கடைசி காலத்தில் எழுப்புதல் வருமா?
*(404) உயர்ந்த முத்துக்கள்.)
கடைசி கால எழுப்புதல் வருமா ?
எழுப்புதல் பற்றி நாம் பேசுகிறோம் ஆனால் எழுப்புதல் வர நாம் என்ன செய்து கொண்டு இருக்கிறோமென திருச்சபைகள் அறிந்தும், அறியாமலும் உள்ளன.
சில திருச்சபைகள் எழுப்புதலுக்காக பிரபல ஊழியர்களை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், அவர்கள் மூலமாக எழுப்புதல் வராது.
எழுப்புதலை விரும்புகிறவர்கள் இயேசு கிறிஸ்துவை கவனித்து (எபி 3:1) அவர் என்ன செய்தாரோ அதை செய்ய வேண்டும்.
1) தேவனுடைய ஊழியத்தை செய்கிற ஒருவர் இயேசு கிறிஸ்துவை விசுவாசித்து பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் பெயரால் (மத் 28:19,20;)திருமுழுக்குப் பெறுகிறார் வேண்டும். இயேசுவைப் போல...(மத் 3:16;மாற் 1:9; லூக் 3:21;)
2) தேவனுடைய ஊழியத்தை செய்கிற ஒருவர், பரிசுத்த ஆவியானவரின் அபிஷேகத்தைப் பெற்றிருக்க வேண்டும். (லூக் 3:22; 4:18; அப் 10:38;) பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தை பெறாத எவருமே பந்தி விசாரணை செய்வதற்கு கூட தகுதி இல்லாதவர்கள். (அப் 6:3)
அப்படியானால் தேவனுடைய ஊழியத்தைச் செய்வதற்கு தகுதி இருக்கிறதா ?
என்பதை சிந்தித்துப் பாருங்கள்.
3) பின்பு, இயேசு சகல பட்டணங்களையும் கிராமங்களையும் சுற்றி நடந்து, ஜெப ஆலயங்களில் உபதேசித்து, ராஜ்யத்தின் சுவிசேஷத்தைப் பிரசங்கித்தார், ஜனங்களுக்கு உண்டாயிருந்த சகல வியாதிகளையும் சகல நோய்களையும் நீக்கி, அவர்களைச் சொஸ்தமாக்கினார்.
(மத்தேயு 9:35)
இன்றைய ஊழியர்கள் தங்களை விஐபிகளாக நினைத்துக் கொண்டு பட்டணங்கள், கிராமங்களையும், இயேசு கிறிஸ்து சுற்றி நடந்து சுவிசேஷத்தை அறிவித்தது போல இவர்கள் அறிவிப்பதில்லை.
ஆனால் எழுப்புதல் வரும் என்று கத்துகிறார்கள். வேதத்தை புரிந்து கொள்ளாத ஜனங்கள் உணர்ச்சிவசப்பட்டு ஆமென் அல்லேலூயா என கோஷமிடுகிறார்கள்.
4) இயேசு கிறிஸ்து
பன்னிரண்டுபேரைத் தெரிந்துகொண்டு, அவர்கள் தம்மோடுகூட இருக்க வேண்டும், பிரசங்கம்பண்ணும்படியாகத் தாம் அவர்களை அனுப்பவும், ஏற்படுத்தினார். (மாற்கு 3:14.)
பிதாவாகிய தேவனால் இயேசு கிறிஸ்து அனுப்பப்பட்டது போல (யோவா 5:36) இயேசு கிறிஸ்துவும் 12 சீஷர்களை தெரிந்து கொண்டு அவர்கள் தம்மோடு இருக்க வேண்டும் சுவிசேஷத்தை அறிவிக்கவும் அவர்களை ஏற்படுத்தினார். பின் நாட்களில் 120 பேர் கொண்ட சீடர்களாக குழுவாக செயல்பட்டார்கள்.(அப் 1:15)
இன்றைக்கு திருச்சபைகளில் சீஷர்கள் உருவாக்கப்பட்டு அனுப்பப்படுகிறார்களா கிறிஸ்துவின் பணிகளுக்காக ? அல்லது மக்களை பயமுறுத்தி, சாபத்தை போட்டு, தங்களுக்கு அடிமைகளாக, மாற்றி விட்டார்களா ?
சபை என்பது தேங்கி நிற்கும் குட்டை அல்ல அது பரவி பாயும் ஆறு என்பதை மனதில் கொள்ள வேண்டும். ஆனாலும் எழுப்புதல் வரும் என்று ஓலமிடுகிறார்கள். ஆட்டுத் தோலை போர்த்திய ஓநாய்கள்.
5) இயேசு கிறிஸ்து அவர்களுக்கு அதிகாரத்தைக் கொடுத்தார். அவர் தம்முடைய பன்னிரண்டு சீஷர்களையும் தம்மிடத்தில் வரவழைத்து, அசுத்த ஆவிகளைத் துரத்தவும், சகல வியாதிகளையும் சகல நோய்களையும் நீக்கவும் அதிகாரங்கொடுத்தார்.
(மத்தேயு 10:1)
பரிசுத்த ஆவியானவர் பவுல் மூலமாக சொல்வது என்னவென்றால்
இப்படியாக, எந்த மனுஷனும் எங்களைக் கிறிஸ்துவின் ஊழியக்காரரென்றும், தேவனுடைய இரகசியங்களின் உக்கிராணக்காரரென்றும் எண்ணிக்கொள்ளக்கடவன்.
(1 கொரி 4:1) அவனவன் பெற்ற வரத்தின்படியே நீங்கள் தேவனுடைய பற்பல கிருபையுள்ள ஈவுகளைப் பகிர்ந்துகொடுக்கும் நல்ல உக்கிராணக்காரர்போல, ஒருவருக்கொருவர் உதவிசெய்யுங்கள்.
(1பேது 4:10)
இயேசு கிறிஸ்து ஒரு தலைமை போதகராக இருந்து தம்முடைய சீஷர்களுக்கு ஆவிக்குரிய அதிகாரங்களை பகிர்ந்து கொடுத்தது போல திருச்சபை தலைமை போதகர்கள் தம்முடைய உடன் ஊழியர்களுக்கு பகிர்ந்து கொடுக்கிறார்களா ?
அல்லது திறமை உள்ளவர்களுக்கு மாத்திரமே வாய்ப்புகள் கொடுக்கப்படுகிறதா ?
அப்படியானால் பலவீனர்களை உருவாக்குவதில் இவர்களுக்கு எந்த ஒரு தரிசனமோ, அக்கறையோ, உதவி செய்யக்கூடிய மனப்பான்மையோ, இல்லை என்பதை உறுதி செய்கிறது.
ஆனால் எழுப்புதலுக்காக ஜெபம், ஒருவன் உயர்த்தப்படுகிறான், இன்னொருவன் தாழ்த்தப்படுகிறான் எப்படி எழுப்புதல் வரும்.
6) இயேசு கிறிஸ்து, பலவீனத்தை சுட்டிக்காட்டி அவர்களை பெலப்படுத்தினார். 12 சீஷர்களும் பலவீனமானவர்களே என்பதை வேதத்தின் துணை கொண்டு அறிய முடியும். தற்கொலை செய்து கொண்ட யூதாஸை தவிர மற்ற சீஷர்களை இயேசு கிறிஸ்து தம்முடைய வார்த்தையினாலே அவர்களை பலப்படுத்தி அவர்களை எருசலேமில் காத்திருக்க சொன்னார். பரிசுத்த ஆவியானவர், உங்களிடம் வருவார் அவர் வரும்பொழுது நீங்கள் பெலன் அடைவீர்களென்று அவர்களை உற்சாகப்படுத்தினார். காத்திருந்தார்கள் பெந்தகோஸ்தே அனுபவத்தை பெற்றுக் கொண்டார்கள். அதன் பின்பு அவர்களுடைய பலவீனத்தை பரிசுத்த ஆவியானவர் வெளிப்படுத்தவில்லை. ஆனால் பேதுரு பற்றி கலாத்தியர் புத்தகத்தில் வாசிக்கிறோம்.
(கலாத்தியர் 2:11,14,13)
மேலும், பேதுரு அந்தியோகியாவுக்கு வந்தபோது, அவன்மேல் குற்றஞ்சுமந்ததினால், நான் முகமுகமாய் அவனோடே எதிர்த்தேன். இப்படி அவர்கள் சுவிசேஷத்தின் சத்தியத்திற்கேற்றபடி சரியாய் நடவாததை நான் கண்டபோது, எல்லாருக்கும் முன்பாக நான் பேதுருவை நோக்கிச் சொன்னது என்னவென்றால்: யூதனாயிருக்கிற நீர் யூதர் முறைமையாக நடவாமல், புறஜாதியார் முறைமையாக நடந்து கொண்டிருக்க, புறஜாதியாரை யூதர் முறைமையாக நடக்கும்படி நீர் எப்படிக் கட்டாயம்பண்ணலாம்?
மற்ற யூதரும் அவனுடனேகூட மாயம்பண்ணினார்கள்; அவர்களுடைய மாயத்தினாலே பர்னபாவும் இழுப்புண்டான்.
தனியாக அழைத்து கேள்விப்படுகிற குற்றச்சாட்டுகளை அவர்களுக்கு சுட்டிக்காட்டி அவர்களை தெளிவான மனப்பான்மைக்கு நடத்துவதற்கு இங்கு அநேக திருச்சபை தலைமை போதகர்களுக்கு தைரியம் குறைவாகவே இருக்கிறது.
அதனால்தான் என்னவோ தெரியவில்லை குற்றம் சாட்டாதீர்கள் குற்றம் சாட்டாதீர்கள் குற்றம் சாட்டாதீர்கள் என்று மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் போல புலம்புகிறார்கள்.
பைபிள் நமக்கு பொய்யாய் ஒருவரையும் குற்றம் சாட்டக் கூடாது என்று தான் கற்றுக் கொடுக்கிறது.
நீங்கள் குற்றம் சாட்டக் கூடாது என்று சொன்னால் பாவத்திலிருந்து மனந் திரும்புங்கள் என்று எப்படி பிரசிங்கிப்பீர்கள் ?
ஒருவனுடைய பாவத்தைச் சொல்லி இதிலிருந்து நீ மனந்திரும்பு என்று சொல்வது குற்றப்படுத்துவதற்கு சமம் தானே ?
ஆகையால் இயேசு கிறிஸ்து அவருடைய குறைவுகளை சொல்லி அவர்களை நிறைவான பாதையிலே நடத்தி 12 யூத கோத்திரத்தார்களையும் நியாயம் தீர்க்கிற சிங்காசனத்தில் அமர்வீர்கள் என்று சொன்னார்.
என்னிடத்தில் ஒரு பாவமும் இல்லை என்று நெஞ்சை நிமிர்த்தி சொல்லக்கூடியவன் ஒருவனும் இல்லை என்றால் இந்த உலகம் என்றைக்கோ அழிந்திருக்கும்.
நீதிமான்கள், அல்லது பரிசுத்தவான்கள் இருக்கிறபடியினாலே இந்த பூமி சுழன்று கொண்டிருக்கிறது. (ஆதி 18:29)
நாம் சிந்திப்போம்.
எழுப்புதல் தேவ சித்தத்தை அறிந்து தேவனுக்கு தன்னை ஒப்புக்கொடுக்கிறவன் மூலமாக உண்டாக கூடியது.
நீதிமான் ஒருவனும் இல்லை என்று நாமே சொல்லி மற்றவர்களையும் பாவத்துக்குள் தள்ளுவது எப்படி எழுப்புதல் வரும்.
மாறநாதா
கிறிஸ்துவின் பணியில் சகோதரன், சிலுவை ராஜா.
Comments