கிறிஸ்துவ சுதந்திரம்

கிறிஸ்தவ சுதந்திரம்:
ஓர் அறிமுகம்
உலகப் பிரகாரமான சுதந்திரம் என்பது மனிதன் தன் இஷ்டப்படி வாழ்வதைக் குறிக்கிறது. ஆனால், வேதாகமம் கூறும் கிறிஸ்தவ சுதந்திரம் என்பது முற்றிலும் மாறுபட்டது. அது சுயவிருப்பப்படி வாழ்வதற்குக் கொடுக்கப்பட்ட உரிமம் அல்ல; மாறாக, பாவத்தின் கொடிய அடிமைத்தனத்திலிருந்தும், நியாயப்பிரமாணத்தின் சாபத்திலிருந்தும் விடுபட்டு, தேவனுடைய கிருபைக்குள் தடையின்றி வாழ்வதாகும்.
ஆதியிலே மனிதன் பாவத்திற்கு அடிமையானபோது தன் உண்மையான சுதந்திரத்தை இழந்தான். அந்த அடிமைத்தன விலங்கை உடைத்து, மனிதனுக்கு மாபெரும் விடுதலையைத் தரவே இயேசு கிறிஸ்து இவ்வுலகிற்கு வந்தார். பரிசுத்த ஆவியானவரின் வழிநடத்துதல், கிறிஸ்து சிலுவையில் சம்பாதித்த மீட்பு மற்றும் தேவனுடைய சத்திய வார்த்தை ஆகியவற்றின் மூலமே இந்த சுதந்திரம் விசுவாசிகளுக்குக் கிடைக்கிறது. இந்த முன்னுரையின் தொடர்ச்சியாக, கிறிஸ்தவ சுதந்திரம் எங்கே உள்ளது என்பதை வேதாகமத்தின் முதன்மை மற்றும் இணை வசன ஆதாரங்களோடு விரிவாகக் காண்போம்.

1. கர்த்தருடைய ஆவி இருக்கும் இடத்தில் சுதந்திரம் உண்டு
கிறிஸ்தவ சுதந்திரத்தின் பிறப்பிடம் தேவனுடைய ஆவியானவரே ஆவார். பரிசுத்த ஆவியானவர் ஒருவருடைய இருதயத்தில் கிரியை செய்யும்போது அங்கே அடிமைத்தனம் நீங்கி உண்மையான விடுதலை உண்டாகிறது.
முதன்மை வசனம்: "கர்த்தரே ஆவியானவர்; கர்த்தருடைய ஆவி எங்கேயோ அங்கே விடுதலையுண்டு."
(2 கொரி 3:17)
இணை வசனம்: "ஆவியினாலே நடத்தப்படுவீர்களானால், நீங்கள் நியாயப்பிரமாணத்திற்குட்பட்டவர்களல்ல." (கலாத்தியர் 5:18)

2. இயேசு கிறிஸ்து அருளும் விடுதலை
மனிதன் தன் சொந்த பலத்தால் பாவத்திலிருந்து விடுதலை பெற முடியாது. இயேசு கிறிஸ்து சிலுவையில் சிந்திய இரத்தத்தினாலே மட்டுமே நமக்கு உண்மையான சுதந்திரம் கிடைக்கிறது.
முதன்மை வசனம்: "குமாரன் உங்களை விடுதலையாக்கினால் மெய்யாகவே விடுதலையாவீர்கள்." (யோவான் 8:36)
இணை வசனம்: "கிறிஸ்து நம்மை விடுதலையாக்கின சுயாதீன நிலைமையிலே நிலைத்திருங்கள்; மறுபடியும் அடிமைத்தன நுகத்திற்குட்படாதேயுங்கள்."
(கலாத்தியர் 5:1)

3. சத்தியத்தை அறிவதால் உண்டாகும் சுதந்திரம்
தேவனுடைய வார்த்தையாகிய சத்தியத்தை அறிந்து, அதன்படி வாழும்போது, அது நம்மை உலக மாயைகளிலிருந்தும் தவறான போதனைகளிலிருந்தும் விடுவிக்கிறது.
முதன்மை வசனம்: "சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும் என்றார்."
(யோவான் 8:32)
இணை வசனம்: "சுயாதீன பிரமாணமாகிய பூரண பிரமாணத்தை நோக்கிப்பார்த்து, அதிலே நிலைத்திருக்கிறவனே... தன் செய்கையில் பாக்கியவானாயிருப்பான்."
(யாக்கோபு 1:25)

4. பாவத்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுதலை
கிறிஸ்தவ சுதந்திரம் என்பது பாவங்களைச் செய்வதற்கான உரிமம் அல்ல; மாறாக, பாவத்திற்கு அடிமையாகாமல் நீதியின்படி வாழ்வதற்கான பலம் ஆகும்.
முதன்மை வசனம்: "பாவத்தினின்று நீங்கள் விடுதலையாக்கப்பட்டு, நீதிக்கு அடிமைகளானீர்கள்." (ரோமர் 6:18)
இணை வசனம்: "இப்பொழுது நீங்கள் பாவத்தினின்று விடுதலையாக்கப்பட்டு, தேவனுக்கு அடிமைகளானதினால், பரிசுத்தமாகுதல் உங்களுக்குக் கிடைக்கும் பலன்." (ரோமர் 6:22)

5. அன்பினால் ஒருவருக்குலொருவர் ஊழியம் செய்தல்
நமக்குக் கொடுக்கப்பட்ட சுதந்திரத்தை சுய இச்சைகளுக்காகப் பயன்படுத்தாமல், பிறருக்கு அன்போடு உதவி செய்யப் பயன்படுத்த வேண்டும்.
முதன்மை வசனம்: "சகோதரரே, நீங்கள் சுயாதீனத்திற்கு அழைக்கப்பட்டீர்கள்; இந்தச் சுயாதீனத்தை நீங்கள் மாம்சத்திற்கு ஏதுவாகப் பயன்படுத்தாமல், அன்பினால் ஒருவருக்கொருவர் ஊழியம் செய்யுங்கள்." (கலாத்தியர் 5:13)
இணை வசனம்: "சுயாதீனமுள்ளவர்களாயிருந்தும் உங்கள் சுயாதீனத்தைத் துர்க்குணத்திற்கு மூடலாகக் கொள்ளாமல், தேவனுக்கு அடிமைகளாயிருங்கள்."
(1 பேதுரு 2:16)
இயேசு கிறிஸ்து மூலமாய் வரும் சுதந்திரத்தை அனுபவிப்போம் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமென்
கிறிஸ்துவின் பணியில் சகோதரன்
சிலுவை ராஜா
9841711591.

Comments

Popular posts from this blog

மற்றவர்களை பார்க்க வேண்டாம்.

ஈரான் (ஏலாம்) இஸ்ரேல் யுத்தம்.

பிரபல ஊழியர்களை தேடி....