மற்றவர்களை பார்த்து சோர்ந்து போக வேண்டாம்.
தேவனுடைய பிள்ளைகளே மற்ற மனிதர்களுடைய நடத்தையை பார்த்து விசுவாசத்தில் சோர்ந்து போவது ஆவிக்குரிய வாழ்க்கையில் ஒரு பெரிய சவால். ஊழியர்களும் மனிதர்களே, அவர்களும் தவறு செய்ய வாய்ப்புண்டு. ஆனால் நம்முடைய விசுவாசம் மனிதர்கள் மேல் அல்ல, தேவன் மேல் இருக்க வேண்டும்.
கிறிஸ்தவத்தை விட்டு விலக நினைப்பவர்களுக்கு வேதாகமத்தின் அடிப்படையில் சில முக்கிய ஆலோசனைகள்.
மனிதர்களை அல்ல, தேவனையே நோக்குங்கள்:
நம்முடைய விசுவாசத்திற்கு காரணரும் அதை முடிக்கிறவருமாயிருக்கிற இயேசுவை மட்டுமே நாம் நோக்க வேண்டும். மனிதர்கள் மாறலாம், ஆனால் தேவன் மாறாதவர்.
"விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிற இயேசுவை நோக்கி..."
(எபிரெயர் 12:2)
சரியான அஸ்திவாரம் தேவன் மட்டுமே:
ஊழியர்கள் வெறும் வேலையாட்கள் மட்டுமே, அவர்களால் இரட்சிப்பு வருவதில்லை. பவுல், அப்பொல்லோ போன்ற தலைவர்களே ஆனாலும் அவர்கள் தேவனுடைய கருவி மட்டுமே என்பதை மறக்கக்கூடாது.
"பவுல் யார்? அப்பொல்லோ யார்? கர்த்தர் அவனவனுக்கு அருளினபடியே நீங்கள் விசுவாசிக்கிறதற்குக் காரணமாயிருந்த ஊழியக்காரர்தானே." (1 கொரி 3:5)
முடிவு நாளில் தேவனே நியாயந்தீர்ப்பார்:
சபையில் கோதுமையும் கலைகளும் (நல்லவர்களும் கெட்டவர்களும்) கலந்துதான் இருப்பார்கள். அவர்களை பிரித்தெடுத்து நியாயந்தீர்ப்பது தேவனுடைய வேலை, அதுவரை நாம் பொறுமையாய் இருக்க வேண்டும்.
"அறுப்புக்காலம் வரைக்கும் இரண்டையும் வளரவிடுங்கள்..."
(மத்தேயு 13:30)
மனுஷனை நம்புவது ஆபத்து:
வேதாகமம் தெளிவாக எச்சரிக்கிறது, மனுஷனை நம்புவதை விட கர்த்தர் பேரில் பற்றுதலாய் இருப்பதே நலம். ஊழியர்கள் தவறு செய்யும்போது நம் நம்பிக்கை உடையக் காரணம் நாம் அவர்கள் மீது அதிக நம்பிக்கை வைத்ததே ஆகும்.
"மனுஷனை நம்புவதைப்பார்க்கிலும், கர்த்தர்மேல் பற்றுதலாயிருப்பதே நலம்."
(சங்கீதம் 118:8)
தவறுகளைக் கண்டு இடறல் அடையாதீர்கள்:
உலகில் இடறல்கள் வருவது நிச்சயம், ஆனால் அதற்காக நாம் விசுவாசத்தை விட்டுவிடக்கூடாது. மற்றவர்கள் தவறு செய்கிறார்கள் என்பதற்காக நாம் பரலோக பாக்கியத்தை இழக்கக்கூடாது.
"இடறல்கள் வராமல் போகாது, ஆகிலும் அவைகள் எவனால் வருகிறதோ, அவனுக்கு ஐயோ!"
(லூக்கா 17:1)
தனிப்பட்ட கணக்கு ஒப்புவித்தல்:
ஒவ்வொருவரும் அவரவர் செய்த கிரியைகளின்படி தேவனுக்கு கணக்கு ஒப்புவிக்க வேண்டும். மற்ற ஊழியர்களின் தவறுக்காக நீங்கள் விலகிப்போனால், உங்கள் ஆத்தும நஷ்டத்திற்கு நீங்களே பொறுப்பு.
"ஆதலால் நம்மில் ஒவ்வொருவனும் தன்னைக்குறித்துத் தேவனுக்குக் கணக்கொப்புவிப்பான்."
(ரோமர் 14:12)
சத்தியத்தை பற்றிக்கொள்ளுங்கள்:
ஊழியர்கள் சத்தியத்திற்கு புறம்பாக நடந்தாலும், வேதாகம சத்தியம் என்றும் மாறாது. மனிதர்களின் கிரியைகளை விட தேவனுடைய வார்த்தையே மேலானது.
"சத்தியத்தையும் வாங்கு, அதை விற்காதே..."
(நீதி 23:23)
சுருக்கமாக:
ஒரு உணவகத்தில் பரிமாறுபவர் தவறு செய்தால் நாம் உணவை வெறுப்பதில்லை, அதுபோல ஊழியர்கள் தவறு செய்தால் நாம் தேவனையும் அவர் தரும் இரட்சிப்பையும் வெறுக்கக்கூடாது.
என வேதம் நமக்கு ஆலோசனை சொல்லுகிறது . இயேசு கிறிஸ்துவை நம்புங்கள் அவர் உங்களை ஆசீர்வதிப்பார் ஆமென்.
கிறிஸ்துவின் பணியில் சகோதரன் சிலுவை ராஜா.
WhatsApp 9841 711 591.
Comments