முற்பிதாக்களுடன் உடன்படிக்கை
ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு என்பவர்களுடன் தேவனுடைய உடன்படிக்கை
ஆதி 26:3-5 “இந்தத் தேசத்திலே வாசம் பண்ணு; நான் உன்னோடே கூட இருந்து, உன்னை ஆசீர்வதிப்பேன். நான் உனக்கும், உன் சந்ததிக்கும் இந்தத் தேசங்கள் யாவையும் தந்து, உன் தகப்பனாகிய ஆபிரகாமுக்கு நான் இட்ட ஆணையை நிறைவேற்றுவேன். ஆபிரகாம் என் சொல்லுக்குக் கீழ்ப்படிந்து, என் விதிகளையும், கற்பனைகளையும், என் நியமங்களையும், என் பிரமாணங்களையும், கைக்கொண்டபடியினால், நான் உன் சந்ததியை வானத்தின் நட்சத்திரங்களைப்போலப் பெருகப்பண்ணி, உன் சந்ததிக்கு இந்தத் தேசங்கள் யாவையும் தருவேன். உன் சந்ததிக்குள் பூமியிலுள்ள சகல ஜாதிகளும் ஆசீர்வதிக்கப்படும் என்றார்”.
ஒரு உடன்படிக்கையின் தன்மை:
வேதாகமம் முழுவதிலும் தமது மக்களோடு தேவனுக்குள்ள உறவு உடன்படிக்கையின் மூலம் உள்ளதாகக் குறிப்பிடப் பட்டுள்ளது. 'உடன்படிக்கை' என்ற சொல் வேதாகமத்தில் முதன்முதலில் ஆதியாகமம் 6:18 இல் வருகிறது. அது புதிய ஏற்பாடு வரை தொடர்கிறது. புதிய ஏற்பாட்டில் தேவன் மனிதர்களுடன் இயேசுகிறிஸ்துவில் ஒரு புதிய உடன்படிக்கையை ஏற்படுத்தியுள்ளார். ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு என்னும் கோத்திரப் பிதாக்களுடன் தேவன் செய்து கொண்ட உடன்படிக்கையைப் புரிந்து கொள்வதன் மூலம், தேவனுடைய உடன்படிக்கை உறவின் மூலம் நாம் அவருடன் தொடர்புகொண்டு எவ்வாறு வாழ வேண்டும் என்று தேவன் விரும்புகிறார் என்பதைக் கற்றுக்கொள்ளுகிறோம்.
1) வேதாகமத்தில் வெளிப்படுத்தப்பட்டுள்ள தேவனுடைய சிறப்பான 'உடன்படிக்கைப்பெயர்' 'யாவே' (இது 'கர்த்தர்' என்று மொழிபெயர்க்கப் பட்டுள்ளது. ஆதி 2:4; யாத். 3:14, )
இந்த உடன்படிக்கைப் பெயரில் புதையுண்டிருக்கும் கருத்து, தேவனுடைய அன்பான இரக்கம், மனித இனத்தை மீட்டு இரட்சிக்கவேண்டும் என்ற கரிசனை, தம்முடைய மக்களுடன் அவருடைய சமுகம் எப்போதும் இருத்தல், அவர்களோடு எப்பொழுதும் நல்லுறவுடன் இருக்க வேண்டும் என்னும் ஆவல், அவர்களுக்கு ஆண்டவராயிருக்க வேண்டும் என்னும் திட்டம் என்பனவாகும்.
2) தேவனுடைய உடன்படிக்கையின் அடிப்படையான வாக்குத்தத்தம், "உனக்கும், உனக்குப் பின்வரும் உன் சந்ததிக்கும், நான் தேவனாயிருப்பேன்" என்பதாகும்.
(ஆதி 17:7, ). இந்த வாக்குத்தத்தத்தில், உடன்படிக்கையின் மற்ற எல்லா வாக்குத்தத்தங்களும் உட்பட்டுவிடுகின்றன. அதாவது, தம்மிடம் விசுவாசம் உள்ள மக்களிடம் தேவன் தாம் அவர்களுடைய தேவனாயிருக்கும்படி உறுதியாகத் தம்மை இணைத்துக் கொள்வதால், அவருடைய கிருபை, பாதுகாப்பு, நன்மை, ஆசீர்வாதங்கள் ஆகியவை அன்புடன் அவர்களுக்குக் கொடுக்கப்படுகின்றன. (எரே 11:4; 24:7; 30:22; 32:38; எசே 11:20; 36:28; 55 8:8).
3) மனித இனத்தோடு தேவனுடைய உடன்படிக்கையின் இறுதி நோக்கம், இஸ்ரவேல் தேசத்துக்கு மட்டுமல்ல, உலகம் முழுவதும் உள்ள அனைத்து தேசங்களிலும் வாழும் மனித இனம் முழுவதற்கும் இரட்சிப்பு உண்டாக்குவதே. ஏற்கெனவே ஆபிரகாமிடம் தேவன், "உன் மூலம் உலகம் முழுவதும் உள்ள சகல ஜாதிகளும் ஆசீர்வதிக்கப்படும்" என்று வாக்குத்தத்தம் பண்ணியிருந்தார் (ஆதி 12:3; 18:18; 22:18; 26:4). தேவன் தமது உடன்படிக்கையின் கிருபையை இஸ்ரவேல் தேசத்தின் மீது காட்டினார். ஏனெனில் அவர்கள் "புறஜாதியாருக்கு ஒளியாகத் திகழ வேண்டும்" என்று அவர் எதிர்பார்த்தார். (ஏசா 49:6; 42:6), இந்த உடன்படிக்கை, இயேசு கிறிஸ்து உலக இரட்சகரான மீட்பராகப் பிறந்ததன் மூலம் கிறிஸ்தவர்கள் இந்த நற்செய்தியை உலகெங்கும் பரவச்செய்ய ஆரம்பித்தபொழுது நிறைவேறிவிட்டது. (லூக் 2:32, அப் 13:46,47; கலா 38-14).
4) வேதாகமம் முழுவதிலும் ஆங்காங்கே மனிதர்களுடன் தேவன் செய்த உடன்படிக்கை ஒழுங்குகள் இரண்டு அடிப்படைக் கொள்கைகளை வெளிப் படுத்துகின்றன. அவையாவன.
அ) தம்முடைய உடன்படிக்கைகளின் வாக்குத்தத்தங்களையும் நிபந்தனைகளையும் தேவனே செய்திருக்கிறார்.
ஆ) விசுவாசத்துடன் கூடிய கீழ்ப்படிதலுடன் மனித இனம் அவற்றை அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும். சில சந்தர்ப்பங்களில், உடன்படிக்கையில் ஈடுபடும் இரு பிரிவினரும் பின்பற்ற வேண்டிய கடமைகளையும், பொறுப்புகளையும் தேவனே திட்டமாக வரையறுத்துக்கொடுத்தார். எந்தச் சந்தர்ப்பத்திலும் உடன்படிக்கை குறித்த வரையறைகளைப் பற்றியோ, நிபந்தனைகளைப் பற்றியோ, மக்கள் தேவனிடம் பேரம் பேசவோ, கேள்வி கேட்கவோ நேர்ந்ததில்லை
ஆபிரகாமுடன் தேவனுடைய உடன்படிக்கை:
1) தேவன் ஆபிரகாமுடன் நேரடி உடன்படிக்கை செய்தார். பின்
(ஆதி 15) அவர் வெளிப்படையாக அநேக வாக்குத்தத்தங்களைக் கொடுத்தார். அவை: கர்த்தர் ஆபிரகாமுக்குக் கேடகமும், பெலனுமாயிருப்பார் (ஆதி 15:1) எண்ணற்ற சந்ததியார் ஆபிரகாமுக்கு இருப்பார்கள்.
(ஆதி 15:5).
கானான் தேசம் ஆபிரகாமுக்குச் சுதந்தரமாகும்.
(ஆதி 15:7) (ஆதி. 15:7, 15:6;17:8;)
2) இந்த வாக்குத்தத்தங்களை விசுவாசத்துடன் ஏற்றுக் கொள்ளும்படி தேவன் ஆபிரகாமை அழைத்தார். அவன் அவற்றை ஏற்றுக் கொள்ள வேண்டும். தேவனைத் தன் கர்த்தராக நம்பி விசுவாசிக்க வேண்டும். அவன் அப்படிச் செய்ததனால், தேவனால் ஆபிரகாம் ஒரு "நீதிமான்" என்று ஏற்றுக் கொள்ளப்பட்டான். (ஆதி 15:5) அவன் தேவனோடுள்ள உறவில் உறுதி கொண்டான்.
3) உடன்படிக்கையை ஏற்றுக்கொள்ள முதலில் விசுவாசம் தேவை. ஆனால் உடன்படிக்கை ஆசீர்வாதங்கள் தொடர்ந்து கிடைக்க வேண்டுமானால் ஆபிரகாம் தன்னுடைய கீழ்ப்படிதலுள்ள வாழ்க்கையால் தேவனைப் பிரியப்படுத்துவதைத் தேவன் எதிர்பார்த்தார்.
அ) ஆபிரகாம் தேவனுக்கு முன்பாகக் குற்றமற்றவனாக வாழ வேண்டும் என்று தேவன் கட்டளையிட்டார்.
(ஆதி 17:1, ) அதாவது அவனுடைய விசுவாசத்துடன் கீழ்ப்படிதலும் இல்லாவிட்டால்
(ரோம 1:5) ஆபிரகாம் தேவனுடைய நித்திய நோக்கங்களில் பங்குபெறும் வாய்ப்பை இழந்து விடுவான்.
ஆ) ஒரு குறிப்பிட்ட சமயத்தில் தேவன் ஆபிரகாமைத் தன் மகன் ஈசாக்கைப் பலியிடும்படி கட்டளையிட்டார்.
(ஆதி 22:1.2) அந்தத் தேர்வில் ஆபிரகாம் வெற்றி பெற்று விட்டாள். அதன்பலனாக தேவன் தம்முடைய உடன்படிக்கையை ஆபிரகாமுடன் தொடர்ந்து வைத்துக் கொள்ளுவதாக வாக்களித்தார்.
(ஆதி 22:18, )
இ) தேவன் ஈசாக்கிடம் உடன்படிக்கை ஆசீர்வாதங்கள் அவனுக்கும் நியாயப்படி செல்லுபடியானதால் தொடர்ந்து அவை அவனுக்கும் கொடுக்கப்படும் என்றும், காரணம் அவனுடைய தகப்பனாகிய ஆபிரகாம் தேவனுக்கும், அவருடைய கட்டளைகளுக்கும் கீழ்ப்படிந்திருந்தான் என்றும் திட்டவட்டமாக கூறினார்.
(ஆதி 26:4,5).
4) ஆபிரகாமும், அவனுடைய சந்ததியாரும் தங்களில் பிறக்கும் ஒவ்வொரு ஆண் பிள்ளைக்கும் விருத்தசேதனம் செய்ய வேண்டும் என்று தேவள் திட்டவட்டமாகக் கட்டளையிட்டார். (ஆதி. 17:9-13) தொடர்ந்து தேவன், அவருடைய மக்களில் எந்த ஆண் பிள்ளையாவது விருத்தசேதனம் செய்யாமலிருந்தால் அவன் தேவனுடைய மக்கள் கூட்டத்திலிருந்து விலக்கிவிடப்படுவாள் என்று எச்சரித்தார். (ஆதி 17:14) ஏனெனில் அவன் தேவனுடைய உடன்படிக்கையை மீறினவனாவான். அதாவது, தேவனுக்குக் கீழ்ப்படிய மறுத்தல், உடன்படிக்கை ஆசீர்வாதங்களைப் பெற முடியாமல் செய்துவிடும்.
5) ஆபிரகாமோடு தேவன் செய்த உடன்படிக்கை ஒரு "நித்திய உடன்படிக்கை" யாயிருந்தது.
(ஆதி 17:7). அந்த உடன்படிக்கை ஒரு நிரந்தரமானதாயிருக்க வேண்டும் என்று தேவன் விரும்பினார். எனினும் ஆபிரகாமின் சந்ததியார் அதை மீற முடியும். அப்படி நேர்ந்தால் தேவன் தமது வாக்குத்தத்தங்களில் நிலைத்திருக்கமாட்டார். உதாரணமாக, கானான் தேசம் ஆபிரகாமுக்கும் அவனுடைய சந்ததியாருக்கும் நித்திய சுதந்தரமாயிருக்கும் என்று தேவன் வாக்குத்தத்தம் பண்ணியிருந்தார். (ஆதி 17.8) இந்த வாக்குத்தத்தம், இஸ்ரவேலரின் விசுவாச மறுதலிப்பு, யூதாவின் உண்மையற்ற தன்மை, யூதாவின் மக்கள் தேவனுடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிய மறுத்தல் ஆகியவற்றின் மூலம் முறிக்கப்பட்டது.
(ஏசா 24:5; எரே 31:32). இவ்வாறு இஸ்ரவேல் மக்கள் அனைவரும் அசீரியாவுக்குச் சிறைக்கைதிகளாகப் பிடித்துக் கொண்டு போகப்பட்டார்கள்.
(2 இரா அதி 17). யூதாவின் மக்கள் பின்னர் சிறைக்கைதிகளாகப் பாபிலோனுக்குக் கொண்டு செல்லப்பட்டார்கள்.
(2 இரா அதி 26; 2 நாளர், அதி 36; எரே 11:1-17; எசே 17:16-21).
ஈசாக்குடன் தேவனுடைய உடன்படிக்கை:
1) தேவன் ஆபிரகாமுடன் செய்து கொண்ட உடன்படிக்கையை அவனுக்குப் பின்வரும் ஒவ்வொரு தலை முறையினருடனும் தொடர்ந்து வைத்துக் கொள்ள விரும்பினார். அதன்படி ஆபிரகாமின் மகன் ஈசாக்குடன் அந்த உடன்படிக்கையை உறுதிப்படுத்த நினைத்தார்.
(ஆதி 17:21) அதாவது, ஈசாக்குக்கு ஆபிரகாம் தகப்பனாக மட்டும் இருந்தால் போதாது. ஈசாக்கும் தேவனுடைய வாக்குத்தத்தங்களை விசுவாசத்துடன் ஏற்றுக் கொள்ளவேண்டியதிருந்தது. அதன் பின்னர் தான் தேவன் அவனிடம், "நான் உன்னுடன் இருக்கிறேன். நான் உன்னை ஆசீர்வதிப்பேன் நான் உன் சந்ததியைப் பெருகப்பண்ணுவேன்" என்றார். (ஆதி 26:24).
2) ஈசாக்கும், ரெபெக்காளும் திருமணம் செய்து கொண்ட பின்னர் முதல் இருபது வருடங்களாக அவர்களுக்குக் குழந்தை பிறக்கவில்லை.
(ஆதி 25:20,26) தன்னுடைய மனைவி கருத்தரிக்க வேண்டும் என்று ஈசாக்கு தேவனிடம் மன்றாடி ஜெபித்ததன் பலனாக ரெபெக்காளின் கர்ப்பம் திறக்கப்பட்டது.
(ஆதி 25:21) இந்தப் பதிலளிக்கப்பட்ட ஜெபமானது, உடன்படிக்கையின் நிறைவேறுதல், இயற்கையாக நடந்ததல்ல என்பதையும் தேவனைத் தேடி, அவரிடம் மன்றாடி ஜெபித்ததன் விளைவே என்பதையும் நிரூபிக்கிறது.
(ஆதி 25:21).
3) உடன்படிக்கையின் ஆசீர்வாதங்களைத் தொடர்ந்து பெற்றுக் கொள்ளுவதற்கு ஈசாக்கு முற்றிலும் தேவனுக்குக் கீழ்ப்படிகிறவனாக இருக்க வேண்டியதிருந்தது. கானான் தேசத்தை ஒரு தடவை பஞ்சம் தாக்கியபோது, தேவன் ஈசாக்கிடம் "நீ எகிப்துக்குப் போகாதே. உன் இடத்திலேயே இரு" என்றார். நீ எனக்குக் கீழ்ப்படிந்தால் நான் உன் தகப்பனாகிய ஆபிரகாமுக்கு ஆணையிட்டுக் கொடுத்த என்னுடைய வாக்குத்தத்தத்தை உறுதிப் படுத்துவேன்" என்றார்.
(ஆதி 26:3; 26:5, ).
யாக்கோபுடன் தேவன் செய்த உடன்படிக்கை: 1) ஈசாக்குக்கும், ரெபெக்காளுக்கும் ஏசா, யாக்கோபு இரண்டு பிள்ளைகள் இருந்தார்கள். சாதாரணமாக முதலில் பிறந்தவனுக்கு உடன்படிக்கை ஆசீர்வாதங்கள் சென்று சேரவேண்டும். (அதாவது மூத்த குமாரனாகிய ஏசாவுக்கு). ஆனால் இரட்டைக் குழந்தைகளில் மூத்தவன் இளையவனுக்கு ஊழியம் செய்வான் என்று தேவன் ரெபெக்காளுக்கு வெளிப்படுத்தினார். ஏசாவும் தன் சேஷ்ட புத்திரபாகத்தை அசட்டை செய்தான். (ஆதி 25:31). மேலும், அவள் தன்னுடைய பெற்றோரின் நீதியான வாழ்க்கை நெறிகளை அலட்சியப்படுத்தும் வண்ணமாக உண்மையான தேவனை வழிபடாத, இரண்டு பெண்களைத் திருமணம் செய்து கொண்டான். சுருங்கக் கூறின் ஏசாவுக்கு உடன்படிக்கை ஆசீர்வாதங்களின் மேல் அக்கறை இல்லை. அதன்பலனாக எதிர்காலத்திற்குரிய ஆவிக்குரிய ஆசீர்வாதங்களை விரும்பிய யாக்கோபு, ஏசாவைக் காட்டிலும் அதிகமாக வாக்குத்தத்தங்களைப் பெற்றுக் கொண்டான்.
(ஆதி 28:13-15)
2) ஆபிரகாம், ஈசாக்கு ஆகியோரிடம் இருந்தது போல, யாக்கோபிடமும் தேவள் செய்த உடன்படிக்கையின்படி "விசுவாசத்தின் மூலம் வரும் கீழ்ப் படிதல்" (ரோம 1:5) யாக்கோபிடமும் இருக்க வேண்டும். அப்பொழுதுதான் உடன்படிக்கையும், வாக்குத் தத்தங்களும் அவனுடைய வாழ்க்கையில் நிறைவேறும். இந்தக் கோத்திரப்பிதா, தன்னுடைய வாழ்க்கையில் பெரும் பகுதி தன் வாழ்க்கையில் நிலைத்திருக்கவும், வெற்றிபெறவும் தன் முயற்சியிலேயே சார்ந்திருந்தான். யாக்கோபு கடைசியாக தேவனுடைய கட்டளையையும், சித்தத்தையும் ஏற்று, அவற்றுக்குக் கீழ்ப்படிந்தான்.
(ஆதி 31:13) அதன்படி அவன் ஆரானை விட்டுப் புறப்பட்டு வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட கானான் தேசத்துக்குப் போனான். இன்னும் குறிப்பாக, தேவனுடைய கட்டளைப்படி பெத்தேலுக்குச் சென்றான்.
(ஆதி 35:1-7) அப்பொழுது தான் தேவன், தாம் ஆபிரகாமுடன் செய்து கொண்ட உடன்படிக்கையையும், வாக்குத் தத்தங்களையும், யாக்கோபுடன் புதுப்பித்துக் கொண்டார்.
(ஆதி 35:9-13) மேலும் அறிந்து கொள்ள வேதத்தை வாசியுங்கள் நம்முடைய உயர்ந்த முத்துக்கள் கட்டுரையை தினமும் வாசியுங்கள் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமென்.
கிறிஸ்துவின் பணியில் சகோதரன் சிலுவை ராஜா
தொடர்புக்கு
9841711591.
Comments