மகளை இழந்த ஒரு தகப்பனின் ஒப்பாரி.
மகள்களை இழந்த தகப்பன்மார்களே வாருங்கள் ஒன்று கூடி ஒப்பாரி வைப்போம்.... இந்த வலி எனக்கு புதிதும் இதயத்தை குத்தும் கூர்மையான அம்புமாக இருக்கிறது.......
விழுந்தவனுக்கும் இழந்தவனுக்கும் இளைப்பாறுதல் கொடுக்கும் எம்பெருமான் எனக்கு இளைப்பாறுதல் கொடுப்பாரா...
ஊழியங்களை தவிர ஒன்றுமே தெரியாத அப்பாவி அப்பாவை விட்டு..... எங்கே போனாய் மகளே....
வீட்டில் உன் நினைவுகள்
சபையில் உன் நினைவுகள்
ரயில் நிலையத்தில் உன் நினைவுகள்...
விமான நிலையத்தில் உன் நினைவுகள்.... சாப்பிடும் போதும் உன் நினைவுகள்..... எங்கேயும் எப்போதும் உன் நினைவுகளே....
நினைவுகளே நினைவுகளே உங்களுக்கு சாவு வராமல் என் பிள்ளைக்கு வந்தது என்ன?
அழுவதற்கு பெலன் இல்லையம்மா என் தங்கமே.... உன்னை இழந்த இந்த பாவி ஆறுதல் இல்லாமல் அலைகிறேன் என் செல்லமே....
திடீரென நீ வந்திடுவாயா என்று பால்கனியில் நின்று பார்க்கிறேன்... மகள் வந்து விட்டாள் என்று ஆசையாக கதவை திறக்கும் நான் படபடப்புடன் திறக்கிறேன்.....
என்னை நீ தானே அடக்கம் செய்யனும்.. அது தானே இறை நீதி...... உன்னை அடக்கம் செய்யும் இந்த கொடிய தண்டனை திடீரென விழுந்துவிட்டதே.....
பேச முடியவில்லை.... விம்முகிறேன்.....நெஞ்சு வலிக்கிறது... மனம் பேதலிக்கிறது... சாப்பிட மனசு இல்லை.... எழுத முடியவில்லை கை நடுங்குகிறது.... நடக்கமுடியவில்லை..... மெதுவாக நடக்கிறேன்..... யாரையும் முகம் கொடுத்து பேச முடியவில்லை.....
ஆறுதல் சொல்ல தெரியாதவர்களிடம் சிக்கி தவிக்கும் நிலையில் அப்பாவை விட்டு விட்டு போயிட்டியே செல்லமே...... குத்தி பேசுகிறார்கள்.... உன்னை சரியாக கவனிக்கவில்லை..... என்று பேசுகிறார்கள்......
ஆன பிறகு வரும் ஆலோசனைகள் அபத்தமானவைகள் என்று உனது தகப்பனாகிய எனக்கு தெரியும் தாயே....
அப்பா சாப்பிட்டிங்களா என்று கேட்கும் உனது தொனியில் எனது பசி தீருமே.... தங்கமே....
எனது வாலிபத்தை இழந்தேன்.... சொத்துக்களை இழந்தேன் சுகத்தை இழந்தேன்.... பணங்களை இழந்தேன்..... உறவுகளை இழந்தேன்... நண்பர்களை இழந்தேன்.... எதுவுமே பெரியதாக தெரியவில்லை.... அவைகளை இழந்த பிறகு எனக்குள் திமிரும் தைரியமும் தானே வரும்....
இழக்க கூடாத இழக்க விரும்பாத விலையேறப்பெற்ற அன்பு ரோஜாவை..... இழந்த பின்... ஒரு கோழையாய் பலவீனனாய் பைத்தியக்காரனாக நிற்கிறேன்.... அம்மா....
பாச மலரே உனது பிறப்பு சான்றிதழை வாங்க மகிழ்ச்சியுடன் வரிசையில் நின்ற நான் உனது இறப்பு சான்றிதழை வாங்க கண்ணீர் மல்க நிற்கிறேன்......
மகள்களை இழந்து தகப்பன்மார்களே வாருங்கள் ஒன்று கூடி நாம் ஒப்பாரி வைப்போம்..... இந்த வலி எனக்கு புதிதானது......
பேதையான உன் அம்மா
சூது வாது தெரியாத உன் அண்ணன்...
தாய் அன்பு உள்ள தாய்மாமன்மார்கள்.... நீ தான் உயிர் என்று வாழும் ஆச்சிகள்...
நீ போனதை கூட தெரியாத உன் தாத்தா.... உன்னை இழந்து தவிக்கும் உற்றார் உறவினர் சபையார்.... மொத்த கண்ணீரையும் சிந்தி விட்டார்கள் என் செல்லமே.....
இழந்தது வருத்தமாயினும் நீ போய் சேர்ந்த கர்த்தரின் மகிமை இருக்கும் பாவம் இல்லாத சாபம் இல்லாத வருத்தம் இல்லாத கண்ணீர் இல்லாத பரலோகம்... உன் அப்பாவின் இருதயத்தின் ஆழத்தில் சமாதானம்..... இனி நீ இந்த பாழான லோகத்திற்கு வரமாட்டாய்..... நான் தான் அங்கு வருவேன்..... உன்ன காண ஆவலாக வாஞ்சையாக இருக்கும்
உன் அன்பு அப்பா......
பாஸ்டர். எஸ். டி. லிவிங்ஸ்டன்.
https://www.uyarnthamthukkal.in/search
Comments