பாவப்பரிகார நாள்
பாவப்பரிகார நாள்
(லேவி 16:32,33). “அபிஷேகம் பெற்றவனும்... ஆசாரிய ஊழியஞ் செய்யப் பிரதிஷ்டை
பண்ணப்பட்டவனுமாகிய ஆசாரியனே பாவநிவிர்த்தி செய்யக் கடவன். பரிசுத்தஸ்தலத்துக்கும். ஆசரிப்புக் கூடாரத்துக்கும், பலிபீடத்துக்கும், பிராயச்சித்தஞ் செய்து, ஆசாரியருக்காகவும்,
சபையின் சகல ஜனங்களுக்காகவும் பாவநிவிர்த்தி செய்யக் கடவன்."
பிராயச்சித்தம் செய்வதன் அவசியம்: பாவ நிவிர்த்தி செய்தல்' என்னும் சொல் 'கப்பர்' என்னும் எபிரெயச் சொல்லிலிருந்து வந்த 'கிப்புரீம்' என்றும் சொல்லால் குறிக்கப்படுகிறது. இதன் பொருள் 'மூடிமறைத்தல்' என்பது. இச்சொல்லுக்குப் பாவத்துக்குச் சமமான பிராயச்சித்தமாக (மீட்கும் பொருள் அல்லது பிணைத்தொகை) ஒரு தொகையைச் செலுத்தி, பாவத்தை மூடி மறைத்து விடுவதாக ஒரு கருத்து உள்ளது. இதற்குச் செய்யப்பட்ட பாவத்துக்குத் தகுந்த ஈடு செலுத்தப்பட்டுவிட்டது என்று பொருள் கொள்ளுவார்கள். (யாத் 30:12; எண் 35:31; சங் 49:7; ஏசா 43:3 ஆகிய வசனங்களை கவனிக்கவும்).
1) பிராயச்சித்தம் செய்வதன் அவசியம், இஸ்ரவேலர்களின் பாவங்களுக்குப் பரிகாரம் காணப்படாவிட்டால் அவர்கள் தேவனுடைய கோபத்துக்கு ஆளாக நேரிடும் என்பதால் ஏற்பட்டது. (லேவி 16:30, ரோம 1:18; கொலோ 3:5; 1 தெச 2:16) இவ்வாறு பாவப்பரிகார நாளின் நோக்கம், முந்தின வருடத்தில் பலிகளின் மூலம் பரிகாரம் காணப்படாத அனைத்து பாவங்களுக்காகவும் ஒரு பூரணமான, பொதுவான பாவநிவாண பலி செலுத்துவதேயாகும். இதன் மூலம் மக்கள் அனைவரும் தாங்கள் கடந்த வருடம் முழுவதும் செய்த பாவங்களிலிருந்து விடுதலை பெற்றிருப்பார்கள். அவர்கள் மீது தேவன் கொண்டிருந்த கோபம் விலகியிருக்கும். அவர்கள் இதன் மூலம் தேவனுடன் நெருங்கிய உறவு கொள்ளுவார்கள். (லேவி 16:30-34; எபி 9:7).
2) தேவன் இஸ்ரவேலரை இரட்சிக்கவும், அவர்களுடைய பாவங்களை மன்னித்து, அவர்களைத் தம்முடன் ஒப்புரவாக்கிக் கொள்ளவும் விரும்பினபடியால் அவர் அவர்களுக்கு ஒரு இரட்சிப்பின் வழியை அருளினார். அவர்களுக்குப் பதிலாக, அவர்களுடைய இடத்தில் ஒரு குற்றமற்ற உயிரை ஏற்றுக் கொள்வதாக (பழுதற்ற மிருகத்தின் உயிர்) அறிவித்தார். இந்த மிருகம் அவர்களுடைய குற்றங்கள் யாவையும் தன் மீது ஏற்று, அவர்கள் அனுபவிக்க வேண்டிய தண்டனையையும் பெற்று அனுபவிக்கிறது. (லேவி 17:11 ஏசா 53:4,6,11). அந்த மிருகம் கொல்லப்படும்போது சிந்தப்படும் இரத்தம் அந்த மனிதர்களின் பாவங்களை மூடிவிடுகிறது.
பாவப்பரிகாரத்தின் நாளன்று நடக்கும் சடங்காச்சாரங்கள்: லேவியராகமம் 16ம் அதிகாரம் பாவப்பரிகார நாளைப் பற்றி விவரிக்கிறது. அது யூதர்களின் வருஷத்தில் மிகவும் புனிதமான நாளாகும். இந்த நாளில் பிரதான ஆசாரியன் முதலாவது தான் தண்ணீரில் குளித்து சுத்திகரித்து, பரிசுத்தமான ஆடைகளை அணிந்து கொண்டு, தன்னை ஆயத்தப்படுத்திக் கொள்வான். பின்பு, மக்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்வதற்கு முன்னர் அவன் தன்னுடைய பாவங்களுக்காக ஒரு காளையைப் பலிசெலுத்த வேண்டும். அடுத்தபடியாக, அவன் இரண்டு ஆட்டுக்கடாக்களைக் கொண்டுவந்து அவற்றின்மேல் சீட்டுப் போடுவான். அவற்றில் எதன் மீது சீட்டு விழுகிறதோ அது பலியிடப்படும். மற்றது போக்காடாக விடப்படும். (லேவி 16:6). முதல் ஆட்டை அவன் கொன்று அதன் இரத்தத்தை எடுத்துக் கொண்டு திரைகளுக்குப் பின்னால் இருக்கும் மகா பரிசுத்தஸ்தலத்தினுள் செல்வான். அங்கு பிராயச்சித்தம் செய்து அந்த இரத்தத்தைகிருபாசனத்தின் மேல் தெளித்து பின்னர் அந்த இரத்தத்தை தேவனுக்கும் உடன்டிபடிக்கை பெட்டியிலிருக்கும் கற்பனைப் பலகைகளுக்கும் இடையில் வைப்பாள். (கற்பனைகள் முன்னால் அவர்களால் மீறப்பட்டு இப்பொழுது பலியின் இரத்தம் பூசி மூடப்பட்டுள்ளன). இவ்வாறு தேசமக்கள் அனைவரது பாவங்களுக்காகவும், பிராயச்சித்தம் செய்து முடிக்கப்படும். (லேவி 16:15,16). கடைசியாக உயிரோடிருக்கும் வெள்ளாட்டுக் கடாவைக் கொண்டுவந்து, அதன் மேல் இஸ்ரவேல் புத்திரருடைய அனைத்து அக்கிரமங்களையும் சுமத்தி, அவர்களுடைய பாவங்களையும், மீறுதல்களையும் அறிக்கையிட்டு, அந்த ஆட்டை வனாந்தரத்தில் கொண்டுபோய் விட்டுவிடும்படி அனுப்பி விடுவான். இதன் பொருள் இஸ்ரவேல் மக்கள் அனைவருடைய பாவங்கள் அனைத்தும் அந்த ஆட்டின் மூலமாக நகரத்தின் பாளயத்துக்குப் புறம்பே அனுப்பப்பட்டு அவை வனாந்தரத்தில் மறைந்துபோகும் என்பதாகும்.
(லேவி 16:21,22)
1) பாவப்பரிகாரம் செய்யப்படும் நாள் ஒரு அமைதியான கூடுகையாகும்.
அந்த நாளில் மக்கனைவரும் உபவாசம் இருந்து, தங்களைத் தாழ்த்தி, ஆண்டவருக்கு முன்பாகப் பணிவுடன் காணப்படுவார்கள். (லேவி 16:31) இது பாவத்தின் கொடூரத்தையும், மக்கள் பூரணமான, நிலையான விசுவாசம் உள்ளவர்களாய், மனந்திரும்பும் இருதயத்துடன் பாவ அறிக்கை செய்து,
தம் பிழை உணரும்போதுதான் தேவனின் பாவப்பரிகாரம் செய்யும் திட்டம் பயனுள்ளதாயிருக்கும் என்பதையும் காட்டுகிறது. (லேவி 23:37; எண் 15:30, 29:7).
2) பாவப்பரிகார நாளில் முந்தின வருடத்தில் பலிகள் மூலம் பாவநிவிர்த்தி செய்யப்படாத அனைத்துப் பாவங்களுக்கும் பூரண பிராயச்சித்தம் செலுத்தப்பட்டு பாவ நிவிர்த்தி உண்டாகும். (லேவி 16:16,21). இதே முறையில் ஒவ்வொரு வருடமும் வருடத்துக்கொருமுறை பாவப்பரிகாரம் செய்யப்பட வேண்டும்.
கிறிஸ்துவும் பாவப்பரிகார நாளும்: பழைய ஏற்பாட்டில் உள்ள இந்தப் பாவப்பரிகார நாளும், அந்நாளில் நிறைவேற்றப்படும் சடங்குகளும் ஏராளமான உட்பொருளைக் கொண்டவை. இவை நமது ஆண்டவரும், இரட்சகருமான இயேசு கிறிஸ்து செய்து நிறைவேற்றப் போகும் காரியங்களுக்குத் தெளிவான முன்னடையாளங்களாய் இருக்கின்றன. புதிய ஏற்பாட்டில் எபிரெயர் நிருபத்தை எழுதியவர் இந்தப் பாவப்பரிகார நாளின் நிறைவேற்றத்தையும், புதிய உடன்படிக்கை அமைப்பையும் தெளிவாக விளக்கிக் கூறியுள்ளார்.
(எபி 9:6-10:18;)
1) பழைய ஏற்பாட்டுப் பாவப்பரிகாரச் சடங்குகளும், பலிகளும், வருடந்தோறும் திரும்பத் திரும்ப நடத்தப்பட வேண்டும் என்பது அவற்றின் தற்காலிகத் தன்மையைக் காட்டுகிறது. அவை பின்னால் கிறிஸ்து வந்து, மக்களால் அறிக்கைச் செய்யப்படும் பாவங்கள் அனைத்தையும் நிரந்தரமாக நீக்கி விடுவார் என்பதைச் சுட்டிக் காட்டின.
(எபி 9:28; 10:18).
2) இரண்டு வெள்ளாட்டுக் கடாக்களும், பாவப்பரிகாரம், பாவமன்னிப்பு, ஒப்புரவாகுதல், கிறிஸ்துவினால் சுத்திகரிக்கப்படுதல் ஆகியவற்றைக் குறிக்கின்றன. பலிசெலுத்தப்படும் ஆடு, மக்களின் பாவங்களுக்கான பிராயச்சித்தமாகக் கிறிஸ்து தியாக பலியாக மரணமடைந்ததைக் குறிக்கிறது.
(ரோம 3:24-26; எபி 9:11-12,24-26) போக்காடு, தேசத்தின் பாவங்களைச் சுமந்து கொண்டு வனாந்தரத்துக்குக் கொண்டு விடப்படுவது. மனந்திரும்பும்
அனைவரது குற்றங்களும், பாவங்களும் கிறிஸ்துவின் தியாகப் பலியால் நீக்கப்படுவதைக் குறிக்கிறது.
(சங் 103:12; எசா 53:8,11,12:யோவா 1:29;எஸ்பி 9:26).
3) பாவப்பரிகார நாளில் செலுத்தப்படும் பலிகள் பாவங்களைத் தற்காலிகமாக மூடிமறைக்கும் பணியைச் செய்கின்றன. அவை பாவங்களை முற்றிலுமாக நீக்கி விடுவதில்லை. சிலுவையில் சிந்தப்பட்ட கிறிஸ்துவின் இரத்தம், தேவனுடைய இறுதியான பிராயச்சித்தமாக ஆயிற்று மனித இனத்தை பாவத்திலிருந்து மீட்பதற்காக தேவன் செலுத்தும் பிராயச்சித்தம் கிறிஸ்துவின் மரணம். இது மனிதர்களின் பாவங்களை நிரந்தரமாக நீக்கிவிடுகிறது.
(எபி10:4; 10,11) கிறிஸ்து ஒரு பரிபூரணமான பலி. (எபி 9:26; 10:5-10)
அவர் நம்முடைய பாவங்களுக்கான முழு மீட்புத் தொகையையும் செலுத்தினார். தண்டனையை எற்றார். (ரோம 3:25,26; 6:23; கலா 3:13; 2 கொரி 5:21) பாவநிவாரண பலியானார். தேவனுடைய கோபத்தை நீக்கி விட்டார். நம்மை தேவனுடன் ஒப்புரவாக்கினார். அவரோடுள்ள நமது உறவுப் புதுப்பிக்கப்பட்டுள்ளது. (ரோம 5:6-11; 2 கொரி 5:18,19; 1 பேது 1:18,19; 1 யோவா 22).
4) பிரதான ஆசாரியன் பலியின் இரத்தத்துடன் அனைவருடைய பாவங்களுக்கும் பரிகாரம் செய்யும்படியாக பிரவேசித்த மகா பரிசுத்த ஸ்தலம். பரலோகத்திலுள்ள தேவனுடைய சிங்காசனத்தைக் குறிக்கிறது. கிறிஸ்து தம்முடைய மரணத்திற்குப்பின் தமது சொந்த இரத்தத்துடன் தேவனுடைய சிங்காசனத்தின் முன்பாக விசுவாசியின் பாவங்களுக்குப் பரிகாரம் செய்யும்படியாக பரலோகமாகிய இந்த "மகாபரிசுத்த ஸ்தலத்தினுள்" பிரவேசித்திருக்கிறார். (யாத் 30:10; எபி 9:7,8,11,12,24-28).
5) பாவங்களுக்காக கிறிஸ்து பரிபூரணமான பலியாகச் சிலுவையில் மரணமடைந்தது, பழைய ஏற்பாட்டுக் காலத்தில் மிருகங்கள் பாவநிவாரண பலியாகச் செலுத்தப்பட்டதற்குச் சமம். அவை கிறிஸ்துவின் தியாகபலியின் மூலம் நிறைவேறி முடிந்து விட்டன. எனவே கிறிஸ்துவின் சிலுவை மரணத்துக்குப் பின்னர் மிருகங்கள் பலியிடப்பட வேண்டியதில்லை. (எபி 9:1-18).
மேலும் அறிந்து கொள்ள வேதத்தை தொடர்ந்து வாசியுங்கள். நம்முடைய உயர்ந்த முத்துக்களை ஃபாலோ பண்ணுங்கள் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமென்.
கிறிஸ்துவின் பணியில் சகோதரன் சிலுவைராஜா
தொடர்புக்கு
9841711591.
Comments