பழைய ஏற்பாட்டு ஆசாரியத்துவம்.


பழைய ஏற்பாட்டுக் காலத்தில், பரிசுத்தமான தேவனோடும் பாவிகளாகிய மனுஷர்களோடும் ஒரு உறவை ஏற்படுத்துவதற்கு தேவனாலேயே ஏற்படுத்தப்பட்ட ஒரு புனிதமான ஏற்பாடு ஆசாரியத்துவம் ஆகும். "பரிசுத்தராகிய கர்த்தருக்கு முன்பாக நிற்பது யார்?" என்ற கேள்விக்கு விடையாக, தேவன் ஆரோனையும் அவனுடைய சந்ததியினரையும் தமக்கென்று பிரித்தெடுத்தார்.
பழைய ஏற்பாட்டு ஆசாரியர்களின் பணிகள் வெறும் சடங்குகள் மட்டுமல்ல, அவை ஒவ்வொன்றும் தேவனுக்கும் மனிதனுக்கும் இடையிலான பிணைப்பை உறுதிப்படுத்தும் அடையாளங்களாக இருந்தன. அவர்கள் தேவனுடைய பிரசன்னம் தங்கியிருந்த கூடாரத்தையும் (Tabernacle), பின்னர் தேவாலயத்தையும் பராமரிக்கும் பொறுப்பைப் பெற்றிருந்தனர். மக்களின் பாவங்களை அறிக்கையிடும் பலிபீடமாகவும், தேவனுடைய கட்டளைகளைக் கற்றுக்கொடுக்கும் கல்விக்கூடமாகவும் ஆசாரியத்துவம் விளங்கியது.
சுருக்கமாகச் சொன்னால், ஆசாரியர்கள் மக்களுக்காகத் தேவனிடத்திலும் (பலி மற்றும் விண்ணப்பம் மூலம்), தேவனுக்காக மக்களிடத்திலும் (போதனை மற்றும் ஆசீர்வாதம் மூலம்) நின்ற ஒரு பாலமாகச் செயல்பட்டனர். இவர்களுடைய ஒவ்வொரு பணியும், பின்னாட்களில் வரவிருந்த 'மகா பிரதான ஆசாரியராகிய' இயேசு கிறிஸ்துவின் சிலுவைப் பலிக்கும், அவருடைய மத்தியஸ்த ஊழியத்திற்கும் ஒரு நிழலாட்டமாக அமைந்திருந்தது.
இந்த ஆய்வில், ஆசாரியர்களின் பிரதான வேலைகளான பலி செலுத்துதல், நியாயப்பிரமாணத்தைப் போதித்தல், தேவாலயப் பணிவிடைகள் மற்றும் மக்களை ஆசீர்வதித்தல் போன்றவற்றை வேத ஆதாரங்களுடன் விரிவாகக் காணலாம்.

1).பாவங்களுக்காக பலி செலுத்துதல்: மக்களின் பாவங்களுக்காக மிருகங்களைப் பலியிட்டு, அவற்றின் இரத்தத்தை பலிபீடத்தின் மேல் தெளிப்பதே இவர்களின் மிக முக்கியமான பணி.
வசன ஆதாரம்: "ஆசாரியன் கர்த்தருடைய சந்நிதியில் அவனுக்காகப் பாவநிவிர்த்தி செய்வான்; அப்பொழுது அவன் செய்த குற்றங்களினால் உண்டான அவனுடைய பாவம் மன்னிக்கப்படும்" (லேவிய 6:7).

1. பாவநிவாரண பலியின் கட்டளை (லேவிய 4:2-3)
"யாராவது ஒருவன் கர்த்தர் செய்யவேண்டாம் என்று விலக்கிய கட்டளைகளில் ஒன்றையாவது மீறி, அறியாமையினால் பாவஞ்செய்தால்... அவன் செய்த பாவத்தினிமித்தம் பழுதற்ற ஒரு இளங்காளையைப் பாவநிவாரணபலியாகக் கர்த்தருக்குக் கொண்டுவரக்கடவன்". 

2. பாவநிவாரண நாள் 
(லேவிய 16:15-16) 
"பின்பு அவன் ஜனங்களின் பாவநிவாரணபலியாகிய வெள்ளாட்டுக்கடாவைக் கொன்று, அதின் இரத்தத்தைத் திரைக்கு உட்புறமாகக் கொண்டுவந்து... அதினால் பாவநிவிர்த்தி செய்யக்கடவன்". 

3. இரத்தம் சிந்தப்படுதல் (லேவிய 17:11)
"மாம்சத்தின் உயிர் இரத்தத்தில் இருக்கிறது; பலிபீடத்தின்மேல் உங்கள் ஆத்துமாக்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்யும்படிக்கு அதை உங்களுக்குக் கொடுத்தேன்; இரத்தமே ஆத்துமாவுக்காகப் பாவநிவிர்த்தி செய்யும்". 

4. குற்றநிவாரண பலி 
(லேவிய 5:5-6) 
"அவன் தான் செய்த பாவத்தை அறிக்கையிடவேண்டும். அவன் செய்த பாவத்தினிமித்தம் ஒரு பெண் ஆட்டுக்குட்டியையாவது, ஒரு பெண் வெள்ளாட்டுக்குட்டியையாவது பாவநிவாரணபலியாகக் கர்த்தருக்குக் கொண்டுவரக்கடவன்; ஆசாரியன் அவனுடைய பாவத்தினிமித்தம் அவனுக்காகப் பாவநிவிர்த்தி செய்யக்கடவன்". 

5. புதிய ஏற்பாட்டு விளக்கம்
 (எபிரெயர் 9:22) 
"நியாயப்பிரமாணத்தின்படி ஏறக்குறைய எல்லாம் இரத்தத்தினாலே சுத்திகரிக்கப்படும்; இரத்தஞ்சிந்துதலில்லாமல் மன்னிப்பு உண்டாகாது". 

6. இயேசுவின் பலிக்கு நிழலாட்டம் (யோவான் 1:29)
"இதோ, உலகத்தின் பாவத்தைச் சுமந்துதீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி". பழைய ஏற்பாட்டுப் பலிகள் அனைத்தும் வரவிருந்த இயேசு கிறிஸ்துவின் பலிக்கு ஒரு அடையாளமாகவே இருந்தன. 

இந்த வசனங்கள் அனைத்தும் பாவம் மரணத்தைக் கொண்டுவருகிறது என்பதையும், ஒரு உயிர் மாற்றாகக் கொடுக்கப்படுவதன் மூலமே மன்னிப்பு வழங்கப்பட்டது என்பதையும் உறுதிப்படுத்துகின்றன. 

2).மக்களுக்கு நியாயப்பிரமாணத்தைப் போதித்தல்: தேவனுடைய கட்டளைகளையும், எது பரிசுத்தம் எது தீட்டு என்பதையும் மக்களுக்குப் போதிப்பது இவர்களின் கடமையாகும்.
வசன ஆதாரம்: "பரிசுத்தமுள்ளதற்கும் பரிசுத்தமில்லாததற்கும், தீட்டுள்ளதற்கும் தீட்டில்லாததற்கும் வித்தியாசம் பண்ணும்படிக்கும்... கர்த்தர் கட்டளையிட்ட சகல பிரமாணங்களையும் இஸ்ரவேல் புத்திரருக்குப் போதிக்கும்படிக்கும் இது உங்களுக்கு நித்திய கட்டளையாயிருக்கும்" (லேவிய 10:10-11).

1. மோசேயின் கட்டளை 
(உபாகமம் 31:10-11)
"மோசே அவர்களை நோக்கி: ... இஸ்ரவேலர் எல்லாரும் கர்த்தருடைய சந்நிதியில் கூடிவரும்போது, நீ இந்த நியாயப்பிரமாணத்தை இஸ்ரவேலர் எல்லாரும் கேட்க அவர்களுக்கு முன்பாக வாசிக்கக்கடவாய்."

2. ஆசாரியர்களின் கடமை (மல்கியா 2:7)
"ஆசாரியன் உதடுகள் அறிவைக் காக்கவேண்டும்; அவன் வாயிலே வேதத்தைத்தேடுவார்களே; அவன் சேனைகளுடைய கர்த்தரின் தூதன்."

3. போதிப்பதன் முக்கியத்துவம் (லேவிய 10:11)
"கர்த்தர் மோசேயைக் கொண்டு இஸ்ரவேல் புத்திரருக்குச் சொன்ன சகல பிரமாணங்களையும் அவர்களுக்குப் போதிக்கவும் வேண்டும் என்று கட்டளையிட்டார்."

4. எஸ்றாவின் முன்மாதிரி 
(எஸ்றா 7:10)
"கர்த்தருடைய வேதத்தை ஆராயவும், அதின்படி செய்யவும், இஸ்ரவேலிலே கட்டளைகளையும் நீதிகளையும் உபதேசிக்கவும், எஸ்றா தன் இருதயத்தைப் பண்ணியிருந்தான்."

5. தேசமெங்கும் போதித்தல் 
(2 நாளாகமம் 17:9)
யோசபாத் ராஜாவின் காலத்தில் ஆசாரியர்களும் லேவியர்களும் செய்த பணி: "அவர்கள் கர்த்தருடைய வேதபுஸ்தகத்தை வைத்துக்கொண்டு, யூதாவிலே உபதேசித்து, யூதாவின் பட்டணங்களிலெல்லாம் சுற்றித்திரிந்து, ஜனங்களுக்குப் போதித்தார்கள்."

6.புரிந்துகொள்ளும் படி விளக்குதல் (நெகேமியா 8:8)
"அவர்கள் தேவனுடைய நியாயப்பிரமாண புஸ்தகத்தைத் தெளிவாய்ப் வாசித்து, அர்த்தஞ்சொல்லி, வாசித்ததை அவர்கள் விளங்கிக்கொள்ளும்படி செய்தார்கள்."
ஆசாரியர்கள் வெறும் பலி செலுத்துபவர்களாக மட்டுமல்லாமல், தேவனுக்கும் மக்களுக்கும் இடையே தெய்வீக ஆசிரியர்களாகவும் செயல்பட்டனர் என்பதை இந்த வசனங்கள் உறுதிப்படுத்துகின்றன.

3).ஆலயத்தில் பணிவிடை செய்தல்:     ஆசரிப்புக் கூடாரத்தில் குத்துவிளக்கை ஏற்றி வைப்பதும், சமூக அப்பங்களை அடுக்குவதும் இவர்களின் வேலை.
வசன ஆதாரம்: "ஆரோனும் அவன் குமாரரும் அதை ஆசரிப்புக் கூடாரத்திலே சாட்சிச் சந்நிதிக்கு முன்னிருக்கிற திரைக்குப் புறம்பே, சாயங்காலந் தொடங்கி விடியற்காலமட்டும் கர்த்தருடைய சந்நிதியில் எரிய வைக்கக்கடவர்கள்" (யாத்திர 27:21).

1. குத்துவிளக்கை ஏற்றிப் பராமரித்தல் (யாத்திரா 27:21)
"ஆரோனும் அவன் குமாரரும் ஆசரிப்புக் கூடாரத்திலே சாட்சிச் சந்நிதிக்கு முன்னிருக்கிற திரைக்குப் புறம்பே, கர்த்தருடைய சந்நிதியில் மால்தொடங்கி விடியற்காலமட்டும் அதை எரிய வைக்கக்கடவர்கள்."

2. தூபங்காட்டுதல் (யாத்திரா 30:7-8)
"ஆரோன் அதின்மேல் (தூபபீடத்தில்) காலைதோறும் சுகந்த தூபங்காட்டக்கடவன்; அவன் விளக்குகளைப் பராமரிக்கும்போது அதைச் செய்யக்கடவன். மாலையிலும் ஆரோன் விளக்குகளை ஏற்றியிருக்கும்போது, உங்கள் தலைமுறைதோறும் கர்த்தருடைய சந்நிதியில் இடைவிடாமல் தூபங்காட்டக்கடவன்."

3. சமூக அப்பங்களை அடுக்கி வைத்தல் (லேவியரா 24:8-9)
"ஓய்வுநாடோறும் அவன் (ஆசாரியன்) அவைகளைக் கர்த்தருடைய சந்நிதியில் வரிசையாக அடுக்கி வைக்கக்கடவன்; இது இஸ்ரவேல் புத்திரர் செய்த நித்திய உடன்படிக்கை."

4. மகா பரிசுத்த ஸ்தலத்திற்குள் செல்லுதல் (எபிரெயர் 9:7)
"இரண்டாம் அறையிலோ (மகா பரிசுத்த ஸ்தலம்) பிரதான ஆசாரியன் மாத்திரம் வருஷத்திற்கு ஒருதரம் பிரவேசிப்பான்; அவன் தனக்காகவும் ஜனங்களுடைய அறியாமையினால் செய்த பாவங்களுக்காகவும் செலுத்தவேண்டிய இரத்தத்தை எடுத்துக்கொண்டு போவான்."

5. ஆலயக் காவல் மற்றும் பணிவிடை (எண்ணாகமம் 18:5)
"பரிசுத்த ஸ்தலத்தின் காவலும் பலிபீடத்தின் காவலும் உங்கள் பொறுப்பிலிருக்க வேண்டும்; அப்பொழுது இஸ்ரவேல் புத்திரர்மேல் இனிக் கோபம் வராது."

6. எக்காளம் ஊதுதல் 
(எண்ணாக 10:8)
"ஆரோனின் குமாரராகிய ஆசாரியர்கள் அந்த எக்காளங்களை ஊதக்கடவர்கள்; உங்கள் தலைமுறைதோறும் இது உங்களுக்கு நித்திய கட்டளையாயிருக்கும்."
இந்த வசனங்கள் ஆசாரியர்கள் தேவாலயத்தின் பரிசுத்தத்தைப் பாதுகாப்பதிலும், தேவன் கட்டளையிட்ட சடங்குகளைத் தவறாமல் நிறைவேற்றுவதிலும் எவ்வளவு கவனமாக இருக்க வேண்டும் என்பதைக் காட்டுகின்றன.

4).ஜனங்களை ஆசீர்வதித்தல்: தேவனுடைய நாமத்தைச் சொல்லி இஸ்ரவேல் ஜனங்களை ஆசீர்வதிக்கும் அதிகாரமும் பொறுப்பும் ஆசாரியர்களுக்கு வழங்கப்பட்டது.
வசன ஆதாரம்: 
"நீ ஆரோனோடும் அவன் குமாரரோடும் சொல்ல வேண்டியது என்னவென்றால்: நீங்கள் இஸ்ரவேல் புத்திரரை ஆசீர்வதிக்கும்போது அவர்களை நோக்கி: கர்த்தர் உன்னை ஆசீர்வதித்து உன்னைக் காக்கக்கடவர்..." (எண்ணா 6:23-24).

1. ஆரோனின் ஆசீர்வாதம் (எண்ணா 6:22-27)
இது ஆசாரியர்களுக்குக் கொடுக்கப்பட்ட மிக உன்னதமான ஆசீர்வாதக் கட்டளையாகும்:
"கர்த்தர் மோசேயை நோக்கி: நீ ஆரோனோடும் அவன் குமாரரோடும் சொல்ல வேண்டியது என்னவென்றால், நீங்கள் இஸ்ரவேல் புத்திரரை ஆசீர்வதிக்கும்போது அவர்களை நோக்கி: கர்த்தர் உன்னை ஆசீர்வதித்து, உன்னைக் காக்கக்கடவர்; கர்த்தர் தம்முடைய முகத்தை உன்மேல் பிரகாசிக்கப்பண்ணி, உன்மேல் கிருபையாயிருக்கக்கடவர்; கர்த்தர் தம்முடைய முகத்தை உன்மேல் பிரசன்னமாக்கி, உனக்குச் சமாதானம் கட்டளையிடக்கடவர் என்று சொல்லக்கடவீர்கள். இவ்விதமாய் அவர்கள் என் நாமத்தை இஸ்ரவேல் புத்திரர்மேல் தரிப்பிக்கக்கடவர்கள்; அப்பொழுது நான் அவர்களை ஆசீர்வதிப்பேன்."

2.லேவியர்களுக்குக் கொடுக்கப்பட்ட பணி 
(உபாகமம் 10:8)
"அக்காலத்திலே கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியைச் சுமக்கவும், இந்நாள்வரைக்கும் நடக்கிறதுபோலக் கர்த்தருடைய சந்நிதியில் நின்று அவருக்குப் பணிவிடை செய்யவும், அவர் நாமத்தைக்கொண்டு ஆசீர்வதிக்கவும், கர்த்தர் லேவி கோத்திரத்தைப் பிரித்தெடுத்தார்."

3. பலி செலுத்திய பின் ஆசீர்வதித்தல் (லேவிய 9:22)
"பின்பு ஆரோன் ஜனங்களுக்கு நேராகத் தன் கைகளை உயர்த்தி, அவர்களை ஆசீர்வதித்தான்; அவன் பாவநிவாரணபலியையும் சர்வாங்கதகனபலியையும் சமாதானபலியையும் செலுத்தி முடித்து இறங்கினான்."

4. தாவீது மற்றும் சாலொமோன் காலத்தில் 
(1 நாளாகமம் 23:13)
"ஆரோன் மிகவும் பரிசுத்தமானவைகளைப் பரிசுத்தப்படுத்தவும், என்றென்றைக்கும் கர்த்தருடைய சந்நிதியில் தூபங்காட்டவும், அவருக்குப் பணிவிடை செய்யவும், அவர் நாமத்தைக்கொண்டு என்றென்றைக்கும் ஆசீர்வதிக்கவும் பிரத்தியேகமாக்கப்பட்டான்."

5. பிரதான ஆசாரியராகிய இயேசுவின் ஆசீர்வாதம் 
(லூக்கா 24:50)
பழைய ஏற்பாட்டு ஆசாரியத்துவத்தின் நிறைவாக வந்த இயேசு கிறிஸ்து பரலோகத்திற்கு ஏறிச் செல்லும் முன் செய்த கடைசி செயல்:
"பின்பு அவர் பெத்தானியா வரைக்கும் அவர்களை அழைத்துக்கொண்டுபோய், தம்முடைய கைகளை உயர்த்தி, அவர்களை ஆசீர்வதித்தார்."
இந்த ஆசீர்வாதங்கள் மூலம் ஆசாரியர்கள் தேவனுடைய பாதுகாப்பையும், கிருபையையும், சமாதானத்தையும் ஜனங்கள் மேல் பிரகடனம் செய்தனர்.

5).மக்களின் பெயர்களைத் தேவ சந்நிதியில் சுமத்தல்: 
பிரதான ஆசாரியன் தன் மார்ப்பதக்கத்தில் இஸ்ரவேல் கோத்திரங்களின் பெயர்களைத் தரித்து, அவர்களைத் தேவனுடைய நினைவிலே வைப்பார்.
வசன ஆதாரம்: "ஆரோன் பரிசுத்த ஸ்தலத்திற்குள் பிரவேசிக்கும்போது, இஸ்ரவேல் புத்திரரின் நாமங்களை... கர்த்தருடைய சந்நிதியில் எப்போதும் நினைப்பூட்டும் அடையாளமாகத் தன் இருதயத்தின்மேல் தரித்துக்கொள்ளக்கடவன்" 
(யாத்திர 28:29).
 
1. தோள்களில் பெயர்களைச் சுமத்தல் 
(யாத்திரா 28:9-12)
பிரதான ஆசாரியன் அணியும் ஏபோத்தின் தோள் பட்டைகளில் இரண்டு கோமேதகக் கற்கள் இருந்தன.
"அந்த இரண்டு கற்களிலும் இஸ்ரவேல் புத்திரருடைய நாமங்களை... வெட்டப்பண்ணுவாயாக. இஸ்ரவேல் புத்திரரை நினைப்பூட்டும் கற்களாக அவைகளை ஏபோத்தின் தோள் பட்டைகளில் வைக்கக்கடவாய்; ஆரோன் கர்த்தருடைய சந்நிதியில் அவர்கள் நாமங்களைத் தன் இரண்டு தோள்களின்மேல் நினைப்பூட்டுவதற்காகச் சுமக்கக்கடவன்."

2. இருதயத்தில் பெயர்களைச் சுமத்தல் 
(யாத்திரா 28:29)
மார்பதக்கத்தின் (Breastplate) மேல் 12 கோத்திரங்களைக் குறிக்கும் 12 விலையேறப்பெற்ற கற்கள் இருந்தன.
"ஆரோன் பரிசுத்த ஸ்தலத்திற்குள் பிரவேசிக்கும்போது, இஸ்ரவேல் புத்திரரின் நாமங்களை நினைப்பூட்டுவதற்காக, தன் இருதயத்தின்மேல் இருக்கும் நியாயத்தீர்ப்பின் மார்பதக்கத்திலே தரித்துக்கொள்ளக்கடவன்; இது கர்த்தருடைய சந்நிதியில் எப்பொழுதும் ஞாபகக்குறியாய் இருக்கும்."

3. மகா பரிசுத்த ஸ்தலத்தில் சமர்ப்பித்தல் (லேவியர 16:17)
பிரதான ஆசாரியன் வருடத்தில் ஒருமுறை இரத்தத்தோடு உள்ளே செல்லும்போது, அவர் தனிப்பட்ட நபராக அல்ல, ஒட்டுமொத்த தேசத்தின் பிரதிநிதியாகவே சென்றார்.
"அவன் பரிசுத்த ஸ்தலத்தில் பாவநிவிர்த்தி செய்யும்படி உள்ளே பிரவேசித்ததுமுதல், அவன் தனக்காகவும் தன் குடும்பத்திற்காகவும் இஸ்ரவேல் சபையார் அனைவருக்காகவும் பாவநிவிர்த்தி செய்து வெளியே வரும்வரைக்கும்..."

4. புதிய ஏற்பாட்டு விளக்கம்: 
கிறிஸ்து நமக்காகச் சுமக்கிறார் 
(எபிரெயர் 7:25)
பழைய ஏற்பாட்டு ஆசாரியன் பெயர்களைச் சுமந்தது நிழலாட்டம் என்றால், இயேசு கிறிஸ்து நிஜமாகவே நம்மைச் சுமக்கிறார்.
"மேலும், அவர் வழியாகத் தேவனிடத்தில் சேருகிறவர்களுக்காக வேண்டுதல் செய்யும்படிக்கு அவர் எப்பொழுதும் உயிரோடிருக்கிறவராகையால், அவர்களை முற்றுமுடிவாக இரட்சிக்க வல்லவராயிருக்கிறார்."
இந்தக் கட்டளைகள் மூலம், தேவன் தம் பிள்ளைகள் ஒவ்வொருவரையும் தனித்தனியாகப் பெயர் சொல்லித் தெரிந்து வைத்திருக்கிறார் என்பதும், அவர்கள் எப்போதும் அவர் சமூகத்தில் நினைக்கப்படுகிறார்கள் என்பதும் உறுதியாகிறது.

சுருக்கமாகச் சொன்னால், ஆசாரியர்கள் மக்களுக்காக பலி செலுத்துபவர்களாகவும் (Hebrews 5:1), தேவனுடைய வழிகளைக் கற்பிப்பவர்களாகவும் (Deuteronomy 33:10) நியமிக்கப்பட்டிருந்தனர்.
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமென் கிறிஸ்துவின் பணியில் சகோதரன் சிலுவை ராஜா 
9841711591.

Comments

Popular posts from this blog

மற்றவர்களை பார்க்க வேண்டாம்.

உணர்ச்சியுள்ள கிறிஸ்தவனே கிறிஸ்தவத்துக்கு விரோதமாக நடப்பதை நீ அறியாயோ ! ?

திருச்சபை