், விலையேறப்பெற்றதுமாக இருக்கிறது. விசுவாசிகளாகிய நமக்கு பாவமன்னிப்பையும், மீட்டெடுப்பையும், பிசாசின் மேல் ஜெயத்தையும் தருவது இயேசுவின் இரத்தம் மட்டுமே என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
இருப்பினும், இன்றைய நாட்களில் பல விசுவாசிகள் அறியாமையின் காரணமாகவோ அல்லது தவறான போதனைகளின் விளைவாகவோ, "இயேசுவின் இரத்தத்தைக் கார் மீது தெளிக்கிறேன், வீட்டின் மீது தெளிக்கிறேன், பாத்திரங்கள் மற்றும் உடமைகள் மீது தெளிக்கிறேன்" என்று ஜெபிக்கும் வழகத்தைக் கொண்டிருக்கிறார்கள். ஆபத்துகளிலிருந்தும், விபத்துகளிலிருந்தும் தங்கள் பொருட்களைப் பாதுகாக்க வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் அவர்கள் இப்படிச் செய்தாலும், இந்த வகையான ஜெபமுறைக்கு வேதாகமத்தில் எந்தவொரு புதிய ஏற்பாட்டு ஆதாரமும் இல்லை என்பதே வேதாகம சத்தியம்.
தேவனுடைய வார்த்தையின்படி, இயேசுவின் இரத்தம் உலகப் பொருட்களுக்காகச் சிந்தப்படவில்லை; அது மனிதனுடைய ஆத்துமா மீட்படைவதற்காகவே சிந்தப்பட்டது. எனவே, விலையேறப்பெற்ற இயேசுவின் இரத்தத்தை வேதாகம நெறிமுறைகளின்படி விசுவாசிகள் எவ்வாறு புரிந்துகொள்ள வேண்டும், மற்றும் உடமைகளின் பாதுகாப்பிற்காக எவ்வாறு ஜெபிக்க வேண்டும் என்பதை வேதாகம வசனங்களின் ஆதாரத்தோடு இந்தத் தொகுப்பில் விரிவாகக் காண்போம்.
1). இயேசுவின் இரத்தம் பொருட்களுக்கானது அல்ல, ஆத்துமாவுக்கானது
பழைய ஏற்பாட்டில் மிருகங்களின் இரத்தம் வீட்டின் வாசற்படிகளில் தெளிக்கப்பட்டது உண்மைதான் (பஸ்கா ஆட்டுக்குட்டியின் இரத்தம்). ஆனால், புதிய ஏற்பாட்டில் இயேசுவின் இரத்தம் கார், வீடு போன்ற அழியக்கூடிய உலகப் பொருட்களுக்காகச் சிந்தப்படவில்லை. அது மனிதனுடைய ஆத்துமா மீட்படைவதற்காகச் சிந்தப்பட்டது.
வேத வசனம்: "அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும்."
(1யோவான் 1:7)
விளக்கம்:
இரத்தம் சுத்திகரிப்பது மனிதனின் பாவக் கறைகளைத்தானே தவிர, உலகப் பொருட்களை அல்ல.
2). புதிய ஏற்பாட்டில் தெளிக்கப்படும் இரத்தம் "மனச்சாட்சியின்" மேல் தெளிக்கப்படுகிறது
புதிய ஏற்பாட்டு விசுவாசிகள் தங்கள் வீடுகளிலோ, உடமைகளிலோ இரத்தம் தெளிக்க வேண்டியதில்லை. இயேசுவின் இரத்தம் நம்முடைய இருதயங்களிலும் மனச்சாட்சியிலும் தெளிக்கப்படுகிறது.
வேத வசனம்: "துர்மனச்சாட்சி நீங்கத் தெளிக்கப்பட்ட இருதயமுள்ளவர்களாய்... சேரக்கடவோம்." (எபிரெயர் 10:22)
விளக்கம்:
இயேசுவின் இரத்தம் ஆன்மீக ரீதியாக நம்முடைய இருதயத்தைத் தூய்மைப்படுத்தப் பயன்படுகிறதே தவிர, பொருட்களுக்குப் பாதுகாப்பு வளையமாகப் பயன்படுத்துவதற்கல்ல.
3). அப்போஸ்தலர்கள் யாரும் இவ்வாறு ஜெபிக்கவில்லை
இயேசுவின் சீஷர்களோ அல்லது அப்போஸ்தலனாகிய பவுலோ புதிய ஏற்பாட்டுச் சபைகளுக்கு எழுதிய நிருபங்களில் எங்குமே தங்களுடைய குதிரைகள், வண்டிகள், வீடுகள் அல்லது உடமைகள் மீது இயேசுவின் இரத்தத்தைத் தெளித்து ஜெபிக்கும்படி கற்பிக்கவில்லை.
விளக்கம்:
பவுல் பல ஆபத்தான பிரயாணங்களை மேற்கொண்டார். ஆனால், அவர் எங்கும் "கப்பலின் மேல் இரத்தம் தெளிக்கிறேன்" என்று சொல்லவில்லை. மாறாக, தேவனுடைய கிருபையையும் பாதுகாப்பையுமே நம்பியிருந்தார்.
4). பொருட்கள் அல்ல, விசுவாசிகளே விலைக்கு வாங்கப்பட்டவர்கள்
இயேசுவின் இரத்தம் ஒரு பொருளைப் பாதுகாக்கும் மந்திர சூத்திரம் அல்ல. அது விசுவாசிகளைப் பிசாசின் அடிமைத்தனத்திலிருந்து மீட்டெடுத்த விலைமதிப்பற்ற கிரயம்.
வேத வசனம்: "அழியத்தக்க வெள்ளியினாலும் பொன்னினாலும் நீங்கள் மீட்கப்படாமல்... குற்றமில்லாத ஆட்டுக்குட்டியாகிய கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற இரத்தத்தினாலே மீட்கப்பட்டீர்களென்று அறிந்திருக்கிறீர்களே." (1 பேதுரு 1:18,19)
விளக்கம்:
இயேசுவின் இரத்தம் நம்மை மீட்டெடுக்கக் கொடுக்கப்பட்ட விலை. அதை நாம் வீட்டின் மீதும் காரின் மீதும் தெளிப்பதாகக் கூறுவது அந்த விலையேறப்பெற்ற இரத்தத்தின் மதிப்பைக்குறைப்பதாகும்.
5). இயேசுவின் இரத்தம் விசுவாசத்தால் கிரியை செய்கிறது
கிறிஸ்துவின் இரத்தத்தின் வல்லமை என்பது வாய் வார்த்தையாக "தெளிக்கிறேன்" என்று சொல்வதில் இல்லை, அதை விசுவாசிப்பதில் தான் உள்ளது.
வேத வசனம்:
"தேவன் அவரை (இயேசுவை) அவருடைய இரத்தத்தைப்பற்றும் விசுவாசத்தினாலே பலியாக ஏற்படுத்தினார்." (ரோமர் 3:25)
விளக்கம்:
இயேசுவின் தியாகத்தை மனதில் விசுவாசித்து, பாவ அறிக்கை செய்து வாழும் விசுவாசிக்குத்தான் இரத்தத்தின் பாதுகாப்பு உண்டு.
6). மந்திரவாதம் போன்ற ஆபத்து (Superstition)
விசுவாசிகள் அறியாமையினால் இப்படி ஜெபிக்கிறார்கள். ஆனால், ஒரு குறிப்பிட்ட வார்த்தையைச் சொன்னால் (உதாரணமாக: "இரத்தக் கோடு போடுகிறேன்", "இரத்தம் தெளிக்கிறேன்") விபத்து நடக்காது, திருடன் வரமாட்டான் என்று நம்புவது வேதாகம விசுவாசம் அல்ல. அது ஒருவிதமான மூடநம்பிக்கை அல்லது மந்திரவாதம் போன்றது.
முடிவுரை: விசுவாசிகள் எப்படி ஜெபிக்க வேண்டும்?
உங்கள் கார், வீடு, குடும்பத்தின் பாதுகாப்பிற்காக ஜெபிக்கும்போது, "ஆண்டவரே, உம்முடைய தூதர்களைக் கொண்டு எங்களைப் பாதுகாத்துக் கொள்ளும்; உம்முடைய கிருபை எங்களோடு இருக்கட்டும்" என்று பிதாவாகிய தேவனிடம் இயேசுவின் நாமத்தினாலே நேரடியாகக் கேட்க வேண்டும்
(சங்கீதம் 91:11). இயேசுவின் இரத்தம் நம்மைப் பாவத்திலிருந்து மீட்டு, பிதாவோடு ஒப்புரவாக்கியுள்ளது என்ற சத்தியத்தை நாம் பற்றிக்கொள்ள வேண்டும்.
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமென்
கிறிஸ்துவின் பணியில் சகோதரன் சிலுவை ராஜா
9841711591
Comments