கிறிஸ்மஸ்

417) உயர்ந்த முத்துக்கள்.

கிறிஸ்துமஸ்  என்றாலே, நம்முடைய நினைவுக்கு வருவது, இவைகள் தான். அதாவது,

நட்சத்திரம்.

மாட்டு குடில்  பிறந்த குழந்தையின் உருவம்.

வீட்டின் அலங்காரம். சபை அலங்காரம்.

கிறிஸ்துமஸ் மரம் .

கிறிஸ்மஸ் தாத்தா.

இனிப்பு வழங்குதல்.

மதுபானம் அருந்துதல்.

     1.)'நட்சத்திரம்', இயேசு கிறிஸ்து பிறந்திருக்கிற ஸ்தலத்திற்கு வழிகாட்டியாக இருந்தது .
இதோ, அவர்கள் கிழக்கிலே கண்ட நட்சத்திரம் பிள்ளை இருந்த ஸ்தலத்திற்குமேல் வந்து நிற்கும்வரைக்கும் அவர்களுக்குமுன் சென்றது.

(மத்தேயு 2:9) அதுபோலவே, இன்றைக்கு இயேசு கிறிஸ்துவை, சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டு, அவருடைய பிள்ளைகளாக வாழ்கின்ற அத்தனைப் பேர்களும், இயேசு கிறிஸ்துவிடும் வழி காட்டுகின்ற நட்சத்திரங்களே. (உபா 1:10;தானி 10:3). ஆனால் நாம் யாருக்குமே வழி காட்டாத உபயோகம் இல்லாத ஒரு நட்சத்திரத்தை விக்கிரகமாக நம் வீடுகளில் மேல் வைத்திருக்கிறோம்.(அப் 7:43)ஐ வாசிக்கவும். ​
நாம்தான் நட்சத்திரம். நாமே இருளில் வாழும் ஜனங்களுக்கு வழிகாட்டியான நட்சத்திரம். என்பதை சபை புரிந்து கொள்ள வேண்டும். மேய்ப்பர்கள் நட்சத்திரத்தைக் கண்டு சந்தோஷப்பட்டது போல கிறிஸ்தவர்களாகிய நட்சத்திரங்களை கண்டு இந்த உலகம் சந்தோஷப்பட வேண்டும்.(மத்தேயு 2:10)

         2.) மாட்டு குடிலில் பிறந்த குழந்தையின் உருவம்.

[6]அவ்விடத்திலே அவர்கள் இருக்கையில், அவளுக்குப் பிரசவகாலம் நேரிட்டது.
[7]அவள் தன் முதற்பேறான குமாரனைப் பெற்று, சத்திரத்திலே அவர்களுக்கு இடமில்லாதிருந்தபடியினால், பிள்ளையைத் துணிகளில் சுற்றி, முன்னணையிலே கிடத்தினாள்.

[12]பிள்ளையைத் துணிகளில் சுற்றி, முன்னணையிலே கிடத்தியிருக்கக் காண்பீர்கள்; இதுவே உங்களுக்கு அடையாளம் என்றான்.​​
[16]தீவிரமாய் வந்து, மரியாளையும் யோசேப்பையும், முன்னணையிலே கிடத்தியிருக்கிற பிள்ளையையும் கண்டார்கள்.(லூக்கா 2:1,-6-7,12,-16)

*சத்திரத்திலே இடமில்லாதிருந்தபடியினால்..*

*பிள்ளையைத் துணிகளில் சுற்றி, முன்னணியிலே கிடத்தினாள்.*

மாட்டுத் தொழுவத்தில் இயேசு பிறந்தாரா இல்லையா என்பதை வேதம் முக்கிய படுத்தவில்லை, பாவிகளுக்காக இயேசு கிறிஸ்து இந்த உலகத்தில் பிறந்தார் என்பதை தான் முக்கிய படுத்துகிறது.

இயேசு கிறிஸ்து இன்றைக்கு ஒவ்வொருவருடைய உள்ளத்திலும் பிறக்க விரும்புகிறார். இதற்காகத்தான் உண்மை ஊழியர்கள், விசுவாசிகள், பவுல் அப்போஸ்தலனைப் போல பிரயாசப்பட வேண்டும்.
என் சிறுப்பிள்ளைகளே,
*கிறிஸ்து உங்ளிடத்தில் உருவாகுமளவும் உங்களுக்காக மறுபடியும் கர்ப்பவேதனைப்படுகிறேன்.*  (கலா 4:19)
வார்த்தையான இயேசு கிறிஸ்து என் உள்ளத்தில் பிறந்தார் என்பதே கிறிஸ்துமஸ்.(யோவா 1:14)
கேரல் ரவுண்ட் போகும் நோக்கம் என்ன ?
கேரல் ரவுண்ட் கிறிஸ்தவர்களுக்கா அல்லது தேவனை அறியாத இருளில் உள்ளவர்களுக்கா ?
இந்த கேரல் ரவுண்ட் தேவ சித்தத்தின்படி கிறிஸ்து ஒவ்வொருவருடைய உள்ளத்திலும் பிறக்க (மத் 28:19,20)ஐ கட்டளையை நிறைவேற்ற பிரயாசப்படுங்கள்.

          3.) அலங்காரம், சபை அல்லது வீடு.
வீடுகளையும் சபை கட்டடங்களையும் புதுப்பிக்கிற அல்லது அலங்கரிக்கிற ஆர்வத்தை விட தேவனுடைய சபை தேவனுக்கேற்ற பரிசுத்தத்தில், ஆவிக்குரிய கனிகள், ஆவிக்குரிய கிருபைகள், தாலந்துகளால், மற்றும் நற்குணங்களால் அலங்கரிக்கப்பட்ட ஒவ்வொரு ஊழியர்களும், விசுவாசிகளும் பிரயாசப்பட வேண்டும். ஏனென்றால் தேவனுடைய ஆலயம் முதலாவது நாமே என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இரண்டாவது தான் நாம் கூடி வருகிற கட்டிடம் அல்லது திருச்சபை.
(சங்க 29:2; 1கொரி 3:16; நிதி 1:10;கொலெ 1:10; 1 பேதுரு 3:4;)

           4.) கிறிஸ்துமஸ் மரம்.
கனி இல்லாத மரத்துக்கு அடையாளமாக இருக்கிறது.
திருச்சபையிலுள்ள ஒவ்வொரு மரமும் தேவனுக்கென்று கனி கொடுக்கக் கூடியதாக இருக்க வேண்டும். கனி கொடுக்காத மரத்தின் உவமையை குறித்து இயேசு கிறிஸ்து அழகாக சொல்லி இருக்கிறார்.
ஒவ்வொரு விசுவாசியும்
மனந்திரும்புதலுக்கு ஏற்ற கனிகளைக் கொடுங்கள்.(மத்தேயு 3:8)
நல்ல கனிகளை கொடாவிடில் ....
இப்பொழுதே கோடரியானது மரங்களின் வேர் அருகே வைத்திருக்கிறது; ஆகையால், நல்ல கனிகொடாத மரமெல்லாம் வெட்டுண்டு அக்கினியிலே போடப்படும்.(மத்தேயு 3:10;7:19;யோவா 15:2)
இந்த கிறிஸ்துமஸ் காலங்களில் மாத்திரம் அல்ல, எப்பொழுதும் ,ஏழை எளிய மக்களுக்கு உங்கள் கனிகளை கொடுங்கள்.

           5.) கிறிஸ்மஸ் தாத்தா.

ஆவிக்குரிய முதிர்ச்சி இல்லாத நிலையை குறிக்கிறது.
வேதத்தில் இல்லாத ஒரு நபர்.
சத்தியத்துக்குச் செவியை விலக்கி,
   *"கட்டுக்கதைகளுக்குச் சாய்ந்துபோகுங்காலம் வரும்."*
*"நீயோ எல்லாவற்றிலும் மனத்தெளிவுள்ளவனாயிரு,"*
தீங்கனுபவி, சுவிசேஷகனுடைய வேலையைச் செய், உன் ஊழியத்தை நிறைவேற்று.
(2 தீமோத்தேயு 4:4-5)
மக்களை திருப்திபடுத்துவதற்கான ஊழியம் அல்ல,
இரட்சிப்பு கர்த்தருடையது என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

          6.) இனிப்பு கொடுப்பது அல்லது கேக் வெட்டுவது.
இது ஒரு விதமான சந்தோசமாக இருந்தாலும் இதைவிட மேலான சந்தோஷம் பரலோகத்தை சந்தோஷப்படுத்துவது.
அதுபோல, மனந்திரும்ப அவசியமில்லாத தொண்ணூற்றொன்பது நீதிமான்களைக்குறித்துச் சந்தோஷம் உண்டாகிறதைப்பார்க்கிலும் *"மனந்திரும்புகிற ஒரே பாவியினிமித்தம் பரலோகத்தில் மிகுந்த சந்தோஷம் உண்டாயிருக்கும்"*  என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
(லூக்கா 15:7) இயேசு கிறிஸ்துவே தன்னுடைய சந்தோஷத்தை தெளிவாக இந்த வசனத்தில் சொல்லி உள்ளார். இயேசு கிறிஸ்துவை சந்தோஷப்படுத்தாமல் நாம் மட்டும் சந்தோஷப்படுவது சரிதானா ?

             7.) மதுபானம்.
சில திருச்சபை மக்கள் கிறிஸ்மஸ் என்றாலே மதுபானம் பண்ணுவதும், பிரியாணி மற்றும் மட்டன் கறி சமைப்பதுமே என்று நினைக்கிறார்கள்.
மதுபானம் பண்ணுவது, சினிமாவுக்கு செல்வது என சில கிறிஸ்தவர்கள் நினைக்கிறார்கள். லிபரல் தியாலஜி படித்தவர்கள், மதுபானம் பண்ணுவது தவறல்ல என்கிறார்கள். அதற்கும் ரோமர் புத்தகத்தில் ஒரு வசனத்தை மேற்கோள் காட்டுகிறார்கள். (ரோமர் 14:21)ஆனால், வேதம் மதுபானம் பண்ணுகிறவன் ஞானவான் அல்ல என்கிறது.
(நீதி 20:1;23:20;எசா 5:11ஐ வாசித்து பாருங்கள்) அதே நேரத்தில் பரிசுத்த ஆவியானவர் திருச்சபைகளுக்கு பவுல் அப்போஸ்தலன் மூலமாக சொல்லுகிற ஒரு காரியம்.
[17]ஆகையால், நீங்கள் மதியற்றவர்களாயிராமல், கர்த்தருடைய சித்தம் இன்னதென்று உணர்ந்துகொள்ளுங்கள்.
[18]துன்மார்க்கத்திற்கு ஏதுவான மதுபான வெறிகொள்ளாமல், ஆவியினால் நிறைந்து;(எபேசியர் 5:17-18) பரிசுத்த ஆவியினால் உண்டாகிற சந்தோஷத்தை அனுபவிக்க வேண்டும் என்று சொல்லுகிறார்.
(ரோம 14:17)
உண்மையான கிறிஸ்மஸ்,
இதோ, வாசற்படியிலே நின்று தட்டுகிறேன்; ஒருவன் என் சத்தத்தைக்கேட்டு, கதவைத் திறந்தால், அவனிடத்தில் நான் பிரவேசித்து, அவனோடே போஜனம்பண்ணுவேன், அவனும் என்னோடே போஜனம்பண்ணுவான்.(வெளிப் 3:20)
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமென்
கிறிஸ்துவின் பணியில்
சகோதரன்
சிலுவை ராஜா.

Comments

Popular posts from this blog

பிரபல ஊழியர்களை தேடி....

மற்றவர்களை பார்க்க வேண்டாம்.

திருச்சபை