தேவதூதர்கள் யார் ?
"தேவதூதர்கள் யார்?"
தேவதூதர்களைப் பற்றிய முழுமையான விவிலிய (Bible) விவரங்கள், அவர்களின் பணிகள், நிலைகள் மற்றும் விழுந்துபோன தூதர்களின் வரலாறு ஆகியவற்றை வசன ஆதாரங்களுடன் காண்போம்.
தேவதூதர்கள் யார்?
தேவதூதர்கள் என்பவர்கள் தேவனாகிய கர்த்தரால் உருவாக்கப்பட்ட ஆவிக்குரிய மனிதர்கள் ஆவர். அவர்கள் அழியாத தன்மை கொண்டவர்கள், திருமணம் செய்து கொள்ளாதவர்கள், மற்றும் மனிதர்களை விட அதிக வல்லமை படைத்தவர்கள்.
ஆதாரம்:
"அவரைத் தேவதூதரிலும் சற்றுச் சிறியவராக்கினீர்" (சங்கீதம் 8:5).
ஆதாரம்:
"அவர்கள் இனி மரிக்கவும் மாட்டார்கள்; அவர்கள் உயிர்த்தெழுந்தவர்களின் பிள்ளைகளானபடியினால் தேவதூதருக்குச் சமானமாயும்..." (லூக்கா 20:36).
தேவதூதர்களின் பணிகள்
விவிலியத்தின்படி தேவதூதர்கள் பல்வேறு முக்கிய பணிகளைச் செய்கிறார்கள்:
கடவுளைத் துதித்தல்: பரலோகத்தில் கடவுளை எப்போதும் ஆராதிப்பது இவர்களின் முதன்மை பணி (ஏசாயா 6:3, வெளிப் 5:11-12).
செய்தி கொண்டு வருதல்:
கடவுளின் திட்டங்களை மனிதர்களுக்கு அறிவிப்பது (உதாரணமாக: மரியாள், சகரியாவுக்கு செய்தி அறிவித்தது)
(லூக்கா 1:19, 1:26).
விசுவாசிகளைப் பாதுகாத்தல்: கடவுளுக்கு அஞ்சுகிறவர்களைச் சுற்றி பாளயமிறங்கி அவர்களைக் காப்பது (சங்கீதம் 34:7; 91:11).
தேவனின் கட்டளைகளை நிறைவேற்றுதல்: தீர்ப்பு வழங்குதல் மற்றும் கடவுளின் வார்த்தையின்படி செயல்படுதல் (சங்கீதம் 103:20, மத்தேயு 13:41).
தேவதூதர்களின் நிலைகள்
(அதிகார வரிசை)
விவிலியத்தில் தூதர்களுக்கிடையே உள்ள சில குறிப்பிட்ட நிலைகள் மற்றும் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன:
பிரதான தூதன் (Archangel):
மிக உயர்ந்த அதிகாரம் கொண்ட தூதன். மீகாவேல் மட்டுமே விவிலியத்தில் பிரதான தூதன் என்று நேரடியாக அழைக்கப்படுகிறார் (யூதா 1:9, தானி 10:13).
காபிரியேல் (Gabriel): கடவுளின் முக்கிய செய்திகளைக் கொண்டு வரும் தூதன் (தானி 8:16, லூக்கா 1:19).
சேராபீன்கள் (Seraphim):
கடவுளின் சிங்காசனத்திற்கு மேலாக நின்று, தூய்மையைப் போற்றும் தூதர்கள். இவர்களுக்கு ஆறு சிறகுகள் உண்டு (ஏசாயா 6:2-3).
கேருபீன்கள் (Cherubim):
கடவுளின் பிரசன்னத்தையும், பரிசுத்தத்தையும் பாதுகாக்கும் காவல் தூதர்கள்
(ஆதியா 3:24, எசேக்10).
விழுந்து போன தூதர்கள் வரலாறு
தொடக்கத்தில் அனைத்து தூதர்களும் நல்லவர்களாகவே படைக்கப்பட்டனர். ஆனால், ஒரு குறிப்பிட்ட தூதன் தேவனுக்கு எதிராகப் பாவம் செய்து, தன் நிலையிலிருந்து விழுந்து போனான்.
1. லூசிபரின் வீழ்ச்சி (சாத்தான்)
அழகிலும் ஞானத்திலும் சிறந்தவனாக இருந்த 'லூசிபர்' (அதிகாலை விடிவெள்ளி) என்ற தூதன், தனக்குள் ஏற்பட்ட பெருமையின் காரணமாக கடவுளுக்குச் சமமாக உயர விரும்பினான்.
ஆதாரம்
(ஏசாயா 14:12-14): "விடிவெள்ளியே, விடியற்காலத்து மகனே, நீ வானத்திலிருந்து விழுந்தாயே!... நான் வானத்துக்கு ஏறுவேன், தேவனுடைய நட்சத்திரங்களுக்கு மேலாக என் சிங்காசனத்தை உயர்த்துவேன்... உன்னதமானவருக்கு ஒப்பாவேன் என்று நீ உன் இருதயத்தில் சொன்னாயே."
ஆதாரம்
(எசேக் 28:15-17):
"நீ சிருஷ்டிக்கப்பட்ட நாள்முதல் உன்னில் அநியாயம் கண்டுபிடிக்கப்பட்டமட்டும் உன் வழிகளில் உத்தமனாயிருந்தாய்... உன் அழகினால் உன் இருதயம் மேட்டிமையாயிற்று."
2. மற்ற தூதர்களின் வீழ்ச்சி
சாத்தான் கடவுளுக்கு எதிராகக் கலகம் செய்தபோது, பரலோகத்தில் இருந்த தூதர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் அவனோடு சேர்ந்து விசுவாசதுரோகம் செய்தனர். அவர்கள் அனைவரும் பரலோகத்திலிருந்து கீழே தள்ளப்பட்டனர்.
ஆதாரம்
(வெளிப் 12:4,9): "அவனுடைய வால் வானத்தின் நட்சத்திரங்களில் (தூதர்களில்) மூன்றிலொருபங்கையிழுத்து, அவைகளைப் பூமியிலே விழத்தள்ளிற்று... பெரிய வலுசர்ப்பமாகிய பழைய பாம்பு தள்ளப்பட்டது; அதனோடேகூட அதைச் சேர்ந்த தூதர்களும் தள்ளப்பட்டார்கள்."
3. விழுந்து போன தூதர்களின் தற்போதைய நிலை
விழுந்து போன இந்தத் தூதர்களே இன்று பிசாசுகள் அல்லது அசுத்த ஆவிகள் என்று அழைக்கப்படுகிறார்கள். இவர்கள் இறுதித் தீர்ப்புநாளுக்காக அந்தகாரச் சங்கிலிகளினால் கட்டப்பட்டு வைக்கப்பட்டுள்ளனர்.
ஆதாரம்
(2 பேதுரு 2:4): "பாவஞ்செய்த தூதர்களைத் தேவன் தப்பவிடாமல், அந்தகாரச் சங்கிலிகளினாலே கட்டி, நரகத்திலே தள்ளி, நியாயத்தீர்ப்புக்கு வைக்கப்பட்டவர்களாக ஒப்புவித்தார்."
ஆதாரம்
(யூதா 1:6): "தங்களுடைய ஆதிமேன்மையைக் காத்துக்கொள்ளாமல், தங்களுக்குரிய வாசஸ்தலத்தை விட்டுவிட்ட தூதர்களை, மகாநாளின் நியாயத்தீர்ப்புக்கென்று நித்திய சங்கிலிகளினாலே கட்டி, அந்தகாரத்தில் அடைத்து வைத்திருக்கிறார்."
விவிலியத்தின்படி, தேவதூதர்கள் தேவனாகிய கர்த்தரை ஆராதிக்கவும் மனிதர்களுக்கு உதவவும் நியமிக்கப்பட்ட சேவகர்கள்
(எபிரெயர் 1:14). ஆனால், விழுந்து போன தூதர்களோ மனிதர்களை நல்வழியிலிருந்து திசைதிருப்ப முயல்கிறார்கள்.
என்பதை கவனத்தில் கொள்வோம்.
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக
கிறிஸ்துவின் பணியில் சகோதரன்
சிலுவை ராஜா
9841711591.
Comments