பஸ்கா
பஸ்கா
(யாத் 12:11)
"அதைப் புசிக்க வேண்டிய விதமாவது, நீங்கள் உங்கள் அரைகளில் கச்சை கட்டிக்கொண்டும், உங்கள் கால்களில் பாதரட்சை தொடுத்துக் கொண்டும், உங்கள் கையில் தடி பிடித்துக் கொண்டும் அதைத் தீவிரமாய்ப் புசிக்கக்கடவீர்கள்; அது கர்த்தருடைய பஸ்கா". "
வரலாற்றுப் பின்னணி, கிட்டதட்ட கிமு 1445 இல் இஸ்ரவேலர் எகிப்திலிருந்து புறப்பட்டு வெளியேறிச் சென்றது முதல், பின்னால் 'யூதர்கள்' என்று அழைக்கப்பட்ட அந்த எபிரெயர்கள் ஒவ்வொரு வருடமும் வசந்த காலத்தில், (பொதுவாகத் பெரிய வெள்ளி, உயிர்த்தெழுந்த நாள் ஆகியவற்றிற்குச் சமீபமான காலத்தில்) பஸ்கா பண்டிகையைக் கொண்டாடி வந்துள்ளார்கள்
ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகியோரின் சந்ததியார் 400 வருடங்களுக்கு மேலாக எகிப்தில் அடிமைகளாயிருந்ததன்பின், தேவன் அவர்களை அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்கச் சித்தங்கொண்டார். அவர் மோசேயை எழுப்பி அவனை இந்த விடுதலைப் பயனணத்தின் தலைவனாயிருக்கும்படி ஏற்படுத்தினார். (யாத் 3,4 அதி). தேவனுடைய அழைப்புக்குக் கீழ்ப்படிந்து மோசே, பார்வோனை முகமுகமாய்ச் சந்தித்து, "என்னுடைய ஜனங்களைப் போகவிடு" என்னும் தேவனுடைய கட்டளையை அறிவித்தான். தேவனுடைய இந்தச் செய்தியின் முக்கியத்துவத்தை உணர்த்தும்படியாக, ஆண்ட வருடைய வல்லமையினால் எகிப்தியர் மீது தண்டனைத் தீர்ப்பாக வாதைகளை வரவழைத்தான். இந்த வாதைகளில் பலவற்றை அனுபவித்தபோது பார்வோன் மக்களைப் போகவிட மனதாயிருந்தான். ஆனால் வாதை விலக்கப்பட்டதும் பார்வோன் தன் தீர்பானத்தை மாற்றிக் கொண்டு, இஸ்ரவேலரைப் போகவிட மறுத்தான். இறுதியானதும் பத்தாவதுமான வாதை வந்தது. அதை அனுபவித்ததும் எகிப்தியர் இஸ்ரவேலரை வேறுவழியில்லாமல் தூத்திவிட வேண்டும் என்னும் சூழ்நிலை உருவாயிற்று. "மனிதரிலும், மிருகஜீவன்களிலும் உள்ள முதற்பேறானவைகளனைத்தையும்" கொன்று போட சங்கார தூதன் எகிப்து தேசமெங்கும் தேவனால் அனுப்பப்பட்டான். (யாத் 12:12).
எகிப்தில் இஸ்ரவேலரும் வாழ்ந்துவந்ததால் அவர்கள் மட்டும் சங்காரதூதனின் சங்காரத்திலிருந்து தப்புவதெப்படி? எபிரெயரின் ஒவ்வொரு குடும்பமும் தமது முதற்பேறானவைகளைக் காப்பாற்றிக் கொள்ளும்படி, தேவன் தமது மக்களுக்கு ஒரு தனிப்பட்ட கட்டளை கொடுத்தார். ஒவ்வொரு குடும்பத்தாகும் ஒரு வயதான, பழுதற்ற ஒரு ஆண் ஆட்டுக்குட்டியைத் தெரிந்தெடுத்துக் கொள்ளவேண்டும். அதை ஆபீப் மாதத்தின் 14 ஆம் நாள் சாயங்கால நேரத்தில் கொன்று, அதன் இரத்தத்தை வாசல் நிலைகளின் இருபக்கத்துச் சட்டங்களிலும், மேல்சட்டத்திலும் பூசவேண்டும். சிறுகுடும்பத்தினர் ஒரு ஆட்டுக் குட்டியைத் தங்கள் அயலகத்தாரோடு பங்கிட்டுக் கொள்ளலாம்.
(யாத் 12:4),
தேசத்தின் வழியாகச் சங்காரதூதன் வரும்போது. இரத்தம் பூசப்பட்ட வாசல்களைக் கண்டதும் அவற்றை விட்டு விலகிச் சென்றுவிடுவான். எனவேதான் பஸ்கா என்னும் சொல் 'கடந்து சென்றுவிடுதல், தாவிக்குதித்து கடந்து போதல்', 'தாக்காமல் விட்டுவிடுதல்' என்னும் பொருள் கொள்ளும் எபிரெயச் சொல்லான பேஸா என்னும் சொல்லிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு எகிப்தியரின் முதற்பேறனைத்துக்கும் விதிக்கப்பட்டிருந்த மரணத்தீர்ப்பிலிருந்து இஸ்ரவேலர் அனைவரும் ஆட்டுக்குட்டியின் இரத்தத்தினால் மீட்கப்பட்டார்கள். இரத்த அடையாளத்தை தேவன் கட்டளையிட்டதன் காரணம் வேறுவகையில் எகிப்தியரையும், இஸ்ரவேலரையும் பிரித்தறியச் செய்ய முடியாது என்பதாலல்ல, கீழ்ப்படிதலின் முக்கியத்துவத்தையும், இரத்தத்தினால் உண்டாகும் மீட்பையும் தேவன் மக்களுக்குப் போதிக்க விரும்பினார். ஏனெனில் பலநூற்றாண்டுகளின் பின்னால் உலகின் பாவத்தைப் போக்க வரப்போகும் “தேவ ஆட்டுக்குட்டி"யின் இரத்தத்தினால் உண்டாகும் மீட்புக்கு மக்களை ஆயத்தப்படுத்த விரும்பினார்.
(யோவா 1.29).
அந்தக் குறிப்பிட்ட இரவில், இஸ்ரவேலரனைவரும் புறப்பட்டுச் செல்வதற்கு ஆயத்தமாக ஆடையணிந்து நிற்க வேண்டும்.
(யாத் 12:11).
ஆட்டுக் குட்டியின் இறைச்சியை அவர்கள் வேகவைக்காமல், சுட்டு, கசப்பான கீரையோடும், புளிப்பில்லாத அப்பத்தோடும் ஆயத்தம் பண்ணவேண்டும். பின்னர் இரவானபின் அவர்கள் அவற்றைப் புசித்து விட்டு, எகிப்தியர் வந்து அவர்களை வெளியேறிப்போகத் துரிதப்படுத்தினதும் போவதற்கு ஆயத்தமாயிருக்க வேண்டும். தேவன் சொன்னவாறே எல்லாம் நடந்தன. (யாத் 12:29 முதல் 36).
இஸ்ரவேலர் அல்லது யூதர்களின் வரலாற்றில் பஸ்கா. அந்த நாளிலிருந்து வரலாற்றில் எகிப்தில் தொடங்கப்பட்ட பஸ்காவைத் தேவனுடைய மக்கள் தேவன் விதித்தபடி, 'நித்திய நியமமாகக்' கொண்டு ஒவ்வொரு வருடமும் வசந்த காலத்தில் ஆசரித்து வந்தார்கள்
(யாத் 12:14). எனினும் இது ஒரு ஞாபகார்த்த பலியாகும். எகிப்தில் அவர்கள் ஆசரித்த முதல் பஸ்காவே ஒரு பெரும் பலன் மிக்க தியாக பலி தேவாலயம் கட்டப்படுவதற்கு முன் ஒவ்வொரு பஸ்கா பண்டிகையின்போதும் தேவனுடைய மக்கள் தங்கள் வீடுகளில் குடும்பம், குடும்பமாகக் கூடி, ஒரு ஆட்டுக்குட்டியைக் கொன்று, அதைச் சுட்டு, கசப்பான கீரையோடும், புளிப்பில்லாத அப்பத்தோடும் புசித்து வந்தார்கள். மிக முக்கியமான அம்சம் என்னவெனில் பஸ்காபண்டிகை ஆசரிக்கும்போது. எகிப்தில் பார்வோனின் அடிமைத்தனத்திலிருந்து தேவன் தமது வல்லமையினால், எவ்வாவு அற்புதமாகத் தங்கள் முன்னோரை விடுவித்தார் என்பதை தேவனுடைய மக்கள் நன்றியுடன் நினைவு கூர்ந்து, தம் சந்ததியினருக்கு எடுத்துக் கூறினார்கள். இவ்வாறு தலைமுறை தலைமுறையாகப் பின் சந்ததியாருக்கு எபிரெய மக்கள் தேவன் தங்களை மீட்டுக் கொண்டதையும், எகிப்திலிருந்து விடுதலை பெற்று வெளியேறியதையும் அறிவித்து நன்றியுடன் நினைவு கூர்ந்தனர்.
(யாத் 12:26) தேவாலயம் கட்டி முடிக்கப்பட்ட பின்னர், பஸ்கா பண்டிகை ஆசரிப்பும். ஆட்டுக்குட்டியைக் கொல்லுதலும் எருசலேமில் நடைபெற வேண்டும் என்று தேவன் கட்டளையிட்டார்.
(உபா 16:1-6).
பரிசுத்த நகரமாகிய எருசலேமில் பஸ்கா சிறப்பாகக் கொண்டாடப்பட்டதாகப் பழைய ஏற்பாட்டில் பல இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. (2 இரா 23:21-23; 2 நாளா 30:1-20; 35:1-19: 6:19-22).
புதிய ஏற்பாட்டுக் காலத்திலும் அது போலவே யூதர்களால் பஸ்கா பண்டிகை கொண்டாடப்பட்டது. இயேசுவானவரின் இளமைக்காலத்தில் நடந்ததாக வேதாகமத்தில் காணப்படும் ஒரே ஒரு நிகழ்ச்சி, அவர் தமது 12 ஆவது வயதில், பஸ்கா பண்டிகைக்காக அவருடைய பெற்றோரால் எருசலேமுக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகும். (லூக் 241-50) அவருடைய வாழ்க்கையின் பிற்பகுதியில் இயேசு வருடந்தோறும் பஸ்கா பண்டிகைக்காக எருசலேமுக்குத் தவறாமல் சென்று வந்தார்.
(உம், யோவா 2:13). இயேசுவின் சிலுவைப்பாடுகளுக்கு முன் எருசலேமில் தமது சீடர்களுடன் சாப்பிட்ட கடைசி இராப் போஜனம் ஒரு பஸ்கா போஜனமாகும்.
(மத் 26:12,17 முதல் 29). இயேசு தாமே ஒரு பஸ்கா ஆட்டுக்குட்டியாக பஸ்காவின் போது சிலுவையில் அறையப் பட்டார்.
(1 கொரி 5:7), அவரை விசுவாசிக்கும் அனைவரையும் மரணத்திலிருந்தும், பாவத்திலிருந்தும் மீட்பவர் அவரே.
யூதர்கள் இன்றும் பஸ்காவை ஆசரித்து வருகிறார்கள். அதன் முறைகளில் சில மாறுதல்கள் ஏற்பட்டுள்ளன.
(உபா 16:1-6) இன்படி ஒரு ஆட்டுக்குட்டி கொலை செய்யப்படும்படி, இன்று எருசலேமில் ஒரு தேவாலயம் இல்லாததால், இன்றைய யூதர்களின் பஸ்கா விருந்தில் (செடர் என்று அழைக்கப் படுகிறது) ஆட்டுக்குட்டி கொல்லப்படுவதில்லை. ஆனால் இன்றும் பஸ்கா பண்டிக்கைக்காகக் குடும்பங்கள் ஒன்று கூடுகின்றன. யூதர்களின் வீடுகளில் இருந்து புளிக்கச் செய்யும் எல்லாப் பொருட்களும் முறைப்படி வெளியேற்றப்படுகின்றன. குடும்பத்தின் தலைவரான தகப்பன் எகிப்திலிருந்து இஸ்ரவேலர் விடுதலையாகி வந்த வரலாற்றைத் திரும்பவும் அவர்களுக்கு எடுத்துக் கூறுகிறார்.
பஸ்காவும், இயேசுகிறிஸ்துவும்:
கிறிஸ்தவர்களுக்கு பஸ்காவில் இயேசு கிறிஸ்துவை சுட்டிக்காட்டும் பல தீர்க்கதரிசனமான அடையாளங்கள் உள்ளன. புதிய ஏற்பாடு, யூதர்களுடைய பண்டிகைகள் 'வரப்போகும் காரியங்களுக்கு நிழலாட்டமானவை' என்று தெளிவாகக் கற்பிக்கிறது. (கொலோ 2,16,17: எபி 10:1). அதாவது, இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தினால் மீட்பு உண்டு என்பது பஸ்காவினால் சுட்டிக் காட்டப்படுகிறது. யாத்திராகமம் 12ஆம் அதிகாரத்தில் காணப்படும் கீழ்க்கண்ட காரியங்கள், நமக்கு நமது இரட்சகரையும், அவரது சித்தத்தையும் நினைவூட்டுவதைக் கவனியுங்கள்.
(1) பஸ்கா நிகழ்ச்சியின் இதயமும், ஆத்துமாவுமான மையப்பொருள், நமது தேவனின் மீட்கும் கிருபை ஆகும். தேவன் இஸ்ரவேலரை அவர்கள் நல்ல, தகுதியான மக்களா மிருந்ததினால் எகிப்திலிருந்து விடுவிக்கவில்லை. ஆனால் தேவன் தமது மக்கள்மீது வைத்திருந்த அன்பின் காரணமாகவும், அவர் தமது உடன் படிக்கையில் உண்மையுள்ளவராய் இருந்தபடியாலும் அவர்களை விடுவித்தார்.
(உபா 7:7-10) அதுபோலவே, நாம் கிறிஸ்துவிடமிருந்து பெறும் இரட்சிப்பும், தேவனுடைய அதிசயமான கிருபையாகும்.
(எபே 2:8-10; தீத் 3:4,5 பார்க்கவும்).
(2) இஸ்ரவேலரின் குடும்பங்களில் உள்ள தலைப்பிள்ளைகள் அனைவரையும் உயிருடன் காப்பாற்றுவதற்காகவே, அவர்களுடைய வீடுகளின் வாசல் நிலைகளின் சட்டங்களில் இரத்தம் பூசப்பட்டது. இந்த இரத்தம் இயேசு சிலுவையில் சிந்திய இரத்தத்துக்கு அடையாளமாகும். இயேசுவின் இரத்தம் நம்மை மரணத்திலிருந்தும், பாவத்துக்கு எதிராக தேவனுடைய கோபத்திலிருந்தும், மீட்டு இரட்சிக்கிறது. (யாத் 12:13,23,27; எபி 9:22).
(3) பஸ்கா ஆடு ஒரு பலியாயிருந்தது. (யாத் 12:27). அது முதற்பேறான பிள்ளைகளுக்குப் பதிலாகப் பலியிடப்பட்டது. இந்தப் பலி, விசுவாசியின் மாணத்துக்குப் பதிலாகக் கிறிஸ்து அடைந்த மரணத்தைக் குறிக்கிறது. (ரோம 3:25 குறிப்பைப் பார்க்கவும்). பவுல் வெளிப்படையாகக் கிறிஸ்துவை நமக்காகப் பலியிடப்பட்ட பஸ்கா ஆட்டுக் குட்டி என்கிறான்.
(1கொரி 5:7)
(4) மரணத்துக்கெனக் குறிக்கப்பட்ட ஆண் ஆட்டுக்குட்டி "பழுதற்றதாக” இருக்க வேண்டும். (யாத் 12:5). இந்த ஆட்டுக்குட்டி, கிறிஸ்துவின் பாவமின்மையையும் கிறிஸ்து மாசற்ற தேவகுமாரன் என்பதையும் முன்னடையாளமாகக் காட்டுகிறது.
(யோவா 8:46; எபி 4:15)
(5) ஆட்டுக்குட்டியின் மாம்சத்தை இஸ்ரவேல் வம்சத்தார் சாப்பிட்டதன்மூலம் அந்த ஆட்டுக் குட்டியின் மரணத்தோடு அடையாளப்படுத்திக் காண்பிக்கப்படுகிறார்கள். அது அவர்களை சரீரப் பிரகாரமான மரணத்திலிருந்து இரட்சித்தது. அதுபோலவே இராப்போஜனத்தில் நாம் பங்கு கொள்வதன்மூலம் நாம் கிறிஸ்துவின் மரணத்தில் பங்குபெறுகிறோம். அது நம்மை நமது ஆவிக்குரிய மரணத்திலிருந்து காப்பாற்றுகிறது.
(1 கொரி 10:16,17,11:24-26) பஸ்காவின் முதன்முதலான பலியைப்போல கல்வாரிச் சிலுவையில் இயேசுவின் பலியும் பெரும் பலன் மிக்க பலியாகும். திருவிருந்து ஆராதனையை ஒரு ஞாபகார்த்தமாகவும், சிலுவை மரணத்தை நினைவுகூருவதாகவுமே நாம் ஆசரிக்கிறோம்.
(1 கொரி 1124).
(6) எகிப்தில் இஸ்ரவேலரின் வீடுகளின் நிலைச் சட்டங்களில் இரத்தம் தெளிக்கப்பட்டது. இது தேவனுடைய கட்டளைக்கு விசுவாசத்துடன் கீழ்ப் படிந்து செய்யப்பட்டது. (யாத் 12:28; எபி 11:28ஐ பாருங்கள்).
இந்த விசுவாசக் கீழ்ப்படிதல் அவர்களுக்கு இரத்தத்தின் மூலம் உள்ள மீட்பைத் தந்தது. (யாத் 12:7,13). கிறிஸ்துவின் இரத்தத்தினால் உண்டாகும் மீட்பு, "விசுவாசத்தினால் ஏற்படும் கீழ்ப்படிதலின்" மூலம் கிடைக்கிறது.
(ரோம 1:5;16:25)
(7) பஸ்கா ஆட்டுக்குட்டியின் மாம்சம், புளிப்பில்லா அப்பத்துடன் சாப்பிடப்பட வேண்டும். (யாத் 12:8), 'புளிப்பு என்பது வேதாகமத்தில் பாவத்தையும், அக்கிரமத்தையும் குறிக்கிறது. (யாத் 13:7; மத் 16:6; மாற் 8:15; ஐ பார்க்கவும்). புளிப்பில்லாத அப்பம், விடுவித்து மீட்கப்பட்ட இஸ்ரவேலர் எகிப்திலிருந்து பிரிந்து வெளியேறிவிட்டதைக் குறிக்கிறது. அதாவது உலகத்திலிருந்தும், பாவத்திலிருந்தும், விடுவிக்கப்படுதல், (யாத் 12:15), அதுபோலவே, தேவனுடைய மீட்கப்பட்ட மக்களும், பாவம் நிறைந்த இந்த உலகிலிருந்து பிரிந்து, தேவனுக்கே தம்மை முழுவதுமாக அர்ப்பணிக்க வேண்டும்.
தொடர்ந்து வாசியுங்கள் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமென்.
கிறிஸ்துவின் பணியில் சகோதரன் சிலுவை ராஜா
தொடர்புக்கு
9841711591.
Comments