பழைய ஏற்பாட்டு சட்டம்
பழைய ஏற்பாட்டுச் சட்டம்.
(யாத் 20:1,2)
"தேவன் பேசிச் சொல்லிய சகல வார்த்தைகளுமாவன: உன்னை அடிமைத்தன வீடாகிய எகிப்து தேசத்திலிருந்து புறப்படப்பண்ணின உன் தேவனாகிய கர்த்தர் நானே."
சீனாய் மலையில் இஸ்ரவேலருக்கு ஏற்பட்ட அனுபவங்களில் மிகவும் முக்கியமானது, தங்கள் தலைவனாகிய மோசேயின் மூலம் தேவன் கொடுத்த கற்பனைகள் தங்களுக்குக் கிடைத்ததாகும். மோசேயின் நியாயப்பிரமாணம், (எபிரெய மொழியில் தோரா, அதன் பொருள், போதனைகள் என்பதாகும்.)
மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்படலாம்.
(a) ஒழுக்கநெறிக் கட்டளைகள்; பரிசுத்த வாழ்வுக்கு ஆதாரமான சட்டங்கள் (யாத் 20:1-17)
(b) ஆட்சிமுறைக் கட்டளைகள்: இஸ்ரவேலின் சட்டரீதியான மற்றும் சமூக வாழ்க்கை சம்பந்தப்பட்ட விதிகள். (யாத் 211-23:33);
(C) தெய்வீக வழிபாடு சம்பந்தமான கட்டளைகள்: இஸ்ரவேலர் ஆண்டவரை வழிபடவேண்டிய விதம், பலிகள் பற்றிய விதிகள் உள்ளடங்கிய சடங்காச்சாரங்கள் (யாத் 24:12 முதல் 31:18 வரை). பழைய ஏற்பாட்டுக் கட்டளைகளின் தன்மை, வேலை ஆகியவை பற்றிய கீழ்க்கண்ட கருத்துக்களைக் கவனிக்கவும்.
(1) தேவன் தமது மக்களோடு செய்து கொண்ட உடன்படிக்கை தொடர்பாகவே இந்தக் கட்டளைகள் கொடுக்கப்பட்டன. இஸ்ரவேலர் தேவனுக்குச் சொந்தமானவர்கள். அவர்கள் தேவனுக்கு உண்மையும், கீழ்ப்படிதலும் உள்ளவர்களாயிருக்கவேண்டும். அவர்கள் அனுசரிக்க வேண்டிய காரியங்கள் அனைத்தையும் இந்தக் கற்பனைகள் வரையறுத்துக் காட்டின. இஸ்ரவேலர் இந்த உடன்படிக்கையின் நிபந்தனைகளை ஏற்றுக் கொண்டார்கள்.
(யாத் 24:1--8)
(2) தேவனுடைய இரட்சிக்கும் இரக்கம், தமது மக்களை விடுவித்த செயல் ஆகியவற்றின் அடிப்படையின்மேல் இஸ்ரவேலரின் நியாயப் பிரமாணத்துக்குக் கீழ்ப்படிதல் அமைந்திருந்தது (யாத் 19:4), இஸ்ரவேலர் அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்கப்பட்ட பின்னரும், அவர்கள் பஸ்கா ஆட்டுக் குட்டியின் இரத்தத்தால் மரணத்திலிருந்து விடுவிக்கப்பட்ட பின்னரும்தான் இந்தக் கற்பனைகள் கொடுக்கப்பட்டன என்பதைக் கவனிக்கவும்.
(யாத் 20:2).
மேலும் அவர்கள் பரதேசிகளாய் வனாந்தரத்தில் தேவனுடைய கிருபையினால் பாதுகாத்துப் பராமரிக்கப்பட்டுவந்த காலத்தில் இந்தக் கற்பனைகள் வழங்கப்பட்டன.
(யாத் 19:4)
(3) மக்களுடைய நடத்தை பற்றிய தேவனுடைய சித்தத்தை இந்தக் கற்பனைகள் வெளிப்படுத்தி.
(யாத் 19: 4-6; 20:1-17, 21:1-24:8) அவர்களுடைய பாவ நிவாரணத்துக்கு இரத்த பலிகளை நியமித்தன.
(லேவி 1:5; 16:33), இரட்சிக்கப்படாதவர்கள், இரட்சிக்கப்பட இந்தக் கட்டளைகள் வழிகாட்டவில்லை. இந்தக் கற்பனைகள் ஏற்கெனவே இரட்சிக்கப்பட்டு, தேவனோடு உறவு கொண்டிருந்தவர்களுக்காகக் கொடுக்கப்பட்டது. (யாத் 20:2) தங்கள் மீட்பராகிய தேவன், தங்களைச் சுற்றியுள்ள அயலார் ஆகியவர்களோடு எவ்வாறு நடந்து கொள்ளவேண்டும் என்பதை இந்தக் கட்டளைகள் காட்டின. இஸ்ரவேலர் தேவனோடு தாங்கள் கொண்டிருந்த விசுவாசம், அன்புறவு ஆகியவற்றுக்கு ஏற்றபடி தேவனுடைய கற்பனைகளுக்குக் கீழ்ப்படிய வேண்டும் என்று எதிர்பார்க்கப்பட்டார்கள். (உபா 28:1-2; 30:15-20).
(4) பழைய ஏற்பாட்டிலும், புதிய ஏற்பாட்டிலும், தேவன் மீதுள்ள ஒரு அர்ப்பணிப்புள்ள விசுவாசம், தேவனுடைய வார்த்தை மீதுள்ள விசுவாசம் (ஆதி 15:6), தேவன் மீது இருதயபூர்வமான அன்பு, (உபா6:5) ஆகியவை தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொள்ள அடிப்படையாய் அமைந்தன. ஆனால் இஸ்ரவேலர் இதில்தான் தோல்வியுற்றனர். ஏனெனில் அவர்கள் எப்பொழுதும் தேவன் மீது தங்கள் முழு நம்பிக்கையை வைத்ததில்லை. அவரைத் தங்கள் முழு இருதயத்தோடும் நேசிக்கவுமில்லை. கற்பனைகளைக் கைக்கொண்டு தேவனுடைய வழிகளில் நடக்கவும் தவறிவிட்டார்கள். இஸ்ரவேலர் "விசுவாசத்தினால் நீதியைத் தேடவில்லை." நியாயப் பிரமாணத்தின் கிரியைகளினாலே அதைத் தேடினார்கள். (ரோம 9:32) என்று பவுல் கூறுகிறான்.
(5) தேவனிடத்திலிருந்து நிறைவான ஆசீர்வாதங்களையும், ஒரு வாழ்க்கையையும் பெறவேண்டுமானால், அன்பு நிறைந்த இருதயத்துடன் தேவனுக்குக் கீழ்ப்படிய வேண்டும் என்னும் உண்மையை இந்தச்சட்டம் வலியுறுத்துகிறது. (ஆதி 2:9, உபா 6:5 ஆகிய வசனங்களை பார்க்கவும். மேலும் ஆதி 2:16, உப 4:1,40; 5:33, 8:1; சங் 119:45; ரோம 8:13; 1 யோவா 17 வசனங்களையும் பார்த்து உறுதிசெய்து கொள்ளவும்).
(6) இந்தச் சட்டம் தேவனுடைய இயல்பான தன்மையையும், ஒழுக்கத்தையும் காட்டுகிறது. அதாவது அவருடைய அன்பு, அவருடைய நற்பண்பு, நீதி, தீமையை வெறுத்தல், ஆகியவை வெளிப்படுத்தப்படுகின்றன. இஸ்ரவேலர் தேவனுடைய சாயலில் சிருஷ்டிக்கப்பட்டுள்ளபடியால், அவர்கள் தேவனுடைய ஒழுக்கநெறியைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது. (லேவி 19:2).
(7) எல்லாக் கற்பனைகளையும் முழுமையாகக் கடைப்பிடிப்பதன்மூலம் இரட்சிப்பைப் பெற்றுவிடலாம் என்று பழைய ஏற்பாடு கூறவில்லை. இஸ்ர வேலருக்கு தேவனோடுள்ள உறவில் ஒரு பலி அமைப்பு இயல்பாக அமைந்துள்ளது. இது கற்பனையை மீறுபவர்களுக்கு மன்னிப்பை வழங்குகிறது. ஆனால் உண்மையாக மனந்திரும்பி, விசுவாசத்துடன் தேவனுடைய இரக்கத்தையும், பாவப்பரிகார இரத்தத்தினால் மீட்பையும் நாடுகிறவர்களுக்குத் தான் அது கிடைக்கும்.
(8) பழைய ஏற்பாட்டுச் சட்டமும், உடன்படிக்கையும், பூரணமானவையல்ல. அவைகள் நிரந்தரமானவைகளுமல்ல. அந்தச் சட்டம் தேவனுடைய மக்களுக்கு கிறிஸ்துவின் வருகை வரை செயல்படும் ஒரு தற்காலிகமான பாதுகாவலனாக அமைக்கப்பட்டது. (கலா 3:22-26). பழைய உடன்படிக்கைக்குப் பதிலாக வந்த புதிய உடன்படிக்கையில் தேவன் இயேசு கிறிஸ்துவின் மூலமாக உள்ள தமது மீட்புத் திட்டத்தை முழுவதுமாக வெளிப் படுத்தியுள்ளார். (ரோம 3:24-26; கலா 3:19). இதில் பழைய ஏற்பாட்டுச் சட்டத்தின் தன்மையையும், செயல்பாட்டையும் தெரிந்து கொள்ளலாம்).
(9) நியாயப்பிரமாணம் தேவனால் கொடுக்கப்பட்டது. அவருடைய வாக்குத்தத்தத்துடன், "அது அக்கிரமங்களினிமித்தமாகக் கூட்டப்பட்டது" என்பதும் கூறப்படுகிறது.
(கலா 3:19)
அது எதற்காகத் திட்டமிடப்பட்டிருக்கிறது வென்றால்
1) மனிதனுடைய நடத்தையை ஒழுங்குபடுத்தவும்.
2) பாவம் என்றால் என்ன என்று வரையறுத்துக் காட்டவும்,
3) தேவனுடைய சித்தத்தை மீறி, தீமைசெய்யும் தன்மை இஸ்ரவேலரின் உள்ளங்களில் இயல்பாக உள்ளது என்பதைக் காட்டவும்,
4) தேவனுடைய இரக்கம், கிருபை, மீட்பு இவற்றின் அவசியத்தை அவர்கள் உணரச் செய்யவுமே.
(ரோம 3:20;5:20;8:2)
தொடர்ந்து வேதத்தை வாசியுங்கள் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார் ஆமென்.
கிறிஸ்துவின் பணியில் சகோதரன் சிலுவை ராஜா.
தொடர்புக்கு
9841711591
Comments